மெல்போர்ன் நடனாலயா கலைக் கல்லூரியின் இயக்குநர் ஸ்ரீமதி மீனா இளங்குமரனின் மாணவிகளான நான்கு சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் (Tony Sheumack Centre) அரங்கில் சிறப்பாக 21 March 2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அரங்கேறியது.
தர்மசீலன், கலாநிதி நித்யா தர்மசீலன் தம்பதிகளின் புதல்விகளான சுவேதா, சுருதி, சுரபி, சுவாதி ஆகியோர் ஏற்கனவே விக்டோரியா வாழ் தமிழர்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர்கள்.
மூத்தவரான சுவேதாவிற்குப் பின்னர் மற்றைய மூவரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் ஆதலால் Triplets என்று அறியப்பட்டவர்கள்.
பெற்றோரின் தமிழ் மற்றும் கலை உணர்வு பிள்ளைகளை சிறந்த வழியில் நெறிப்படுத்தி அவையத்தில் முந்தியிருக்கச் செய்தமையை அரங்கேற்ற நிகழ்வில் நேரில் கண்டு அரங்கம் ஆசிர்வதித்து மகிழ்ந்தது.
உலகின் எந்த மூலைக்குப் புலம்பெயர்ந்தாலும் நல்லூர் முருகனை மறக்காது வாழ்பவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள்.
அந்த வகையில் தர்மசீலன் தம்பதிகளின் விருப்பமாக நல்லூர் முருகன் ஆலய முன்றலைத் தன் கைவண்ணம் மூலமாகக் கண்முன்னே கொண்டு வந்திருந்தார் திரு ராஜா இளங்குமரன்.
இந்தப் பரதநாட்டிய நிகழ்வின் சிறப்பம்சம் என்னவென்றால் பாடப்பட்ட அத்தனை பாடல்களும் தமிழிசைப் பாடல்கள்,
புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பித்த நிகழ்வு, "அலங்கார நல்லூரா" என்று அன்னை நித்யா தர்மசீலன் இயற்றிய பாடலுடன் தொடர்ந்தது.
வாய்ப்பாட்டு பாடி அரங்கேற்றதைத் தன் குரல்வளத்தால் மெருகேற்றிய ஸ்ரீ அகிலன் சிவானந்தன் மேற்படி பாடலுக்கு இசையமைத்திருந்தார்.
தொடர்ந்து "வேலணைக் காண்போம் வாரீர்" என்ற வர்ணம், "செல்லக்கனி வாயால்", "கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி", தில்லானா, "வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்" என்று அத்தனையும் முருகன் பாடல்கள்.
மங்களம் ஏதாவது வித்தியாசமாக வரும் என்று எதிர்பார்த்தால் அதுவும் கந்தசஷ்டி கவசத்தில் வருகின்ற இறுதி அடிகளாக வந்து வியப்பைத் தந்தது.
அரங்கேற்ற நிகழ்வை மெருகேற்றிய மற்றைய பக்கவாத்தியக் கலைஞர்கள்.
மிருதங்கம்: ஸ்ரீ சதீபன் இளங்குமரன்
வயலின்: ஸ்ரீ சுரேஷ் பாபு
புல்லாங்குழல்: ஸ்ரீ சுப்பிரமண்ய சாஸ்திரி
நட்டுவாங்கம்: ஸ்ரீ பவன் இளங்குமரன்
நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் நடன அமைப்பு: குமாரி ருக்ஷிகா இளங்குமரன்
கணேஷ் மணிவண்ணன்