Alice in wonderland எனும் நாவலில் வரும் ஒரு காட்சியை இங்கே மேற்கோள் காட்டலாமென்று நினைக்கிறேன் . "நான் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தும்போது, அதற்கு நான் என்ன அர்த்தம் கொடுக்க விரும்புகிறேனோ, அதுதான் அர்த்தம் — அதற்கு கொஞ்சமும் கூடவோ குறையவோ இல்லை," என்று ஹம்ப்டி டம்ப்டி ஆலிஸிடம் சொல்வான். அதற்கு ஆலிஸ், " என் கேள்வியெல்லாம் உங்களால் வார்த்தைகளுக்கு இத்தனை விதமான அர்த்தங்களைக் கொடுக்க முடியுமா என்பதுதான்."
அதற்கு ஹம்ப்டி டம்ப்டி சொல்வான் " என் கேள்வியெல்லாம் இந்த வார்த்தைகளுக்கு யார் எஜமானர் என்பது மட்டுமே ," என்றான் . இதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்க்த கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன்.
சென்ற மாதம் உகரம் இணைய இதழில் இதயம் பேசுகிறது என்ற பகுதியில் ராவணன் நமது முப்பாட்டன் தானா எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் சொல்லப்பட்ட சில விஷயங்களில் உடன்பாடில்லை. ராவணனைப் பற்றி நான் மட்டுமல்ல நாம் அனைவரும் அறிந்தது கம்ப ராமாயணத்தின் மூலம் தான். கம்பன் காட்டும் ராவணனைப் பற்றி
அ. ச.ஞானசம்பந்தன் எழுதிய " இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் " என்ற புத்தகத்தை படித்திருக்கிறேன். அதில் நான் உணர்ந்த ராவணனிற்கும் ,இந்த கட்டுரையில் கொடியவனாக சித்தரிக்கப்படும் இராவணனிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவது எனது கடமை. அதன் விளைவே இந்த கட்டுரை.
1. இராவணன்தான் நம் தமிழர்களின் மூதாதையனா?
"இராவணன் கயிலை மலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறான். அப்போது அவன் சிவனை நோக்கி. சாமவேதத்தைப் பாடினான். அவன் வேதத்தை பாடியதால் தமிழன் இல்லை"
\இந்த வாதம் எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. நம் கோவில்களில் பூஜிக்கும் மந்திரங்களும் , பூஜிப்பவர்களும் வேதத்தில் தான் பாடுகின்றனர். ஆகையால் யாரவது சமஸ்கிருதத்தில் தொழுதால் அவர்கள் தமிழர் இல்லை என்று ஆகிவிடுமா. அப்படி பார்த்தால் அனைத்து அந்தணர்களும் வேதத்தில் பாடுவதால் அவர்கள் தமிழர் அல்லர் என்று சொல்ல முடியுமா ?
2. இராவணன் உண்மைத் திராவிடனா?
" சூர்ப்பனகையிடம் ," நீ அந்தணப்பெண் நான், சத்திரியன். ஆகையால், இந்த வர்ண வேறுபாட்டின் காரணமாக நான் உன்னை ஏற்க முடியாது" என்று சொன்னதாலும் ,ராவணன் பிரம்மன் வழி குலப்பிறப்பில் வந்ததாலும் அவன் பிராமணன் . ஆகையால் அவன் ஆரியன் ,திராவிடனாக இருக்க முடியாது
இந்த வாதத்திற்கு பதிலளிக்க அ.ச .ஞா .அவர்களின் வரிகளையே சொல்கிறேன். "இராவணன் ஆரியனா அல்லது தமிழனா (திராவிடனா) என்பது போன்ற வினாக்கள் இடப் பொருத்தமற்றவை. இலக்கிய ரீதியாக ஒரு பாத்திரத்தைப் பார்க்கும்போது இத்தகைய இன அடையாளங்கள் அவசியமற்றவை.இராவணன் தமிழனா அல்லது ஆரியனா என்ற கேள்விகள் அநாவசியமானவை. இவற்றுக்கு விடை காண வேண்டுமென்றால் பழைய சரித்திரத்தைத் தேட வேண்டுமே தவிர, கம்பராமாயணம் போன்ற இலக்கியத்தைத் தேடிப் பயனில்லை" .
