தமிழ் அரசியற் கட்சிகளின் புதிய கூட்டாக உள்ளது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி DTNA. இதில் சமத்துவக் கட்சியும் ஒன்று. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமார், நாற்பது ஆண்டுகளாக பல்வேறு நிலைகளிலான அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றாத முறையில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் நிதானத்தையும் கைக்கொள்ளும் தலைவர்களில் ஒருவராகத் தன்னை நிலைப்படுத்தியிருக்கிறார்.
சந்திரகுமாருடன் வடக்கு- கிழக்கின் அரசியல் சூழல், NPP அரசாங்கத்தின் செயற்பாடுகள், வடக்குக் கிழக்கில் NPP செல்வாக்கு, அதை எதிர்கொள்ளும் தமிழ்க்கட்சிகளின் நிலை, எதிர்காலத்தில் DTNP யின் செயற்பாடுகள் எனப் பலவற்றைப் பற்றி எதிரொலிக்காக வழங்கிய நேர்காணல் இது.
நேர்கண்டவர்- கருணாகரன்
கேள்வி: இனப்பிரச்சினைக்குத் தீர்வு, புதிய அரசியல் யாப்பு, பொருளாதார நெருக்கடியைச் சுமுகமாக்குதல், முறைமை மாற்றம் (System change) எனப் பல பிரகடனங்களைச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் ஆட்சி எப்படி உள்ளது?
பதில் : ஒரு அரசாங்கத்தைப் பற்றிய விமர்சனத்தைப் பொதுமக்களிடம் கேட்பதே பொருத்தமானது. அவர்கள்தான் நேரடியாக அதனுடைய நன்மை – தீமைகளை அனுபவிப்பர்களும் உணர்ந்து கொள்கின்றவர்களும். அதனால் அவர்களுடைய விமர்சனமும் கருத்துகளும் அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களுக்கு ஊடாக வரும். மேலும் அவர்களுடைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் குறித்த ஆட்சித் தரப்பினால் நிறைவேற்றப்படுகின்றனவா இல்லையா என்பதை அவர்கள் இதயத்திலிருந்தே சொல்வார்கள்.
நான் ஒரு அரசியற் கட்சியைச் சேர்ந்தவன். என்னுடைய கருத்துகள் மக்கள் நிலைப்பட்டிருந்தாலும் அவை அரசியல் சார்புடையவை என்றே பெரும்பாலும் நோக்கப்படும். ஆகவே நாம் முன்வைக்கின்ற விமர்சனம் அல்லது அபிப்பிராயம் போன்றவற்றை ‘அரச எதிர்ப்புக் கருத்துகள்‘ என்று நோக்கப்படுவதற்கான – சுருக்கப்படுவதற்கான - சாத்தியங்கள் அதிகமுண்டு. இருந்தாலும் ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் செயலாற்றுகின்றவர் என்ற வகையில் பார்த்தால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அதனுடைய பிரகடனங்களிலிருந்து காப்பாற்றியிருப்பது டித்வா புயலும் ஈரான் - அமெரிக்க + இஸ்ரேல் யுத்தமும்தான். இவற்றைச் சாட்டி அல்லது இவற்றைக் காரணம் காட்டி தன்னுடைய அரசியல் பலவீனங்களையும் செயற்பாட்டுத் தவறுகளையும் NPP மறைத்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை. தமிழ் மக்களுடைய உணர்வில் முந்திய ஆட்சியாளர்களுக்கும் NPP க்கும் இடையில் குறிப்பிடக்கூடிய வித்தியாசங்களில்லை. அப்படி வித்தியாசங்கள் இருந்தாலும் அது முன்பு ‘குமுதம்’ இதழில் வரும் ஆறுவித்தியாசங்களைப்போல இனங்காணக் கடினமானதாகவே இருக்கும்.
உங்களுடைய கேள்வியில் உள்ள ‘இனப்பிரச்சினைக்குத் தீர்வு’, ‘அரசியல் யாப்பு மாற்றம்’, ‘பொருளாதார நெருக்கடியைச் சுமுகமாக்குதல்’, ‘முறைமை மாற்றம்’ (System change) பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) போன்றவற்றை NPP தன்னுடைய வேலைத்திட்டமாகச் செய்யத் தொடங்கியிருந்தால் இந்தக் கேள்வியே வேறாக மாறியிருக்கும். சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Anti-Terrorism Act - ATA) அல்லது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) போன்ற புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆகவே எதுவுமே நல்லவையாக நடக்கவில்லை.
கேள்வி: ஆனாலும் NPP க்கு தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பு உள்ளதல்லவா! கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி வடக்கே வந்தபோது அவரை மக்கள் உற்சாகமாக வரவேற்றதும் சமூக வலைத்தளங்களில் அவருடைய வருகையை பெருமிதமாக வெளிப்படுத்தியதையும் அவதானித்திருப்பீர்கள். உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள், ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு நிகரான தமிழ்த் தலைவர் ஒருவரை உங்களால் அடையாளப்படுத்த முடியுமா?
