AfricaAmericaArticlesAsiaCanadaCommunityEuropeFranceIndiaitalyLatin AmericaMain NewsMiddle EastUKWorld

ஆட்கொல்லிநோய் அறுவடைசெய்த அதிர்ச்சிதரும் நன்மைகள்


பொன்ராஜ் தங்கமணி

கொரோனா பற்றி செய்திகளையும் பதற்றங்களையும் ஏன் வதந்திகளையும்தான் இந்த உலகம் கடந்த சில வாரங்களாக சாப்பிட்டு செமித்து பிறகு மீண்டும் சாப்பிட்டபடியே இருக்கிறது. கொரோனா மனித குலத்தின் மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அத்தகையது.

உணவுச் சங்கிலியின்  உயரத்துக்குச் சென்ற மனிதன் மிகக் கம்பீரத்துடனும் கர்வத்துடனும் மட்டுமல்லாமல் அடக்கு முறை எண்ணத்தோடும் இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் வளங்கள் மீதும் தனது ஆளுமையை – வெவ்வேறு வகைகளில் – ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செலுத்திவருகிறான்.

சூழலியல் சார்ந்த வாழ்க்கையை விட்டு மனிதன் அகந்தை சார்ந்த வாழ்க்கைக்கு மாறி சில நூறு வருடங்கள் ஆகிவிட்டன. மனித குலவரலாற்றில் அவ்வப்போதுவரும் பரந்துபட்ட பஞ்சம்,பட்டினி,போர் போன்ற காரணிகளைத் தவிர்த்து பெரும்பாலும் பெரிய இன்னலேதும் இல்லாமல் மனிதனின் வாழ்க்கை தொடர்ந்து வருகிறது.  

இருந்தாலும், அவ்வப்போது வைரஸ் என்னும் நுண்ணிய நோய்க்கிருமி தன் வலிமையை மனிதனிடம் காட்டிக் கொண்டுதானிருக்கிறது. எபோலா,எச்ஐவி, சார்ஸ், டெங்கு, மெர்ஸ் என மனிதனை அச்சுறுத்திய வைரஸ்களில் தற்போது கொரோனாவும் சேர்ந்துள்ளது. அந்தவகையில் கடந்த நூறாண்டுகளில்,மனிதனின் செயல்பாடுகளை உலகளாவிய வகையில் முடக்கிய வைரஸ் என்று பார்த்தால் அது கொரோனாதான்.  

மனிதச் செயல்பாடுகளினால் இந்தப் புவியில் ‘கார்பன்’ வெளியீடு தொடர்ந்து அதிகரித்து வருவதும் அதன் விளைவாக புவி வெப்பமயமாதல் நடைபெறுவதும் நாம் அறிந்ததே. இதைக் குறைப்பதற்கு ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் சார்ந்த அமைப்புகளும் வெவ்வேறு வகைகளில் முயன்று வருகின்றன. இவ்வாறனதொரு நிலையில்,மனிதன் பூமியில் ஏற்படுத்துகின்ற வலிந்த மாற்றங்களையும் தாக்கங்களையும் கொரோனா குறைத்திருக்கிறது. அல்லது கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

நாம் நம் தேவைகளுக்காக பயன்படுத்தும் மின்சாரத்திலிருந்து போக்குவரத்து, பயன்படுத்தும் பொருட்கள் என்று ஒவ்வொரு நிலையிலும் கரிம வெளியீடு நிறைந்துள்ளது. தற்போது இவை அனைத்தும் ஒரு தேக்க நிலையை அடைந்துள்ள காரணத்தால் கரிமத்தின் வெளியீடு இயல்பான நிலையைவிட 5.5-5.7 சதவீதம் வரைகுறைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பின் தலைமைச் செயலர் பீட்டரிடல்லஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் செய்தி நமக்கு தற்காலிகமாக கிடைக்கும் நல்லசெய்திதானே தவிர இதனால் வானிலை மாற்றத்தை உடனடியாக மாற்றும் அளவுக்கு பங்களிக்க முடியாது எனவும் அவர் சேர்த்தே கூறுகிறார். இதேக் கருத்தை சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையமும் எதிரொலிக்கிறது.

இப்பொழுது குறைந்திருக்கும் கரிம வெளியீட்டின் அளவு என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மிகப்பெருந் தொகையாகும் என உலகளாவிய கரிம செயல்திட்ட குழு தெரிவிக்கிறது.

