AmericaArticlesAsiaCanadaCommunityIndiaMain News

சிலிண்டர்களில் மனிதனை சிறைவைத்த கிருமி; காற்றின்றி திணறி சாகும் உலகின் இதயம்!

மரங்களில் இருந்துதான் இந்த ஒக்சிஜன் கிடைக்கிறது என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஒக்சிஜனை விட, மருத்துவத்திற்குப் பயன்படும் ஒக்சிஜனின் செறிவு மிக அதிகமாகும்.  

தண்ணீரைப் புட்டிகளில் அடைத்து மற்றவர்களுடன் பகிரும் பழக்கம் 1621ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது என்று சரித்திரம் சொல்கிறது.  புனித நீர் என்கிற பெயரில், சில குறிப்பிட்ட நீரூற்றுகளிலிருந்து 17ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்க குடியேற்றவாசிகள் புட்டிகளில் எடுத்துச் சென்றார்கள்.

இப்படியான இயற்கை நீரூற்றுகள் செல்வந்தர்கள் மற்றும் உயர் வர்க்கத்தினரிடையே ஒரு நாகரீகமாக மாறியது.  அமெரிக்காவில் இப்படி தண்ணீரை புட்டிகளில் அடைத்து விற்பது ஒரு தொழிலாக 1844ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  இவை எல்லாவற்றிற்கும் முன்னரே, அகத்திய முனிவர் சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நீரை காகம் போல் உருமாறிய பிள்ளையார் சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறாக ஓடியது என்று புராணக் கதையை சிலர் ஆதாரம் காட்டலாம்.  

நான் இன்னமும் தலைப்பிற்கே வரவில்லை.  அதற்கு முன் சில அடிப்படை விடயங்கள் சொல்லப்பட வேண்டும்.

அமெரிக்காவில் Poland pring ஃப்ரான்ஸ்சில் Evian மற்றும் Perrier போன்ற நிறுவனங்கள் கனிம நீரூற்றுகளிலிருந்து வரும் நீரை புட்டிகளில் அடைத்து, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து விற்றார்கள்.

  DuPont என்ற இரசாயன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய Nathanielyeth  என்ற பொறியாளர் 1973ஆம் ஆண்டு polyethylene terephthalate (PET)) என்ற நெகிழி (plastic) உருவாக்கி, அதற்கான காப்புரிமையைப் பெற்றார்.

 மருந்தகங்களில் விற்கப்பட்டுவந்த புட்டியில் அடைக்கப்பட்ட தண்ணீரை, மளிகைக் கடைகளுக்கு எடுத்து வந்தது PET நெகிழியிலிருந்து தயாரிக்கப்பட்ட புட்டிகள்.

ஒரு மனிதன் உயிர்வாழ, சுத்தமான நீர் மிக அவசியம்.  அதனால்தான், அடிப்படை மனித உரிமைகளில் அதுவும் ஒன்று என்று ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டிருக்கிறது.  புட்டிகளில் நீரை அடைத்து விற்றால், அடுத்தது என்ன?  மனிதனுக்கு மிக அவசியமான இன்னொரு பொருளான காற்றிற்கும் விலை சொல்லப் போகிறார்கள் என்று ஐம்பது வருடங்களுக்கு முன்னரே குரல்கள் எழுந்தன.  ஆனால், அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்று நினைத்து, யாரும் அதனைப் பெரிதாக எடுக்கவில்லை.

சுத்தமான காற்று என்று பொதுவாக நாம் சொல்லும் போது, மாசுக்கள் அற்ற காற்று என்பது ஒன்று.  இருந்தாலும், அதில் ஐந்தில் ஒரு பகுதி ஒக்சிஜன் – என்ற பிராணவாயு – இடம்பெற்றிருக்க வேண்டுமென்பது எல்லோரதும் விருப்பம். இந்த ஒக்சிஜன் எமக்குத் தாவரங்களிலிருந்து கிடைக்கிறது என்பது தெரியும். ஆனால், மரங்களில் இருந்துதான் இந்த ஒக்சிஜன் கிடைக்கிறது என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

உலகில் உற்பத்தியாகும் 70 சதவீதமான ஒக்சிஜன் நீர் நிலைகளின் கரைசல்களில் இருந்து தோன்றுகிறது.  இதன் தோற்றத்திற்கு, கடல் சார் மிதவை வாழிகள் (Planktonn) மிக முக்கிய பங்காற்றுகின்றன.  அதற்காக மரங்கள் தேவையில்லை என்று நாம் சொல்ல வரவில்லை.  மரங்களை விட இந்த நுண்ணுயிர்கள்தான் ஒக்சிஜன் உருவாகுவதற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன.  