பதில் : NPP யின் இன்றைய செல்வாக்கு என்பது ‘அரகலய‘வின் வெளிப்பாடு அல்லது அதனுடைய விளைவே ஆகும். ஏனைய சிங்களத் தலைவர்களையும் விட அநுரகுமார சற்று வித்தியாசனமானவர் என்றொரு தோற்றப்பாட்டை அரகலயவுக்குப் பிறகான சூழல் வெளிப்படுத்தியது. அதோடு முன்பிருந்த ஆட்சியாளர்கள், ஊழல் பேர்வழிகள் என்ற அடையாளமும் அநுரகுமாரவுக்கும் NPP க்கும் வாய்ப்பாகியது. ‘அரகலய அலை‘ சிங்கள மக்களை மட்டுமல்ல, தமிழ் பேசும் பரப்பிலும் மெல்லிய ஈர்ப்பைக் கொடுத்திருந்தது. சமவேளையில் தமிழ் அரசியற் தரப்பில் உண்டாகிய தேக்கங்களும் குழப்பமான சூழலும் NPP க்கும் அநுரகுமார திசநாயக்கவுக்கும் வாய்ப்பாகியது.
ஆனால் இப்போது NPP யின் மீதான நம்பிக்கையும் அதற்கான மதிப்பும் பொதுவாகவே சரிந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளூராட்சித் தேர்தல் இதற்குச் சான்று. மக்களிடம் சலிப்பும் நம்பிக்கையீனமும் தொடர்ந்து ஏற்படுவதை அவதானிக்கலாம். அரசாங்கம் எந்த முன்னேற்றத்தை அடையாளப்படுத்தியிருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா? இதனால்தான் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் பின்னடிக்கிறது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தினால் தன்னுடைய செல்வாக்கில் பின்னடைவு ஏற்பட்டு விடும் என்ற பயம் அரசாங்கத்துக்குண்டு. இன்றைய அரசியல் நிலைவரத்தைப் பற்றி எதிர்த்தரப்புகளோடு பகிரங்க வெளியில் விவாதிப்பதற்கு NPP யில் எவரும் தயாரில்லை. ஆகவே NPP என்பது ஒரு soda Gas தான். அநுரகுமார ஒரு அழகிய வானவில் (Anura Kumara is a beautiful rainbow). அவ்வளவே.
கேள்வி: இதொரு கடுமையான – மோசமான - விமர்சனம் என்றே பார்க்கிறேன். நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகமெங்கும் பரந்திருக்கின்ற இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் அநுரகுமார மீது பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். சர்வதேச சமூகமும் அநுரகுமாரவையும் அவருடைய அரசாங்கத்தையும் வரவேற்றுள்ளதை அவதானிக்கலாம். அப்படியான ஒருவரை நீங்கள் இப்படி வர்ணிக்கலாமா?
பதில் : கடந்த காலத்தின் ஏமாற்றங்களும் கசப்புகளும் அநுரகுமாரவின் மீதான எதிர்பார்ப்புகளாகவும் நம்பிக்கைகளாகவும் மாறியது. அநுரகுமாரவும் அதற்கான முறையில் எளிமையாகவும் சாதாரண பின்புலத்தைக் கொண்ட குடும்பப் பின்னணியில் இருந்தும் வந்திருந்தார். ஜே.வி.பி.யும் தன்னை வெகு சாமர்த்தியமாக (சமயோசிதமாக) உருமறைத்துக் கொண்டு தேசிய மக்கள் சக்தி (NPP) யாக தோற்றம் காட்டியது. எல்லாம் இணைந்து உருவாகியதே நான் குறிப்பிட்ட ‘வானவில்‘ காட்சியாகும். இதை மறுதலித்து NPP யும் அநுரகுமார திசநாயக்கவும் தம்மை நிரூபிப்பதாயின் தாங்கள் பிரகடனப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனத்தைச் செயற்படுத்திக் காட்ட வேண்டும். நிஜத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லையென்றால் ‘வானவில்‘ என்ற கனவாகத்தான் இருக்கும் (They need to prove the reality. Otherwise, it will just be a 'rainbow' dream).
கேள்வி: எதிர்த்தரப்பில் இருப்பதால் எதையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்று கருதுகிறீர்களா? நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய நம்பிக்கையையும் அரசாங்கத்தின் மீதான உறுதிப்பாட்டையும் நீங்கள் புறக்கணிப்பதாகவே கருதுகிறேன்.