ஆகவே,கொரோனாவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மாற்றம் தற்காலிகமானது எனப் பார்க்கப்பட்டாலும் இந்த மாற்றத்தால் இந்தியா,சீனா போன்ற நாடுகளின் பெருநகரங்களில் சில நாட்களாக நல்ல காற்றை சுவாசிக்க 

முடிகிறது.  இதற்கு முக்கிய காரணம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலக்கரி சார்ந்த உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் குறைவான புகையும்,சாலைகளில் போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகையும் குறைந்ததுதான்.  

சுத்தமான காற்று மட்டுமன்றி,தண்ணீரின் மாசுபடும் அளவும் குறைந்து வருகிறது.  இந்தியாவின் கங்கை நதியிலிருந்து வெனிஸ் நகரத்தின் புகழ்பெற்ற கால்வாய் வரைதண்ணீர் சுத்தமாகும் புகைப்படங்கள் கடந்தசிலநாட்களாகவெளிவந்தவண்ணம் உள்ளன.  

இன்னொருபுறம் –

மனிதனின் செயற்பாட்டு வேகம் குறைந்ததினால் மிருகங்கள் சற்றே இலகுவாக நடமாட ஆரம்பித்திருக்கிறன. கேரளாவில் மலபார் புனுகுப்பூனையும், ஜப்பானில் மான்களும்,சிங்கப்பூரில் நீர் நாய்களும் தங்கள் முகங்களை இப்போதுவெளியேகாட்டியுள்ளன. இந்தியாவின் கரித்துவாரின் தெருக்களைகூட்டம் கூட்டமாக மான்கள் கடந்து செல்கின்றன. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவின் மையப் பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாடுகின்றன. வேல்ஸ் நகரத்தில் மலை ஆடுகள் உலாவருகின்றன.  ரோண்டாவின் தெருக்களில் மயில்களும்,சான்டியாகோவில் பூமாவகைப் பூனைகளும் காட்சியளிக்கின்றன. இவற்றைப்பார்க்கும்,மக்களுக்கு இவை இத்தனைவருடங்கள் எங்கே இருந்தன என்ற ஆச்சரியமும் ஐயமும் எழுகிறது.

இவை அனைத்தும் இயற்கையை விரும்பும் மனிதர்களுக்கு ஒருவிதமன மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்த மகிழ்ச்சிதொடர வேண்டுமாயின்,இயற்கை மீதான மனிதனின் தாக்கம் குறையவேண்டும். நம்முடைய தேவைகள் என்ன,அந்தத் தேவைகள் ஆடம்பரமானதா அத்தியாவசியமானதா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள சரியான தருணம் இப்போது நமக்கு வாய்த்திருக்கிறது. நம் தேவைகளைக் குறைத்து நாம் நுகரும் பொருட்களைக் குறைக்கும்போது இயல்பாகவே அதை உற்பத்திசெய்யும் தேவை குறைந்து இயற்கைமீதான நம் தாக்கம் குறையும்.

இதற்கு மாறாக கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் என்கிற பெயரில் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக அதிக நுகர்பொருள் கலாச்சாரத்திற்குள் உட்புகாமல் இருப்பதற்கு முயற்சிகள் எடுப்போம்.

இதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களின் தனிநபர் கரிம வெளியீட்டு தொகைமிகவும் அதிகம். உலக அளவில் ஒருசராசரி ஆஸ்திரேலியரின் கரிம வெளியீட்டு தொகை ஒரு இந்தியரைவிட ஒன்பது மடங்கும்,ஒருஉகாண்டாநாட்டவரைவிட 154 மடங்கும் அதிகமாகும். ஆஸ்திரேலியாபோன்றபணக்காரநாட்டில் வாழும் மக்களின் நுகர்பொருள் கலாச்சாரம் என்பதுபூமிக்குஒருபுற்றுநோய் போன்றதுஎன்பது இதன் மூலம் புரிந்து இருக்கும்.  

இயற்கை மீதான நம்முடைய தாக்கம் குறையும்போது,இந்தப்புவி இயல்பாகவே மனிதனுக்கு மட்டுமன்றிமற்ற உயிரினங்களும் வாழ்வதற்குஏ துவாக அமையும்.  இருப்பதை பகிர்ந்து உண்டு,பல உயிர்களைக் காத்து வாழ்தல் அறத்தில் சிறந்த அறம் என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.  


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை – குறள் 322

கொரோனாகாலத்தில் நாம் படிக்கும் சிறந்தபாடமாக இது அமையட்டும். 

Related Articles

Back to top button