சிங்களத் தரப்பிலிருந்து, தமிழ்பேசும் மக்களுடைய உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் பொதுவெளியில் குரல் கொடுத்து வந்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன (வயது- 81) (Wikramabahu Karunaratne 1943 – 2024) மறைந்து விட்டார். இலங்கைத்தீவை நல்லதொரு அமைதிப் பிராந்தியமாகக் கனவு கண்டவர் விக்கிரமபாகு கருணாரத்ன. இனவாதத்தையும் வர்க்க வேறுபாடுகளையும் நீக்கி விட்டால், அது இயல்பாகவே அமைதிக்குத் திரும்பி விடும். அதற்குப் பிறகு அது தன்னெழுச்சியாகத் தனக்குரிய வளர்ச்சியை நோக்கி விரைவாக மீண்டெழும். தென்னாசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் இலங்கை மதிப்பும் பொலிவுமுள்ள நாடாக மிளரும் என்பது விக்கரமபாகுவின் நம்பிக்கையாக இருந்தது.
உண்மையான இலங்கையர் ஒருவர் விரும்பக்கூடிய, நியாயமான விருப்பங்களும் கனவுகளுமே விக்கிரமபாகு கருணாரத்னவினுடையவை. அவை எளிய கனவுகள்தான். ஆனால் மகத்தானவை. சக மனிதர்களை மதிக்கின்ற, நேசிக்கின்ற பண்பின் அடிப்படையிலானவை. பிறருடைய உரிமைகளைப் பற்றிய புரிதலைக் கொண்டவை. அதனால் அவை மாண்பைக் கொண்ட, அழகான, நியாயமான, அவசியமான, பெறுமதிக்குரிய கனவுகளாகவும் விருப்பங்களாகவும் இருந்தன என்பதால் அவை உலகளாவிய தன்மையைக் கொண்டதாகின.
ஆனால், அவருடைய கனவும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறுவதற்கு முன்பாக அவர் மறைந்து விட்டார். தேசத்தின் எதிர்காலத்தைப்பற்றிய நியாயமான, எளிய, பொதுமைப் பண்புடைய கனவை நிறைவேற்றுவதில் உள்ள இடர்ப்பாடுகளே விக்கிரமபாகு கருணாரத்னவின் தீராத் துயரமாக இருந்தது. இலங்கையின் துயரமும் அதுதான். மெய்யாகவே இலங்கைத்தீவை நேசிப்போரின் துயரமும் அதுதான். ஆகவே நிறைவேறாத நியாயமான கனவுகளின் நாயகனாகவே, எதிர்பார்ப்பாளராகவே விக்கிரமபாகு விடைபெற்றிருக்கிறார் என்றால், அவரை இலங்கைத்தீவு தோற்கடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். விக்கிரமபாகு கருணாரத்னக்களைப்போன்றோரைத் தோற்கடிப்பதென்பது இலங்கைத்தீவு தன்னைத் தானே தோற்கடிப்பதாகவும் இலங்கையர் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே தோற்கடிப்பதாகவுமே அமையும்.
விக்கிரமபாகு கருணாரத்னவினுடைய மறைவை எளிதில் யாரும் கடந்து செல்ல முடியாது. அப்படி அதை எளிதிற் கடந்து செல்லவும் கூடாது. அப்படிச் செய்தால் மீண்டும் தவறுகளும் பின்னடைவும் ஏற்பட்டே தீரும். அதை நாம் சந்தித்தே ஆக வேண்டியிருக்கும். ஆகவே, அவருக்கான – அவருடைய மறைவுக்கான உயர்ந்த மதிப்பை வழங்க வேண்டும். அதற்கு, அவருடைய வாழ்க்கையை, அவருடைய இலட்சிய நோக்கைப் புரிந்து கொண்டு செயற்படுவதே அவருக்கும் அவருடைய மறைவுக்கும் செலுத்துகின்ற மதிப்பாக இருக்கும். அது வேறொன்றுமல்ல. இலங்கையர்களாகிய நமக்கு நாமே அளிக்கின்ற மதிப்பும் நம்மை ஒளியூட்டிக் கொள்ளுகின்ற முயற்சியுமாகும். ஆம், அது நம்மை விடுவித்துக் கொள்கின்ற சுதந்திர வெளிக்கான பயணமாகும்.