பதில்: அப்படி நீங்கள் எண்ணினால் உங்களுக்காக நான் அனுதாபம் கொள்ளத்தான் முடியும். நாம் எதிர்த்தரப்பில் இருப்பதாக எப்படி உங்களால் சொல்ல முடியும்? நாம் மக்களின் தரப்பில் இருக்கிறோம். ஆட்சியாளர்கள் (NPP) தான் எதிர்த்தரப்பில் இருக்கிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு மக்களின் தரப்பில் (இந்தப் பக்கமாக) நின்றவர்கள், அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் ஒரே நாளில் அந்தப் பக்கமாக - ஆட்சித்தரப்பினராக மாறி விட்டனர். அதாவது மக்களுக்கு எதிர்தரப்பாக மாறி விட்டனர். ஆனால், சரியான ஆட்சியாளர்கள் மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் கரிசனை கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்போதும் மக்களின் தரப்பினராகவே இருப்பர்.
கேள்வி: இப்படி நீங்கள் சொன்னாலும் மக்கள் தேசிய மக்கள் சக்தியைத் தம்முடன் நெருக்கமாகவே வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. உள்ளூராட்சித் தேர்தல்களில் வடக்கு-கிழக்கில் NPP இரண்டாம் நிலையில் உள்ளதே. நெருக்கடியிலும் வங்குரோத்து நிலையிலும் உள்ள அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவது மிகப் பெரிய சுமையும் பொறுப்பும் என்பதை ஏற்றுக் கொள்ள நீங்கள் மறுப்பது ஏன்?
பதில் : நாட்டின் நெருக்கடி நிலையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டின் சுமையைக் குறைக்க வேண்டும் என்றே நாமும் சிந்திக்கிறோம். நாட்டை முன்னேற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் தடையாக இருக்கும் இன ஒடுக்குமுறைக்குத் தீர்வைக் காண வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதற்குத்தான் கட்டமைப்பு மாற்றம் (Structural change), முறைமை மாற்றம் (System change) வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. மக்களும் அதற்கான ஆணையை வழங்கி விட்டனர். நாடாளுமன்றத்திலும் அதற்கான 3/2 பலம் உள்ளது. ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாடாளுமன்றத்தை விட்டு விட்டு மகாசங்கங்களை நோக்கிச் செல்கிறார் ஜனாதிபதி. தீர்வுகளை எட்டுவதற்கு மதபீடங்களில்தான் அனுமதியைப் பெற வேண்டும் என்றால், எதற்குத் தேர்தல்? எதற்கு நாடாளுமன்றம்? எதற்கு ஜனநாயகம் பற்றிய பேச்சுகளும் அமைதித்தீர்வைப் பற்றிய கட்டுக் கதைகளும். பழைய புண்களை அப்படியே வைத்துக் கொண்டு வெளியே தைலம் பூசுகிறார்கள்.
கேள்வி: இப்படிக் கடுமையான விமர்சனத்தை NPP யின் மீதும் அநுரகுமார திசநாயக்கவின் மீதும் வைக்கிறீர்களே. ஒரு காலத்தில் நீங்கள் போரை நடத்திய, தமிழ் மக்களைப் படுகொலைக்குள்ளாக்கிய ராஜபக்சவினருடன் இணைந்து செயற்பட்டீர்கள் அல்லவா? அந்த ஆட்சியை விட NPP எந்த வகையில் மோசமானது?
பதில் : அரசியற் கூட்டுகளும் விலகல்களும் மக்கள் நலனுக்கான அடிப்படையிலும் கட்சி நலன், தனி நபர்களின் நலன் என்ற அடிப்படையிலும் அமைவதுண்டு. நான் யுத்தம் முடிந்த பின்னரே நாட்டுக்குத் திரும்பியிருந்தேன். அன்று ஒரு நீண்ட யுத்தத்தினால் எமது பிரதேசங்களும் எமது மக்களும் சிதைந்தும் அழிந்தும் போயிருந்தனர்.
அதை மீளமைக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னைப் போன்ற பலர் அன்று தொடக்கம் இப்போது வரையில் மக்களுக்கான பணிகளைப் பல வழிகளில் செய்து வருகிறார்கள். 1980 களின் முற்பகுதியில் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு நானும் விடுதலைப்போராட்டத்தில் இணைந்தவன். எமது போராட்டத்தினால் கிடைத்த வெற்றி தோல்விகளுக்கு நானும் ஒரு வகையில் பொறுப்பாளி. அப்போது இருந்த அரசாங்கம் சர்வதேச அழுத்தம், மனித உரிமை அமைப்புகளின் வலியுறுத்தல் உட்பட்ட பல காரணங்களுக்காக மீள் குடியேற்ற அமைச்சு, புனர்வாழ்வு அமைச்சு என இரண்டு பிரத்தியேக அமைச்சுகளை உருவாக்கி, மீள்குடியேற்றத்தையும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளையும் மேற்கொண்டது.
