சியாமளா யோகேஸ்வரன்
60000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களாக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த மூத்த குடியினரின் இயற்கையோடு ஒன்றிய இயல்பு வாழ்க்கையானது, அவுஸ்ரேலியாவை ஆக்கிரமித்த ஆங்கிலேயர்களால் சிதைக்கப்பட்டது. மொழி, பண்பாடு, கலாசாரம் என்பவற்றுடன் மூத்த குடிமக்களின் இருப்பையே அழித்து விடுவதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் முயற்சி எடுத்தார்கள் என்பது வரலாற்றில் கறை படிந்ததொரு நிகழ்வாகும். அவுஸ்ரேலியப் பழங்குடி மக்கள் உலகிலேயே மிகத் தொன்மையான இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனித நாகரிகம் ஒன்றைச் சார்ந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் .
மற்றவருடன் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே மொழி கருதப்படுகின்றது என்றாலும் மூத்தகுடியினரின் மொழியானது பண்பாட்டை அறிவூட்டும் கதைகளையும் சடங்குகளையும் சட்டங்களையும் சொல்வனவாக இருந்தன. அத்துடன் இயற்கையுடனும், ஆன்மிகத்துடனும் முன்னோர்களுடனும், பூமியுடனுமான தொடர்பை ஏற்படுத்தும் கருவியாகவும் அவர்களின் மொழி கருதப்பட்டிருக்கின்றது.
கனவுக்கால கதைகள் என்பது இந்தக்குடிமக்களின் பாரம்பரியத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட கதைகளாகவும் அவர்களுக்கே உரித்தானதொன்றாகவும் இருக்கின்றன. இந்தக்கதைகள் உலகம் எப்படி உருவானது மற்றும் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை விளக்குகின்றன. இந்தக்கதைகளின் ஊடாக உலகம் உருவான வரலாறு, சட்டம், ஒழுக்கம், மனிதர் இயற்கை உறவுகள், வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படும் ஆன்மிகக்கருத்துகள் என்பன வாய்வழியாகச் சொல்லப்பட்டன.
குடியேற்றவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு முன்னதாக 250 க்கும் மேற்பட்ட மொழிகளும், 800 க்கும் அதிகமான வட்டார மொழி வழக்குகளும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. எழுத்து வழக்கை விட வாய்மொழி மரபு மூலமே அதிகமான மொழிகள் வழக்கில் இருந்திருக்கின்றன. வரலாறுகள், சட்டங்கள், வழக்கங்கள், நம்பிக்கைகள், கதைகள், பாடல்கள் போன்றன வாய்மொழியாகவே தலைமுறைகளுக்கிடையில் கடத்தப்பட்டிருக்கின்றன.
காலப்போக்கில் பெரும்பாலான மொழிகள் வழக்கினின்றும் அருகிப்போனமைக்கு இதுவும் ஒரு காரணம் என்றாலும் அந்நிய மொழியான ஆங்கிலம் ஆட்சி மொழியானமையே பூர்வகுடிகளின் மொழிகள் வழக்கொழிந்து போவதற்கான முக்கியமான காரணமாயிருந்திருக்கக் கூடும். Yolŋu Matha ( யோல்ஙு மாதா), Pitjantjatjara( பிட்ஜன்ட்ஜட்ஜரா), Arrernte (அர்ரெண்டே), Wiradjuri (விரட்ஜுரி), Noongar(நூங்கார்) Gamilaraay (கமிலராய்) ஆகியன பூர்வகுடிமக்கள் பேசிய சில மொழிகளின் பெயர்களாகும்,
உலகின் பழமையான கலை வடிவங்களில் ஒன்றான பாறை ஓவியங்கள், கல் செதுக்கல்கள் மற்றும் உடல் ஓவியங்கள் மூலமும் மூத்த குடிமக்களின் வரலாறு பதிவாக்கப்பட்டிக்கின்றது. இசை, நடனம், கதையாக்கம் ஆகியவற்றின் மூலம் அவர்களின் கலாசாரம் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்கின்றது.
கனவுக்காலக்கதைகளும் நிலத்தின் வரைபடங்களும் புள்ளி ஓவியம் (Dot Painting) எனப்படும் ஒவியத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது
தாம் வாழும் பூமியுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டவர்களாகப் பூர்வ குடிமக்கள் காணப்பட்டிருக்கின்றனர். வாழ்கின்ற நிலத்தை ஒரு சொத்தாகக் கருதாமல் உயிருள்ளதொன்றாகவே மதித்துப் போற்றியிருக்கின்றார்கள். அவர்கள் பேசிய மொழிகள் யாவும் குறிப்பிட்ட நிலப்பகுதியுடனும் அதன் இயல்புடனும் தொடர்புடையதாகவே காணப்படுகின்றன. நிலமானது மூதாதையர்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் வாழ்கின்ற மக்களுடன் பின்னிப்பிணைந்திருப்பதாகவும் கருதியதால் நிலத்துக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை உயர்வாகவே காணப்படுகின்றது. அதனால் இயற்கையுடனும், நிலத்துடனும் ஒன்றிணைந்ததாகவே அவர்களின் வாழ்க்கை முறையும் அமைந்திருந்தது.
இயற்கையையும், சுற்றுச்சூழலையும் சேதப்படுத்தாத பழங்குடியினரின் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உணவு சேகரிப்புத் தன்மை போன்றன பருவகாலத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பூர்வகுடிகள் கொண்டிருந்தமையால், இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து தமக்குத் தேவையான உணவையோ மருத்துவ வசதிகளையோ தாம் வாழும் சூழலிருந்து பெற்று எளிமையான வாழ்வை மேற்கொண்டு வந்திருந்தனர்.