இலங்கைத் தீவை மனிதர்கள் வாழ வேண்டிய தேசமாக உணர்ந்திருந்தார் விக்கிரமபாகு கருணாரத்ன. மனிதர்கள் வாழ வேண்டிய தேசமென்றால், அங்கே அன்பும் கருணையும் சக மனிதர் மீதான நேசமும் சமத்துவப்பண்பாடும் ஜனநாயக அடிப்படைகளும் பேணப்பட வேண்டும். அதிலில்லாதபோது அங்கே நம்பிக்கையீனங்களும் பதற்றமும் வன்முறையும் தலையெடுக்கும். இலங்கையில் நிகழ்ந்தது அதுதான். ஒருவரையொருவர் சந்தேகிப்பதும் ஒருவரை ஒருவர் தாக்குவதும் ஒருவரையொருவர் வெறிகொண்டு தோற்கடிக்கும் முயற்சிகளுமே நடந்தன. இன்னும் இந்தப் பழியுணர்ச்சி தீரவில்லை. இதுதான் ஒரு சின்னஞ்சிறிய தீவைப் பெரும்போரில் தள்ளியது. பதிலாக வளங்கள் நிறைந்த அழகிய தேசம் பிச்சைப் பாத்திரமாகியது.
ஆனால், இதைக்குறித்த துக்கமோ வெட்கமோ கவலையோ இலங்கையின் ஆட்சியாளர்களுக்கில்லை. ஆட்சியாளர்களை அரங்கேற்றும் மக்களுக்கும் இல்லை. ஆட்சியாளர்களுக்கு எதிர்த்தரப்பில் உள்ளோரும் தவிர்க்க முடியாமல் இனவாதச் சுழலுக்குள்தான் சிக்குண்டிருக்கிறார்கள். இதுதான் இலங்கையின் மிகப் பெரிய அவலம்.
இதைக்குறித்த துக்கமும் சிங்களச் சமூகத்தின் நீதியற்ற நடத்தை (Behavior) யை, நடவடிக்கையை (Action) குறித்த வெட்கமும் குற்றவுணர்ச்சியும் விக்கிரமபாகுவுக்கு இருந்தது. அதற்கான பிராயச் சித்தத்தைக் காண்பதற்காக அவர் தன்னுடைய இறுதிக்காலம் வரையில் பல வழிகளிலும் பாடுபட்டார். அப்படிச் செய்வது தன்னுடைய கடமை, பொறுப்புணர்வு எனக் கருதினார். இவ்வளவுக்கும் அவர் ஒருபோதும் இனவெறுப்பின் அடிப்படையிலான பாரபட்சத்தையோ குற்றங்களையோ இழைத்தவருமில்லை. அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவானவரும் கிடையாது. நடைபெற்ற யுத்தத்திற்கு தன்னால் நிதிப்பங்களிப்பைச் செய்ய முடியாதென்று அவர் மேல்மாகாண சபையில் ஆற்றிய உரை நினைவுக்குரியது.
அவருடைய நீதியுணர்ச்சியே அவ்வாறு அவரைச் சிந்திக்கத் தூண்டியது. இங்கே நீதியுணர்ச்சிக்கு, மாண்புக்கு இடமில்லை அல்லவா!
இதனால் சிங்களச் சமூகத்துக்குள் விக்கிரமபாகுவை விலக்கி வைக்கும் போக்கே காணப்பட்டது. அவர் தன்னுடைய சமூகத்திற்குள்ளேயே சந்தித்த நெருக்கடிகளும் சவால்களும் அதிகமாகும். ஆனாலும் அதையிட்டு அவர் வருந்தியதோ தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதோ இல்லை. (இத்தகைய போக்குத் தமிழ்ச்சமூகத்துக்குள்ளும் உண்டு. அதாவது அந்தச் சமூக நிலையைக் கடந்து பொது நிலையில் – பன்மைத்துவ அடிப்படையில் செயற்படுவோரை விலக்கி வைக்கும் போக்கு இது) இனவாதத்தில் ஊறிப்போயிருக்கும் இலங்கையில் இது அபூர்வம். அதிலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலில்.