இதில் எமக்கு முழுமையான உடன்பாடோ திருப்தியோ கிடையாது. ஆனாலும் அன்றைய யதார்த்தத்தில் அந்த அரசாங்கத்தை வைத்தே நாம் பலவற்றை நிறைவேற்ற வேண்டியிருந்தது. இதில் உங்களுக்கு விமர்சனங்களோ மறுப்போ மாற்றுப் பார்வையோ இருக்கலாம். அப்படி நாம் செயற்பட்டதால்தான் நான் பிரதிநிதித்துவம் செய்த கிளிநொச்சியில் பல இராணுவ முகாம்களை விரைவாக விலக்க முடிந்தது. அந்த இடங்களில் பல நிறுவனங்களை உருவாக்க வாய்த்தது.
இயக்கச்சி, பூநகரி 4 ஆம் கட்டை போன்ற இடங்களில் பாடசாலைகளில் முகாமிட்டிருந்த படையினரை விலக்கியது தொடக்கம், தற்போது கிளிநொச்சி – அறிவியல் நகரில் பல்கலைக்கழக பொறியியல், விவசாய, தொழில்நுட்ப பீடங்கள் இருக்கின்ற 600 ஏக்கருக்கு மேற்கட்ட காணிகளை படைகளிடமிருந்து மீட்டு அவற்றை உருவாக்க முடிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் கிளிநொச்சியில் தற்பொழுது 6000 பேர் வரையில் பணியாற்றும் ஆடைத்தொழிற்சாலைகள், ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரி, மத்திய வங்கியின் பிராந்தியப் பணிமனை, வனஜீவராசிகள், சுற்றுச் சூழல் அமைச்சு போன்றவற்றின் பிராந்தியப் பணியிடங்கள் எனப் பலவற்றையும் உருவாக்கினோம்.
போரினால் முற்றாகவே அழிந்திருந்த பாடசாலைகள், வீதிகள், மருத்துவமனைகள், மின்னிணைப்புகள், வீடமைப்புகள், பொதுக் கட்டடங்கள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் புனரமைப்பு, விவசாயத்துறை, மீன்பிடி, கூட்டுறவுத்துறை போன்றவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என பெரும்பாலான விடயங்களை விரைவாகச் செய்திருக்கிறோம். எவர் எல்லாவற்றையும் அழித்தனரோ அவர்களைக் கொண்டே மீளக் கட்டியெழுப்பினோம். அப்போது கிளிநொச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவுக்கு முன்பும் இல்லை. பின்பும் இல்லை. இது ஒரு அரசியற் தந்திரோபாயம் இல்லையா?
அதேவேளை நான் தொடர்ந்தும் அந்தக் கூட்டுடன் இருக்கவில்லை. அந்தக் கூட்டின் காலம் அவ்வளவுதான். அதொரு முதலுதவிக் காலம். முதலுதவி என்பது சிகிச்சைக்கான நிரந்தரத் தீர்வு அல்ல. அதற்கு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அதற்கான இன்னொரு அணியில் இப்போது நாம் இணைந்து வேலை செய்கிறோம். அரசியற் கூட்டுகள் மக்களின் தேவைக்கானவை என்ற நிலைப்பாடு என்னுடையது. அதையே நாம் தேர்வு செய்கிறோம். அதைப் பகிரங்கமாகவே செய்து வருகிறோம். இரகசியக் கூட்டில் ஒரு நாம் கள்ள உறவாக இருப்பதில்லை.
இங்கே இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய அரசியல் தொடக்கம் அரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டமாகவே இருந்தது. இடையில் ஏற்பட்ட சூழலில் மக்களுக்கான தேவையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட அளவில் அரசுக்கு ஆதரவளித்திருக்கிறேன். இப்போது அரசை மீண்டும் எதிர்க்கிறேன். எல்லாமே காலத்தின் தேவைதான்.
இப்போது தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு தனி ஈழமே சாத்தியம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு வந்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அன்று மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில்தானே பதவி ஏற்பைச் செய்தார். அதே மாகாணசபை உறுப்பினரான சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிராமணம் செய்திருந்தார். வரலாற்றில் இப்படிப் பல காட்சிகள் உண்டு.
கேள்வி: ஆனால், இனஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தி, இனவாதப்போரை முன்னெடுத்து, இன அழிப்புச் செய்த அரசாங்கத்தோடு நீங்கள் இணைந்திருந்ததாகத்தானே வெளியுலகம் உங்களை மதிப்பிட்டது. என்னதான் நீங்கள் நியாயங்களைச் சொன்னாலும் அந்தக் காலகட்டத்தின் ஆட்சிக்கு நீங்கள் முட்டுக் கொடுத்தீர்கள் என்பதுதானே உண்மை?