அவர்களின் சமூகக் கட்டமைப்பானது உறுதியாகக் காணப்பட்டிருந்ததுடன் ஒற்றுமையைப் பேணும் வகையிலும் அமைந்திருந்தது. குடும்ப உறவுகள் பரந்தனவாகவும், உறவுகளுக்கிடையில் நெருக்கத்தைப் பேணும் வகையிலும் காணப்பட்டிருந்தன.
அவுஸ்ரேலியப்பழங்குடியினரின் கலாசாரமும் தமிழ் கலாசாரமும் உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான கலாசாரங்களாகும். உணவு மற்றும் மற்றைய வளங்களைத் தம்மிடையே பகிர்ந்து கொள்ளுதல், தனிநபர் வாழ்க்கையை விடச் சமூக நலனுக்கு முக்கியத்துவம் அளித்தல், மூத்தவர்களை அறிவின் பாதுகாவலர்களாக மதித்தல் போன்ற மூத்த குடிமக்களின் வாழ்க்கை முறைமை தமிழர்களின் பண்பாடு போன்றே காணப்பட்டன. அத்துடன் இயற்கை, மொழி, ஆன்மிகம் மற்றும் சமூக ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையானது இரண்டு கலாசாரங்களுக்கும் பொதுவான அம்சங்களாகும்.
திட்டமிட்ட இன அழிப்பை குடியேற்றவாதிகள் மேற்கொண்ட போது, பழங்குடியின மக்கள் தம் சொந்த மொழியில் பேசுவது தடுக்கப்பட்டது. பாடசாலையிலோ அல்லது வேறு கல்விசார் பொது இடங்களிலோ தம் தாய்மொழியைப் பேசிய குழந்தைகள் தண்டிக்கப்பட்டார்கள். இதனால் பல மொழிகள் இப்போது அழிந்து விட்டன அல்லது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்பது வருத்தத்தைத் தருவதொன்றாகும்.
மூத்தகுடிமக்களின் புனித இடங்கள் அழிக்கப்பட்டன அல்லது அணுகுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பாரம்பரியச் சடங்குகள், விழாக்கள் மற்றும் கதைகள் அடுத்த சந்ததியினருக்குக் கடத்தப்பட முடியாமற் போயின. மொழி மட்டுமல்லாமல் இயற்கையைப் பற்றிய சிறந்த அறிவைக் கொண்டிருந்த பழங்குடியினரின் மரபுகளும், வாய்மொழி வரலாறுகளும் வெளியுலகத்துக்குத் தெரிய வராமற் போய் விட்டிருப்பது நிச்சயமாக மாபெரும் இழப்பாகும்.
குடியேற்றவாதிகளின் அராஜகமான போக்கால், பழங்குடியினர் தமது முன்னோர் வாழ்ந்த நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதுடன் அவர்களின் ஆன்மிக உறவு பாதிக்கப்பட்டதால் உளரீதியான பாதிப்புக்கும் உள்ளானார்கள். ஒன்று கூடி வாழ்ந்த சமூகங்கள் உடைக்கப்பட்டதுடன், குடும்ப உறுப்பினர்களும் பிரிக்கப்பட்டதால் பேசி வந்த மொழியும், பேணிக்காத்த கலாசாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. திருடப்பட்ட தலைமுறைகள் தாம் பேணி வந்த மொழி மற்றும் கலாசாரத்திலிருந்து பிரிக்கப்பட்டனர்.
இங்கு திருடப்பட்ட தலைமுறை எனப்படுவது குழந்தைகள் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அழைத்து செல்லப்பட்டு அரசு விடுதிகள் மற்றும் வெள்ளையினக் குடும்பங்களிடம் வளர்க்கப்பட்டதைக் குறிப்பதாகும். இந்நிகழ்வுகள் தலைமுறைகளைத் தாண்டிய நிரந்தரமான இழப்புகளை மட்டுமல்லாமல் காலத்தால் ஆற்ற முடியாத மனவலியையும் கொடுத்திருப்பதை மறுக்க முடியாது.
ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பானது மூத்தகுடியினரின் கல்வி, மனநலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்லாமல் பாரம்பரியமானதும் தனித்துவம் மிக்கதுமான பழங்குடியினரின் மொழி மற்றும் கலாசாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. மொத்தத்தில் காலனித்துவக் குடியேற்றம் ஆதி குடியினரின் வாழ்க்கையில் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை இலகுவில் மறுத்து விட முடியாது.
இழப்புக்களைக் கடந்து தமது அடையாளத்தை மீட்டெடுக்க பழங்குடியினர் போராடி வருகின்றனர். அருகிப் போய்க் கொண்டிருக்கும் மொழி மற்றும் கலாசாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள், நல்லிணக்கம் மற்றும் சமத்துவமான எதிர்காலத்திற்கு மிகவும் இன்றியமையாதவையாகும். மொழி மீட்புத் திட்டங்கள் மூலம், பழங்குடியினரின் மொழி தற்போதைய தலைமுறையினருக்கு மீளக் கற்பிக்கப்படுகின்றது.
அவர்களின் பாரம்பரிய வழக்கங்கள், நடனங்கள் போன்றனவற்றுக்கு மீள உயிர் கொடுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பாடசாலையிலும் மற்றைய பொது இடங்களிலும் பழங்குடியினரின் கலாசாரம் அங்கீகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றது.
இந் நடவடிக்கைகளின் மூலம் இழந்தவற்றில் ஒரு சிலவற்றை மீட்டெடுக்க முடியுமாயினும், உலகின் உயர்ந்த நாகரிகமொன்றானது ஆங்கிலேயர்களின் குடியேற்றத்தின் மூலம் தன் சுயத்தை இழந்து விட்டிருக்கின்றது என்பது பேரவலமாகும்.