இதனாலேயே 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கருணாரத்தின போட்டியிட்டு 7,055 வாக்குகள் பெற வேண்டியிருந்தது. காரணம், அவருடைய அரசியற் சிறப்பையும் அதன் பெறுமதியையும் அதன் மாண்பையும் சிங்களத்தரப்புப் பெரிதாகக் கண்டு கொள்ளவும் இல்லை. கொண்டாடவும் இல்லை. அப்படிக் கொண்டாடப்பட்டிருந்தால் அவர் ஒரு வெற்றியடைந்த அரசியற் தலைவராக இருந்திருப்பார். அவரைப்போன்றோர் வெற்றியடைந்திருப்பர். அவருடைய அரசியல் இலங்கையில் மாற்றுப் பண்பாடொன்றை உருவாக்கியிருக்கும். இலங்கைத் தீவே இன்று வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும்.
இலங்கைத்தீவு விக்கிரமபாகு கருணாரத்னவைப்போன்ற இடதுசாரிகளைத் தோற்கடித்து , இரத்தம் சிந்த வைக்கும் இனவாதிகளை வளர்த்த பெருமையைக் கொண்டதல்லவா!
ஆனால் தமிழர்கள் விக்கிரமபாகுவை, அவருடைய நீதியுணர்ச்சியை, நியாயத்தன்மையைக் கொண்டாடினார்கள். தமிழர்களிடத்திலே விக்கிரமபாகு கருணாரத்தினவுக்குப் பெரும் மதிப்புண்டு. இந்த அஞ்சலிக்குறிப்புக்கூட அத்தகையை அடிப்படையில்தான் எழுதப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் தரப்பிலிருந்து சிந்தப்படும் கண்ணீரையும் அவர்கள் உவந்தளித்த மலர்களையும் விக்கிரமபாகு கருணாரத்ன அஞ்சலியாகப் பெற்றுக் கொண்டார். அதுபோதும் அவருக்கு. அவருடைய கண்ணியத்துக்கு அவை நிறைவளிக்கும். ஆனால், விக்கிரமபாகுவைப்போலச் சிந்திக்கும் தமிழர்களை அது ஏற்றுக் கொள்ளாது. அப்படியான தமிழர்களுக்கு சிங்களத் தரப்பில் மதிப்பிருக்கும். ஆச்சரியமூட்டும் இந்த யதார்த்தத்தை – இந்த உண்மையை நாம் ஆராய வேண்டும்.
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின, இலங்கையின் தென்-கிழக்கே லுணுகலை என்ற இடத்தில் பிறந்தவர். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். ஆரம்பக் கல்வியை மத்துகமையில் கற்ற பின்னர், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று மின்பொறியியலில் சிறப்புப் பட்டம் பெற்ற விக்கிரமநாயக்க, பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே அரசியற் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்.
1962 இல் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்த விக்கிரமபாகு, 1972 இல் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், 1972 ஆம் ஆண்டில் சமசமாசக் கட்சி அன்றைய ஆளும் கட்சியாக இருந்த இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் குடியரசு அரசியலமைப்புக்கும் ஆதரவளித்ததை எதிர்த்துக் கட்சித் தலைமையுடன் முரண்பட்டதால் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
பின்னர் பொதுநலவாயப் புலமைப் பரிசில் பெற்று கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் சென்று அங்கு, 1970 இல் கலாநிதிப் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்த விக்கிரமபாகு,பல்கலைக்கழகப் பணியைத் தொடர்ந்தார். ஆனால், அது அவருக்கு இலகுவானதாக இருக்கவில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடு அதற்கு நெருக்கடியானது.