பதில் : அரசியலில் பல விதமான விமர்சனங்கள் இருக்கும். அப்படிப் பல விதமான நிலைப்பாடுகளும் இருக்கும். 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி அமைத்த ஆட்சியை ‘நல்லாட்சி அரசாங்கம்’ (Yahapalana Government) என்று சொன்னார்கள். அது நல்லாட்சி அரசாங்கமாகச் செயற்பட்டதா? அந்த ஆட்சிக்கு எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை எதிர்க்கட்சி என்ற நிலையைக் கடந்தும் வழங்கியிருந்தது. ‘தமிழ் மக்களுடைய நலனுக்காகவே அந்த ஆதரவை வழங்குகிறோம்’ என்று அப்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சொன்னது. அப்படி வழங்கப்பட்ட ஆதரவினால் தமிழர்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன? ‘அது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நடவடிக்கை – அது ஒரு அரசியல் தவறு‘ என்று நான் சொன்னால், அதை உங்களால் மறுக்க முடியுமா? இப்பொழுது எந்த அடிப்படையும் இல்லாமல், எந்த வகையான முன்னேற்றமும் இல்லாமல் NPP யை பலர் ஆதரிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த ஆதரவை எப்படி மதிப்பிடுவது?
1990 களின் பிற்பகுதியில் அன்றைய சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் செம்மணியில் பாடசாலை மாணவி கிரிசாந்தியும் அவருடைய தாய், சகோதரன் ஆகியோரும் கொல்லப்பட்டதை நாடாளுமன்றத்தில் விவாதித்துடன், அந்த விடயத்தை சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்புகள் என வெளியுலகத்துக்கு கொண்டு சென்றவன் நான். அதைப்பற்றிய விவரங்கள் நாடாளுமன்ற ஹன்ஸார்ட்டிலும் உண்டு. என்னுடைய நாடாளுமன்ற உரைகளின் தொகுப்புகளில் ஒன்றான ‘வாழ்வை மீட்கும் குரல்‘ நூலிலும் உண்டு.
ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்படுவது, ஆட்சித்தரப்புக்கு ஆதரவளிப்பது என்பதெல்லாம் யாருடைய நலனுக்கானவை? அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? ஆட்சியாளர்களைக் கொண்டு பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும்? எதையெல்லாம் செய்திருக்கிறோம் என்றே நாம் பார்க்க வேண்டும். அப்போது நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் அரசாங்கத்தைக் கடுமையான முறையில் விமர்சித்திருக்கிறேன்; கண்டித்திருக்கிறேன். முக்கியமாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மீள்குடியேற்றம், படை விலக்கல், சிங்கள பௌத்த ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு என அரசியல் மதிப்பீடுகளும் விமர்சனங்களும் விளைவுகளின் அடிப்படையில் அமைவதே சரி.
கேள்வி: இப்பொழுது நீங்கள் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் (DTNA) இணைந்து செயற்படுகிறீர்கள். DTNA யின் அரசியல் நிலைப்பாடு, செயற்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள் எப்படியானவை?
பதில் : நான் முன்பே சொல்லியிருப்பதைப்போல, அரசியற் கூட்டுகள் காலத்தின் விளைவாகும். DTNA யின் உருவாக்கம் இந்தக் காலத்தினுடையது. DTNA யில் உள்ள கட்சிகள் போராட்ட வாழ்வையும் அனுபவத்தையும் கொண்டவை - செயற்பாட்டு அரசியலை அனுபவமாகக் கொண்டவை. மிதவாதத் தலைமைகள் பெரும்பாலும் கற்பனாவாத அரசியலை அகத்திலும் புறத்திலும் கொண்டிருப்பவை. DTNA யதார்த்தமாக விடயங்களைச் சிந்திக்கிறது. அந்த அடிப்படையில்தான் அது மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி, மக்களிடம் அதிகாரத்தைக் கொடுங்கள் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அடுத்தாக அரசியல் தீர்வை முன்வையுங்கள். தேர்தலை நடத்தி ஜனநாயக உரிமைகளைப் பேணுங்கள் என்று யதார்த்தத்தைப் பேசுகிறோம். உள்ளூராட்சி மன்றங்களிலும் DTNA யின் உறுப்பினர்களுடைய செயற்பாடுகளும் வலியுறுத்துதல்களும் யதார்த்தமானவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.
தமிழ் மக்களுடைய அரசியலில் DTNA ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். எமது மக்கள் முன்பு மூன்று கட்சிகளின் கூட்டான தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்தனர். பிறகு, விடுதலைப் புலிகள், ரெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர். எல்.எவ் என நான்கு விடுதலை இயக்கங்களின் கூட்டான ஈழதேசிய விடுதலை முன்னணி (ENLF) ஐ வரவேற்றனர். பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எனப் பல ஒற்றுமைகளையும் அணிகளையும் கூட்டுகளையும் கண்டு வந்த அனுபவத்தைக் கொண்டவர்கள். இந்தக் கூட்டுகளால் அந்தக் காலத்தில் உருவாகிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் பொய்த்துப்போனதே வரலாற்றுத் துயராகும். இதைப் புரிந்து கொண்டு DTNA செயற்பட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பும் வலியுறுத்துகையும்.
