மறவன்
யார் இந்த இசைப்பிரியன்? அவுஸ்திரேலியா மெல்பேர்ணிலும், சிட்னியிலும் நிகழும் அவரது இசை நிகழ்ச்சியை நாம் ஏன் பார்த்து ஆதரவு வழங்க வேண்டும்?
இன்றைய ஈழத்து இளைய தலைமுறையினரிடம் நன்கு பரிச்சயமானவராகவும், இவர் தான் என்று அறியப்படாமலேயே , அவர் இசையமைத்த பல பாடல்களை மக்கள் ரசித்துக் கொண்டாடும் கலைஞன் அவர். இது அவரால் இசையமைக்கப்பட்ட பாடல்களா> எனும் ஆச்சரியத்திற்கும் சொந்தக்காரனாக விளங்கும் பல்துறை வாத்தியக் கலைஞர்தான் இசைப்பிரியன்.
1999, 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி.வன்னியில் தாயகப்பாடல்களில் ஒரு புத்துணர்ச்சியோடு புதிய பாடல்கள் சில பிறக்கின்றன.
ஆனையிறவு வெற்றிக்காக பின்னாளில் மாவீரனான குட்டிக்கண்ணன் பாடிய “சிட்டுக் குருவி மெட்டுப் போட்டு” பாடல் ஒரு கவனயீர்ப்பைப் பெற்றதென்றால், செம்பருத்தி எழுதிய “களத்திலிருந்து அம்மாவுக்குக் கடிதம் எழுதினேன்“ என்ற வசீகரன் பாடிய பாடல் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பின்னாளில் மேஜர் இளந்தீரனாக வீரச்சாவடைந்த போராளியின் குரலில் “கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையைச் சொல்லவா” என்ற பாடல் பாடகர் சிட்டு இல்லாக் குறையை நிரப்புவதாக எண்ண வைத்தது. கூடவே துளசிச் செல்வன் என்ற போராளிக் கவிஞனையும் இனங்காட்டியது.
களத்திலிருந்து அம்மாவிற்கு கடிதம் எழுதினேன் - செம்பருத்தி என ஆரம்பத்தில் அறியப்பட்ட கவிஞர் கலைப்பரிதியின் வரிகளில் உருவான , பாடகர் வசீகரனின் குரலில் வெளியான இசைப்பிரியனின் 3 ஆவது பாடல் தமிழீழ மக்கள் மனங்களை மட்டுமன்றி தமிழீழத் தேசியத் தலைவரையும் அப்போது வயதில் இளையவரான இந்தக் கலைஞன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் பாடலே கலைப்பரிதி , வசீகரனின் முதலாவது பாடலுமாகும்.
இவர் திறமையை அப்போழுதே உணர்ந்து கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர், இசைப்பிரியனை நேரில் அழைத்துப் பாராட்டியது மட்டுமன்றி, தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடாக வன்னிக்குள் அப்போது கிடைப்பதற்கு அரிதான ஒரு "கீபோர்ட்டை" வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இதன் பின்னர், இன்று வரை புதிய மெட்டுக்கள் படைப்பதை ஓயாது தொடர்ந்து கொண்டிருக்கின்றன இசைப்பிரியனின் விரல்கள்.
மிகக் குறுகிய மூல வளங்கள், எரிபொருள் பற்றாக்குறை, வெறும் 3 மணித்தியாலம் மட்டுமே கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட மின்சாரம் இவற்றுக்கு நடுவே Pentium 4 கணினி, warmup ஆகி , ஒலிப்பதிவு செய்வதற்குரிய மென்பொருட்கள் திரையில் தோன்றவே 10-15 நிமிடங்கள் ஆகும். ஆனால் இத்தனை சிரமங்களையும் தன் திறமைக்கான வெற்றிக்கான படிக்கல்லாக மாற்றினார் இசைப்பிரியன்.
அன்று அவர் குறுகிய மூல வளங்களைப் பயன்படுத்தி நிதர்சனம் நிறுவனத்தின் தர்மேந்திரா கலையகத்தில் உருவாக்கிய பல பாடல்களை இன்று Stereo player கேட்கையில் பலரும் வியப்படைவீர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை.
இவரது பெயரினை இறுவட்டுக்களின் முன் பக்கத்தில் பதித்து இசைப்பிரியனின் இசையில் என்ற அடைமொழியுடன், வரலாற்றில் இசையமைப்பாளர் பெயரை முன்னிலைப்படுத்தி தமிழீழத்தில் வெளியான இறுவட்டுக்கள் இவரின் திறமைக்குச் சான்று பகர்கின்றன.
பல புதிய இறுவட்டுக்கள், புதிய இசைப் பரிணாமம், புதிய இளங் கவிஞர்கள் - போராளிக் கவிஞர்கள், புதிய இளம் பாடகர்களுக்கான வாய்ப்புக்கள் இவரது வருகையைத் தொடர்ந்து உருவானது.
தமிழ் சினிமாவின் அதிகளவான பிரபல கலைஞர்கள் பலரும் இவரது இசையில் பாடியிருப்பது இவ் வேளையில் நினைவிற் கொள்ள வேண்டிய சிறப்பம்சம்.