1977 ஆம் ஆண்டில் வாசுதேவ நாணயக்கார போன்ற முன்னாள் கட்சி அதிருப்தியாளர்களுடன் இணைந்து நவ சமசமாஜக் கட்சி (புதிய சமூக சமத்துவக் கட்சி) என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார் விக்கிரமபாகு.
இந்தக் காலகட்டத்தில் (1978 இல்) கண்டியில் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார் விக்கிரமபாகு. சில மாதங்களில் அவர் விடுவிக்கப்பட்டாலும் கண்காணிப்புத் தொடர்ந்தது. பேராதனைப் பல்கலைக்கழகம் அவரைப் பணியிலிருந்து இடைநிறுத்தியது. ஆனால், அமைச்சரவைத் தீர்மானத்தை அடுத்து சில மாதங்களில் அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.
ஆனாலும் அது நீடிக்கவில்லை. 1982 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தேர்தலை நடத்தாமல், சர்வஜன வாக்கெடுப்பைச் செய்ய முயற்சித்தபோது தேர்தலை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக மீண்டும் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டார். பின் வந்த நீண்ட காலத்தில் அவர் முழுநேர அரசியற் செயற்பாட்டாளராக இயங்கினார்.
1983 இல் தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட இனவன்முறையை அடுத்து இலங்கை அரசு நவ சமசமாசக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைத் தடை செய்தது. இதனை அடுத்து கருணாரத்ன, வாசுதேவ நாணயக்கார, ரோகண விஜயவீர போன்ற இடதுசாரித் தலைவர்கள் தலைமறைவாயினர். 1985 ஆம் ஆண்டில் இக்கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்டதோடு மீண்டும் வெளியரங்குங்கு வந்தார் விக்கிரமபாகு கருணாரத்ன.
1987 லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற புதிய இடதுசாரி அரசியல் கூட்டணியை ஆரம்பித்தார் கருணாரத்ன. 1988 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஒசி அபேகுணசேகராவுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தார். இதன்போது டிசம்பர் 02 இல் கொழும்புக்கு அருகிலுள்ள கடவத்தையில் நடத்தப்பட்ட தேர்தல் கூட்டம் ஒன்றை மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கியதில் கருணாரத்தின காயமடைந்தார். 1987-89 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது பல இடதுசாரித் தலைவர்கள் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டனர்.
1998 ஆம் ஆம் ஆண்டில் நவசமாசக் கட்சி வேறு சில இடதுசாரி சிறு கட்சிகளுடன் இணைந்து இடது விடுதலை முன்னணி (NLF) என்ற புதிய கூட்டணியை ஆரம்பித்தது. 2004 ஆம் ஆண்டு முதல் இக்கூட்டமைப்பு இடது முன்னணி என்ற பெயரில் இயங்கி வருகின்றது. இதில் கருணாரத்ன முதன்மைப்பாத்திரமேற்றுச் செயற்பட்டார்.
2001 ஆம் ஆண்டில் மீண்டும் கருணாரத்னவை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவியில் அமர்த்த அன்றைய உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பல்கலைக்கழக அதிகாரிகளுக்குக் கட்டளை அனுப்பியிருந்தாலும், அது நிறைவேற்றப்படவில்லை. இறுதியில் 2015 இல் மைத்திரிபால சிறிசேன அவரை மீண்டும் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியில் அமர்த்தினார். கூடவே 1982 ஆம் ஆண்டு முதலான சம்பள நிலுவைப் பணத்தையும் செலுத்த உத்தரவிட்டார்.
சிறந்த கல்வியாளர், சீரிய அரசியற் சிந்தனையாளர், ஓய்வற்ற போராளி, சிறந்த மனிதர் எனத் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்ட விக்கிரமபாகு கருணாரத்னவின் மறைவு வரலாற்றில் நிரப்பக் கடினமான ஒரு வெற்றிடமே. அதிலும் விஷம் நிரம்பிய இனவாதத்தைக் கீழிறக்க வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் விக்கிரமபாகு கருணாரத்ன மறைந்திருப்பது இலங்கைக்குப் பேரிழப்பாகும்.