முதலில் நாம் எங்கள் மண்ணிலிருந்து மக்கள் வெளியேறும் சூழலை மாற்ற வேண்டும். அதற்கு மக்கள் வாழும் பிரதேசங்களை வளமாக்குவதும் தொழில்துறைகளை மேம்படுத்துவதும் சரியான நிர்வாக நடைமுறைகளை உருவாக்குவதும் அவசியமாகும். இந்த மண்ணில் நாம் வாழ முடியும் என்ற எண்ணத்தை - நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஒரு முன்னாயத்த நிலையாக மாகாணசபை நிர்வாகத்தைப் பொறுப்பேற்று, அதைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று DTNA விரும்புகிறது. நிர்வாகத்திறனும் மக்கள் மீதான கரிசனையும் உள்ள ஆளுமைகளை முன்னிறுத்துவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம். புலம்பெயர் மக்களின் ஆதரவையும் பல விதமான பங்களிப்புகளையும் நாம் பெற முடியும். அரசியற் தீர்வுக்கு ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியம். DTNA அனைத்துத் தமிழ்பேசும் தரப்புகளோடும் நட்புறவைப் பேணவே விரும்புகிறது. அந்த அடிப்படையில்தான் நாம் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி, தமிழரசுக் கட்சி போன்றவற்றோடு தொடர் சந்திப்புகளையும் பேச்சுகளையும் நடத்தி வருகிறோம். வெளியுலகத்தோடும் எமது மக்களின் தேவைகளைப் பற்றியும் அரசியற் தீர்வைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருக்கிறோம். மக்களிடத்திலும் பரவலாக வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கேள்வி: DTNA மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரிப் பல கூட்டங்களை மாவட்டங்களில் நடத்தி வருகிறது. மாகாணசபையைப் பயனற்றது, அதிகாரமற்ற ஒன்று என்று கூறும் நிலைப்பாட்டில்தானே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடக்கம் புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் உள்ளன. 1987 இல் விடுதலைப் புலிகளாலும் தமிழ் மக்களாலும் நிராகரிக்கப்பட்ட ஒன்றை மீளவும் DTNA வலியுறுத்துவது எதற்காக?
பதில்: மாகாணசபையை நிராகரித்த சக்திகளில் ஒன்று ஜே.வி.பி. ஆனால், ஜே.வி.பியும் மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றி, அதன் உறுப்பினர்களாகி இருந்தது. மாகாணசபையை ஒரு தீர்வாகத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், அதற்கான தேர்தல் நடந்தால் தமது தரப்பிலிருந்து அதில் பங்குபற்றக் கூடிய வாய்ப்புண்டு என்று கஜேந்திரகுமார் தரப்பிலிருந்தே சொல்லப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது? யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தானே! ஆகவே இந்தக் கால மாற்றத்தையும் அதனுடைய தேவையையும் நாம் புரிந்து செயற்பட வேண்டும்.
ஏனைய தமிழ்க் கட்சிகள் அனைத்தும் மாகாணசபை முறையில் பங்கேற்றிருக்கின்றன. முஸ்லிம், மலையக, சிங்களக் கட்சிகள் அனைத்தும் மாகாணசபைகளில் பங்குபற்றியுள்ளன. மாகாணசபை மூலமாக மலையகத்தில் எத்தகைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன என்று அண்மையில் கிளிநொச்சியில் நடந்த மாகாணசபைகளைப் பற்றிய உரையாடல் நிகழ்வொன்றில் சமூகச் செயற்பாட்டாளரும் மலையக சமூக வளர்ச்சியுடன் தன் வாழ்நாளை அர்ப்பணித்து உழைத்து வருபவருமான பெரியசாமி முத்துலிங்கம் விளக்கினார். அன்றைய சூழல் வேறு. இன்றைய நிலை வேறு. அப்போது மாகாணசபையை ஏற்று, சீராகச் செயற்படுத்தியிருந்தால் இன்றைய நிலைவேறாக – வளர்ச்சியைப் பெற்றதாக இருந்திருக்கும்.
விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்ட மாகாணசபை என்பதால் அதை அப்படியே நிராகரிப்பதற்கு தமிழ்த்தரப்பில் சிலர் உள்ளனர். ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா? புலிகளால் நிராகரிக்கப்பட்ட மாகாணசபையை சிங்கள அரசும் அங்கீகரிப்பதற்குப் பின்னடிக்கிறது. உண்மையில் விடுதலைப்புலிகள் நிராகரித்ததை அரசாங்கம் ஏற்றிருக்க வேண்டும் அல்லவா. இங்கே புலிகள் வேண்டாம் என்றதை அரசாங்கமும் புறக்கணிக்க முற்படுகிறது. ஆனால், இதுவரையான ஒரேயொரு அரசியல் பெறுமானம் என்றால், அது மாகாணசபைதான். அதில் போதாமைகள் உண்டு. ஆனால், அதையும் நாம் கைவிட்டால் அடுத்தது என்ன? மாற்று என்ன? இங்கே நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கே பின்னிற்கின்ற சிங்களத் தரப்பு தமிழ்த் தரப்பினர் எதிர்பார்க்கின்ற உச்சமான தீர்வைத் தருவார்களா? ஆகவேதான் நாம் சாத்தியப்படக் கூடிய முதற்கட்டப் பணிகளைப் பற்றிச் சிந்திக்கிறோம். ஆம் DTNA நடைமுறைகளைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறது.