அலைபாடும் பரணி இறுவட்டு, கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் வெளியீடாக ",வரும் பகை திரும்பும்", வெல்லும் வரை செல்வோம், விழி நிமிர்த்திய வீரம், தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எல்லைப் படை வீரர்களின் தியாகத்தைப் பேசுகின்ற தீக்குளித்த நேரம் ,தமிழீழத் தலைநகரின் சிறப்புக்களைப் பேசும்’ முடி சூடும் தலைவாசல்’ , பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவினரின் வெளியீடான’ வாகையின் வேர்கள்’ , ஐபிசி வானொலிக்காக உறவொலி
மாவீரர் பெருமை பாடுகின்ற
கல்லறை தழுவும் கானங்கள், மண்ணுறங்கும் மாவீரம் , ஆழிப்பேரலை நினைவான பாடல்கள், அனுராதபுரத்து அதிரடி இசையமைப்பாளர் செயல்வீரனுடன் இணைந்த ‘தேசத்தின் புயல்கள் பாகம் 03’ , கடற்கரும்புலிகள் பெருமை சொல்லும் பாடல்கள், புதிதாய்ப் பிறக்கின்றோம், விடுதலை நெருப்புக்கள் ,
இப்படி ஏராளமான இறுவட்டுக்களுடன்இறுதியில் முள்ளிவாய்க்கால் மௌனிப்பின் போதுபாதி கலையகத்திலும், மீதிப் பகுதி பங்கருக்குள்ளும் ஒலிப்பதிவு செய்து முழுமையாக நிறைவு செய்யப்படாத வேர்விடும் வீரம் இறுவட்டுடன் இவரது தாயகத்திலிருந்து இவர் ஆற்றிய பணி நிறைவிற்கு வந்தது.
புதிய பாடலாசிரியர்கள், புதிய பாடகர்கள், என்று இளரத்தம் பாய்ச்சப்பட்டு தாயகப்பாடற் களம் புதிய பரிமாணத்தை எட்டியது.
மேற்சொன்ன பாடல்களுக்கான இசையமைப்பாளர் இசைப்பிரியனின் பயணம் இப்படித்தான் தொடங்கியது. அவரது போராட்டப் பயணமும் இசையமைப்பாளன் என்கிற பயணமும் சமகாலத்திலானது. அன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் முடிவுவரை சுமார் நாற்பது இசைப்பேழைகளில் நுாற்றுக்கணக்கான போரெழுச்சிப் பாடல்களை இசையமைத்துத் தந்தவர் இசைப்பிரியன். கூடவே தனது ஒரு காலையும் களத்தில் இழந்தவர்.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னரான காலத்திலும் இசைப்பிரியன் ஓய்ந்துவிடவில்ல. அதன் பின்னரும் 36 இசைத் தொகுப்புக்களில் நுாற்றுக்கணக்கான பாடல்களை எமது தாயக விடுதலைக்காக இசையமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் 900க்கும் அதிகமான தாயகப்பாடல்களை இவர் இசையமைத்திருக்கிறார் என்பது நம்ப முடியாத எண்ணிக்கையே.
இவற்றைவிட சில நுாறு ஈழத்துச் சினிமாப் பாடல்கள், கோயில்களுக்கான பக்திப் பாடல்களுட்பட ஏறத்தாழ 1500 க்கும் மேற்பட்ட பாடல்களையும், அம்மா நலமா , கடலோரக் காற்று, உயிரம்புகள், விடுதலை மூச்சு உள்ளிட்ட முழு நீளத் திரைப்படங்களுக்கும், புலிகளின்குரல் கலையகத்தில் பல வானொலித் தொகுப்புக்கள் , நாடகங்களிற்கான பின்னணி இசை என தொடர்ச்சியாக வீசிக் கொண்டிருக்கிறது இசைப்பிரியன் என்கின்ற நமது ஈழத்து இசைப்புயல்.
தமிழகத்தில் இவர் தங்கியிருந்த காலத்தில் திருமகன் எனும் பெயரிலும், பின்னர் ஐரோப்பாவுக்குப் புலம்பெயர்ந்த பின் மீண்டும் இசைப்பிரியனாகவும் தாயகத் தமிழிசைக்குரிய இவரது பங்களிப்பு புதிய பரிணாமத்துடன் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இசையமைப்பாளர் சிறிகுகன், கண்ணதாசன் மாஸ்டர் (யாழ். நுண்கலைக் கல்லுாரி விரிவுரையாளரான இவர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தில் கைதாகினார்) ஆகியோரின் இளைய சகோதரனான சிறிமயூரன் எனப்படும் இசைப்பிரியன்- பாரம்பரிய இசைக்குடும்பத்திலிருந்து வந்திருந்தவர்.
இசைப்பிரியன் -ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டக் கலைத்தளத்தின் முக்கியமான ஒரு துாண்.
முதன்முதலாக இம்மாதம் அவுஸ்திரேலியாக வருகிறார். பெப்ரவரி 7ஆம் நாள் மெல்பேணிலும், 21ஆம் நாள் சிட்னியிலும் இசைப்பிரியனின் இசையில் இசைநிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. கூடவே எமது தாயகக் கலைஞன் Bhanu octapad உம் கலந்துகொள்கிறார்.