3. இராவணன் சிறந்த ஒழுக்கசீலனா?
" இராமாயணச் செய்திகள் பதிவாக்கியுள்ள எந்த இலக்கியமும் இராவணனை, அறவழிப்பட்டவனாகவோ, நல்லவனாகவோ, ஒழுக்கமுள்ளவனாகவோ காட்டாததோடு மேற்கருத்துகளுக்கு எதிர்மாறான கீழ்மைப் பண்புடைய ஒருவனாகவே அவனைக் காட்டுகின்றன. என்கிறார் "
" நீ அயன் முதற்குலம் இதற்கு ஒருவன் நின்றாய்
ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் " - பிரம்மனின் முதற்குலத்தில் ஒப்பற்றவனாகத் தோன்றியவன் நீ; ஆயிரம் வேதங்களின் பொருளையும் உணர்ந்து அறிவு நிரம்பியவன் நீ என்று ராவணனின் தம்பி விபீடணன் பாடுகிறான்.
"போரிடை மீண்டும் ஒருவருக்கும் புறங்கொடாய் போர்வீரன் " - இறுதிப் போரில் வீழ்ந்தாலும், ஒருபோதும் பகைவனுக்குப் புறங்காட்டி ஓடாத சிறந்த போர்வீரனாக இராவணன் திகழ்ந்தான். இராவணன் சிறந்த சிவபக்தன் என்பதோடு, இசையிலும் வல்லவன். யாழ்க்கொடி ஏந்தி, அகத்தியரோடு இசையில் போட்டி போட்ட கலைஞனாகவும் கம்பன் காட்டுகிறான்.
இத்தகைய நற்பண்புகள் நிறைந்த இராவணன், சீதையின் மேல் கொண்ட முறையற்ற காமத்தால் (பிறன் மனை நயத்தல்) தனது அனைத்துப் பெருமைகளையும் இழந்து வீழ்ச்சியடைந்தான் என்பதே கம்பராமாயணம் சொல்லும் செய்தி. இராவணன் செய்தது சரியென்று வாதிடவில்லை. மனிதனாக பிறந்துவிட்டால் தவறு செய்வதென்பது இயல்பு. அவன் தெரிந்த செய்த தவறிற்காக அவன் முற்றிலும் ஒழுக்கமற்றவன் என்று வாதிடுவது அழகன்று.
4. இராவணன் மாறாத இனப்பற்றாளனா?
"தனது காமத்திற்காக, இளவயதில் இருந்தவர்களான தனது புதல்வர்களை, அவர்கள் எடுத்துச் சொல்லியும் கேளாமல், போருக்கு அனுப்பி மாளச்செய்த இராவணனை, இனப்பற்றாளன் என எவரும் உரைப்பின், உலகம் அவரைக் கண்டு நகைக்கவே செய்யும்." என்கிறார்.
"தந்தேன் பிரியேன் தனிபோகத் தாழ்க்கிலேன்
வந்தேன் தொடர; மதக்களிறே! வந்தேனால் " - "என் தம்பியே! உன்னைப் பிரிந்து நான் இருக்க மாட்டேன். நீ மட்டும் தனியாகப் போவதைப் பார்த்துக் கொண்டு நான் இங்கிருக்க மாட்டேன். இதோ உன் பின்னே நானும் வந்துவிட்டேன்" என்று கூறி இராவணன் பாசத்தால் உருகுகிறான்
அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செவ்வழி ரோடும் குருதி தேக்கினான்" - தம்பியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன், இராவணனின் கண்கள் சிவந்து ரத்தம் போன்ற கண்ணீரைச் சிந்தின என்கிறான் கம்பன்.
சுருக்கமாகச் சொன்னால், இராவணன் காமத்தினால் வீழ்ந்தாலும், அவன் ஒரு சிறந்த குடும்பத்தலைவனாகவும் ,தனது சுற்றத்தார் மேல் மிகுந்த பாசமுடையவனாகவுமே கம்பனால் படைக்கப்பட்டுள்ளான். இப்படி இருக்கும்போது அவன் எப்படி இனப்பற்றாளன் அல்ல என்று எப்படி சொல்ல முடியும். அவனது தனிப்பட்ட தீயொழுக்கம் (பிறன் மனை நயத்தல்) அவனது ஒட்டுமொத்த இனத்தின் அழிவிற்கும், பழிக்கும் காரணமாக அமைந்தது அன்று அவன் இனத்தில் மேல் பற்றற்று இருந்தான் என்று கம்பன் எங்குமே சொல்லவில்லை.