கேள்வி: DTNA யில் முன்னாள் விடுதலை இயக்கங்களே உள்ளன. அல்லது ஆயுதப்போராட்டத்தின் வழியாக வந்த அரசியல் தலைவர்களே உள்ளனர். முன்பு வெவ்வேறு நிலைப்பாட்டோடும் அடையாளத்தோடும் இயங்கியவர்கள், சிலவேளை எதிர் எதிர்த் தரப்பினராகவே செயற்பட்டதும் உண்டு. அப்படி இயங்கியவர்கள் ஒரு பொதுக் கூட்டில் இணையும்போது ஏற்படுகின்ற உணர்வு என்ன? இந்த இணைவின் பயன் என்ன?
பதில் : ஆம், ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூட்டு என்றே DTNA இன்றுள்ளது. அப்படி நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால். அப்படித்தான் அமைந்துள்ளது. எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்விலும் வாழ்க்கை மேம்பாடுகளிலும் உரிமைக் கோரிக்கையிலும் நாம் அனைவரும் ஒருமித்தவர்களாகவும் புரிந்துணர்வுள்ளோராகவுமே இருக்கிறோம். காலம் தந்த அனுபவத்தையும் காலம் தந்திருக்கும் வாய்ப்பையும் இணைத்துச் செயற்படுகிறோம்.
முன்பு எங்களுக்குத் தலைமை ஏற்றவர்கள் அரசியலை வழிநடத்தினார்கள். அவர்களே கூட்டுகளிலும் பங்குபற்றினார்கள். அது வேறு ஒரு சூழலாகவும் இருந்தது. பல வகையிலும் அந்தக் காலம் கருகிப் போனது என்றுதான் சொல்வேன். அந்தத் துக்கம் எல்லோருடைய மனதிலும் இருந்தது; இன்னும் இருக்கிறது. அந்தத் துக்கத்தோடு மிகக் கடினமான காலத்தைக் கடந்து வந்த நாம், இப்போது உருவாக்கியிருக்கும் DTNA ஐ வலுவான சக்தியாக மாற்ற வேண்டும். அதற்கான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்த வேண்டும். மக்கள் மிகவும் களைத்துப்போய் விட்டனர். அவர்களை மேலும் களைப்படைய வைக்க முடியாது – கூடாது. ஆகவே, DTNA யில் உள்ள அனைத்துச் சக்திகளும் ஒருங்கிணைந்து நியாயமான மாற்றத்தையும் புதிய – சரியான அரசியலையும் முன்னெடுக்க வேண்டும். அன்று முழுமையடையாமல் போன சாத்தியங்களை இப்போது சாத்தியமாக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
கூடிச் செயற்படும்போது கிடைக்கின்ற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உண்மையில் ஒரு புதிய அனுபவம்தான். நாம் ஆயிரம் யானையின் பலத்தை உணர்கிறோம். விடுதலைப்புலிகள் கூட பின்னாளில் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்திருந்தனர். அதனால்தான் அவர்கள் 1980 களின் பிற்பகுதியில் நிராகரித்த TELO, EPRLF, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றை எல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக்கி, அவற்றோடு இணைந்து வேலை செய்தனர். காலத்தின் கட்டளையை யார்தான் மீற முடியும்?
கேள்வி: தமிழரசுக் கட்சிக்கும் DTNA க்கும் இடையில் என்ன வேறுபாடு? அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் (TNA) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் (DTNA ) இடையில் உள்ள வித்தியாசம் என்ன? இதுவும் குமுதத்தில் வருவதைப்போன்று ஆறு வித்தியாசங்களைக் கண்டு பிடியுங்கள் மாதிரித்தானா?
பதில் : TNA, தமிழரசுக் கட்சியினால் கட்டுப்படுத்தப்பட்டது. DTNA அப்படியல்ல. அது இணைத்தலைவர்களைக் கொண்ட சமாந்தரமான அமைப்பு. அரசியல் ரீதியாகவும் சாத்தியமான விடயங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. மக்களுக்கான பணிகளை முதன்மைப்படுத்துகிறது. ஏனைய தமிழ்பேசும் தரப்புகளோடு திறந்த உறவைப் பேணுவதற்கு முற்படுகிறது. வெளிப்படையான அரசியல் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கிறது. கூட்டுச் செயற்பாட்டில் உறுதியாக உள்ளது. இதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை.
