தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் சி. ஜோசப் விஜய், தமிழகத்தின் 18ஆவது முதலமைச்சராக இன்று பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. "வந்தே மாதரம்..." பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது. அதன்பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தின் 18 ஆவது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
"சி.ஜோசப் விஜய் எனும் நான்..." என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த த.வெ.க. தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
முதலமைச்சர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அவருக்கு காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் ஆதரவளித்தன. வி.சி.க. நேற்று மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. தொடர்ந்து ஐ.யூ.எம்.எல். கட்சியும், கடைசி நேரத்தில் த.வெ.கவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது. அதன்படி, த.வெ.கவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட அதிகமாக ஆதரவு கிடைத்தது.
நேற்று மாலை 6.15 மணிக்கு விஜய்க்குத் தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஏற்கனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். அப்போது, 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.
தொடர்ந்து, அரசமைப்பு சட்டப் பிரிவு 164 இன் கீழ் விஜய்யை முதலமைச்சராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.