5. இராவணன் சிறந்த சிவபக்தனா?
" இராவணனை திருஞானசம்பந்தர், தனது எட்டாவது பாடல்களில் அமைத்துப்பாடியது, அவனது பெருமை நோக்கி அன்றாம். சிவபெருமான் பிழை செய்தவர்க்கும் அருள் செய்வான் என்பதை, உணர்த்துதற்கே என்கிறார் நம் சேக்கிழார். ஆகையால் இராவணன் ஒரு சிவபக்தன் அல்ல "
"முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந்தவமும் முதல்வன் முன்னாள்
எக்கோடி யாராலும் வெலப்படாய்'
எனக்கொடுத்த வரமும் ஏனைத்
திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புய". - மூன்று கோடி ஆண்டுகள் வாழும் ஆயுளும், விடாமுயற்சியால் அவன் செய்த பெரிய தவமும், "எந்தக் கோடியைச் சேர்ந்தவர்களாலும் நீ வெல்லப்பட மாட்டாய்" என்று இறைவன் சிவபெருமான் அவனுக்கு அளித்த வரமும், திக்குகள் அனைத்தையும் வென்ற அவனது தோள் வலிமையும் ஈடு இணையற்றவை என்கிறான் கம்பன்.
சிவபக்தனான இல்லாமல் எப்படி ராவணனுக்கு சிவபெருமான் வரமளித்தார் ?. சிவபெருமான் எல்லோருக்கும் வரம் கொடுப்பாரென்றால் , அவரிடம் வரம் வாங்கியவர்கள் எல்லாம் சிவபக்தர்கள் இல்லையா. ? கம்பன் காட்டும் இராவணன் சிறந்த சிவபக்தன். இருப்பினும், அவன் பெற்ற வரங்களினால் ஏற்பட்ட செருக்கு பிற்காலத்தில் அவனது வீழ்ச்சிக்கு அடிகோலியது என்றும் கம்பன் சொல்கிறான்.
திராவிடர் கழகத்தினர் இராவணனைத் தூக்கி பிடிக்கின்றனர் மற்றும் ராவண காவியம் இயற்றி அவனை கொண்டாடி வருகின்றனர் என்பதனால் ராவணனை நாம் ஏன் வெறுக்க வேண்டும்? இராவணன் நம் எல்லோரையும் போல பல குறைகளை உடையவன். ராமன் மேல் குறைகள் இல்லையா. வாலி வதைப் படலம் முழுவதுமே ராமனின் மற்றொரு பக்கத்தை கம்பன் காட்டுகிறான் அல்லவா. வாலியை ஒளிந்து நின்று கொன்றான் என்பதற்காக நாம் ராமனை வெறுக்க முடியுமா ? ஹம்ப்டி டம்ப்டி சொல்வது போல வார்த்தைகளின் அர்த்தத்தை அதன் எஜமானார்களே தீர்மானிக்கின்றனர். ராவணன் தீயவன் என்று நிறுவுவதில் என்ன இருக்கிறது ?
அ.ச .ஞா . வார்த்தைகளை கொண்டு இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். "கம்பராமாயணத்தில் காணப்படும் இராமன், கம்பன் ஆக்கிய இராமன் ஆவான்; அவ்வாறே இராவணனும். இராமனைப் படைத்த அதே கம்பன் தான் இராவணனையும் படைத்துள்ளான்; எனவே இவர்கள் இருவருமே கம்பன் பெற்ற பிள்ளைகள்,. கம்பன் தான் பெற்ற இந்த இரு பிள்ளைகளையும் என்ன கருத்தோடு, என்ன சூழலில் செயல்பட வைக்கிறான் என்பதை உணர்ந்து படிப்பதே முறை " அதனை விட்டுவிட்டு இராவணன் திராவிடனா ,தமிழனா ,ஆரியனா என்று நமக்குள்ளே சண்டை போடுவது பிழையன்றோ?