நாம் சுவாசிக்கும் காற்றின் மிகப்பெரும் பகுதி நைட்ரஜன் (அல்லது நைதரசன்) வாயுவாகும்.  ஐதரசன் மற்றும் ஹீலியம் வாயுக்களை அடுத்து பிரபஞ்சத்தில் மூன்றாவது மிக அதிகளவில் காணப்படும் வேதியியல் தனிமமான ஒக்சிஜன் எங்கும் பரந்திருக்கிறது.  வாயுவாக அல்லாமல் உலோகங்களுடனும் மற்றைய பதார்த்தங்களுடனும் இரண்டறக்கலந்து, ஒக்சைட் வடிவில் காணப்படுகிறது. எமது உடலில் அதிகப்படியாக இருக்கும் உலோகம் (பலரும் நினைப்பது போல் இரும்பு அல்ல) கல்சியம், ஒக்சிஜனுடன் கலந்துதான் காணப்படுகிறது.

இதை முதலில் தனிமைப்படுத்தி அறிந்து கொண்டவர் என்ற பெருமை, 1775 ஆம் ஆண்டு இதைப்பற்றி “An Account of Further Discoveries in Air” என்ற கட்டுரை எழுதிய துழளநிh Pசநைளவடநல அவர்களுக்குச் சென்றாலும்,  1772ஆம் ஆண்டே சுவீடன் நாட்டு விஞ்ஞானி Carl Wilhelm Scheele சில பரிசோதனைகள் மூலம் காட்டியிருந்தார்.  இதுகுறித்து அவர் எழுதிய கட்டுரை 1777ஆம் ஆண்டுதான் வெளியாகியது.

இந்த இரண்டு விஞ்ஞானிகளைக் காட்டிலும், Antoine Lavoisier என்ற ஃப்ரெஞ்ச் விஞ்ஞானிதான் ஒக்சிஜன் என்பதன் இரசாயனப் பாவனையை முதன் முதலில் இலகுவாக விளக்கியவர்.  நாம் பயன்படுத்தும் மெட்ரிக் அளவு முறைக்கு வழி சமைத்தவர்களில் இவரது முக்கிய பங்கும் இருக்கிறது. இதற்கெல்லாம் அவருக்குக் கிடைத்த பரிசு, அவரது 50ஆவது வயதில் – 1794ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி – ஃப்ரெஞ்ச் புரட்சிவாதிகளால் அவரது தலை துண்டிக்கப்பட்டது.

நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியமான விடயங்களில் ஒக்சிஜன் மிக முக்கியமானது என்பதைக் கண்டறிந்த ஆரம்ப விஞ்ஞானிகளில் ஒருவரான Antoine Lavoisier  இறப்பதற்கு ஒக்சிஜன் காரணம் என்று சொல்ல முடியாது என்றாலும், கடந்த ஒன்றரை வருடங்களாக மனித குலத்தில் பலர் உயிரிழக்க ஒக்சிஜன் ஒரு காரணமாக இருக்கிறது.  

ஒரு நுண்ணுயிர், இல்லை அதற்கு உயிரே இல்லை,  இருந்தாலும் மனிதன் எவ்வளவு பலவீனமானவன் என்பதை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல்லி வருகிறது.