கேள்வி: அரசியற் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் போன்றவற்றில் DTNA யின் நிலைப்பாடு என்ன? வழமையைப்போல அரச எதிர்ப்புத்தானா?
பதில்: அரசியற் தீர்வுக்கான DTNA யின் பரிந்துரைகள் உண்டு. தமிழ்பேசும் மக்களின் நலனை விட்டுக் கொடுக்காத தீர்வு என்பதை அழுத்தமாகவே சொல்லி வருகிறோம். அரசியலமைப்புத் திருத்தம் பற்றி உரிய நேரத்தில் DTNA கூடி முடிவெடுக்கும். அரச எதிர்ப்பு – அரச ஆதரவு என்பதெல்லாம் அரசு செயற்படும் விதத்தைப் பொறுத்தே அமையும். அரசியல் தீர்வு, அரசியல் அமைப்பு மாற்றம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றில் முன்னேற்றத்தை எடுக்காமல் NPP அரசாங்கம் தந்திரமாகச் செயற்படுகிறது. பதிலாக பௌத்த விரிவாக்கம், நில அபகரிப்பு, இனப்பாரபட்சம் போன்றவற்றைச் செய்து சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. இந்த நிலையில் அரச ஆதரவை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கத்தின் தந்திரங்களையெல்லாம் நாம் எதிர்த்தே ஆகவேண்டும். நாங்கள் நியாயமான அரசியல் தீர்வை எதிர்பார்க்கிறோம். அதற்கு முன்பு மாகாணசபைகளை இயக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்துகிறோம். இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திடமும் எமக்கான ஆதரவையும் நியாயத்தையும் கோருகிறோம். எல்லாமே எமக்கு அவசியமானவை.
கேள்வி: வடக்கு- கிழக்கில் NPP தீவிரமாக தன்னை விஸ்தரித்துள்ளதே. இந்த நிலையில் தமிழ்க்கட்சிகளின் நிலை?
பதில் : JVP க்கு 1970 களிலேயே வடக்கில் ஒரு சிறிய அளவிலான ஆதரவு இருந்தது. பிறகு 40 ஆண்டுகளாக ஒரு பெரிய வெற்றிடம். இப்பொழுது கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தன்னை விஸ்தரிப்பதற்கு JVP முயற்சிக்கிறது. இங்கே NPP இல்லை. JVP தான் உள்ளது. JVP யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாதான் சந்திப்புகளைச் செய்கிறார். தீர்மானங்களை எடுக்கிறார். அறிவிப்புகளை விடுகிறார். NPP யின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்கவை யாராவது அறிவீர்களா? தேர்தல் காலத்தைத் தவிர, வேறு நாட்களில் அவர் வருகிறாரா? ஆட்சியில் இருப்பதால், அந்த அனுகூலங்களை – அதிகார வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தன்னை விரிவாக்கம் செய்வதற்கு JVP முயற்சிக்கிறது. வரலாறு இப்படி எத்தனை காட்சிகளைக் கண்டுள்ளது. ராஜபக்ஸவினர் ஆடாத ஆட்டமா?
இதேவேளை தமிழ்க்கட்சிகள் தம்மைப் புதிதாக – காலத்துக்கு ஏற்றதாகச் செயற்பட வேண்டும் என்று காலமும் சூழலும் வலியுறுத்துகிறது. அதைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது காலக் கடமையாகும். நாம் காலத்தை உணர்ந்தும், முன் உணர்ந்தும் செயற்பட விளைகிறோம்.
கேள்வி: உங்களுடைய சமத்துவக் கட்சியின் அரசியல் எல்லை கிளிநொச்சிக்குள் மட்டுப்பட்டுள்ளதே. கிளிநொச்சிக்கு அப்பாலும் புலம்பெயர் நாடுகளிலும் அதனுடைய செயற்பாடுகள்?
பதில் : கிளிநொச்சிக்குள் எம்மை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. எமது தலைமைச் செயலகம் கிளிநொச்சியில் உள்ளதால் உங்களுக்கு அப்படித் தோன்றலாம். ஆனால், எமது செயற்பாட்டுப்பரப்பு வடமாகணம் முழுவதிலும் உண்டு. கிழக்கில் விரிவாக்க முயற்சிகளில் இருக்கிறோம். சமத்துவக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்கள் உள்ளனர். புலம்பெயர் நாடுகளில் பலர் எங்களோடு இணைந்து வேலை செய்கிறார்கள்; பங்களிப்புச் செய்கிறார்கள். மனித குலத்தில் எல்லோரும் ஏற்கக் கூடிய – யாரும் நிராகரிக்க முடியாத நடைமுறைகளையும் கொள்கையையும் கொண்டுள்ளது சமத்துவக் கட்சி.