மனிதன் உயிர் வாழ, ஒக்சிஜன் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.  சமீபத்திய வாரங்களில், COVID-19  தொற்று மிக வேகமாக இந்தியாவில் பரவியதைத் தொடர்ந்து, அதன் முக்கியத்துவம் இன்னும் பன்மடங்கு பெரிதாக வெளிப்படுத்தப்படுகிறது.  இந்தியாவின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு சிறப்பு புகையிரதங்கள் ஒக்சிஜனை எடுத்துச் செல்கின்றன.  2019ஆம் ஆண்டு மட்டும் 5 மில்லியன் கன மீட்டர் (cubic meter) தொகை ஒக்சிஜனை ஏற்றுமதி செய்த இந்தியா, தனது மக்களின் சுவாசத் தேவைக்கு ஒக்சிஜன் கிடைக்காமல் திண்டாடுகிறது.

இந்தியா மட்டுமல்ல,  COVID-19 தொற்றுநோய் காரணமாக, பிரேசில், பெரு, நைஜீரியா, ஜோர்டன், இத்தாலி போன்ற வளர்ந்துவரும் நாடுகள், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மற்றும் கலிஃபோர்னியா மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளும் ஒக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர் கொண்டுள்ளன.

இந்தப் பற்றாக்குறைகள் எதிர்பாராத ஒன்றல்ல.  ஆனால், மருத்துவமனைகளில் எவ்வளவு ஒக்சிஜன் தேவைப்படும், அந்தத் தேவையை எப்படி நாம் கையாளலாம் என்பதை சரியாகக் கணிக்க முடியாமல்தான் பல மருத்துவமனைகள் திண்டாடுகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஒக்சிஜனை விட,  மருத்துவத்திற்குப் பயன்படும் ஒக்சிஜனின் செறிவு மிக அதிகமாகும்.  

எமது வளி மண்டலம் பெரும்பாலும் நைதரசன் வாயுவால் நிரம்பியுள்ளது.  சுமார் 21 சதவிகிதம் மட்டுமே ஒக்சிஜன் வாயுவாகும்.  மருத்துவ ஒக்சிஜன் குறைந்தபட்சம் 82 சதவிகிதம் தூய ஒக்சிஜன் ஆகும்.  மருத்துவ ஒக்சிஜன் – பொதுவாக – ஒரு வேதியியல் செயல்முறை மூலம் பெறப்படுகிறது.  அதன் நவீன பயன்பாடு, முதலாம் உலகப் போருடன் ஆரம்பமாகியது என்பது வரலாறு.

Mustard Gas  என்று பொதுவாக அழைக்கப்படும் Sulfur mustard  என்ற வேதிப் பொருளை, ஜேர்மனியர்கள் ஐரோப்பாவில் பயன்படுத்தினார்கள்.  ஒக்சிஜன் செறிந்த காற்றை நேரடியாக சுவாசிக்க வைப்பதன் மூலம், இந்த வேதிப் பொருளை சுவாசித்த படைவீரர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.  

அதேபோல, COVID-19  தொற்று ஏற்பட்டவர்கள் சுவாசிக்க சிரமப்படும்போது மருத்துவ ஒக்சிஜன் அவர்களது உயிர்காப்பு நண்பனாகிறது.  COVID-19  தொற்று ஏற்பட்டு Pneumonia போன்ற நுரையீரல் அழற்சி அல்லது அது போன்ற சுவாச நோய்களுக்கு ஒக்சிஜன் சிகிச்சை மிகவும் முக்கியமானது.  ஒருவரின் இரத்தத்தில் உள்ள ஒக்சிஜனின் அளவு குறைந்துவிட்டால், உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க ஆரம்பித்துவிடும். இதுவே  COVID-19  தொற்று ஏற்பட்டவர் மரணிக்கவும் காரணமாகிறது.

ஒக்சிஜன் ஒருவருக்குத் தேவைப்பட்டபோது கிடைக்குமா, இல்லையா என்பது பல்வேறு விடயங்களில் தங்கியுள்ளது.  இருப்பிடத்தைப் பொறுத்து ஒக்சிஜன் விநியோக அமைப்புகள் வித்தியாசப்படுகின்றன. மருத்துவ நிலையம் சிறியதா – பெரியதா, நகர்ப்புறத்தில் உள்ளதா அல்லது கிராமப்புற சூழலில் அமைந்துள்ளதா மற்றும் அதிக வருமானம் கொண்ட சமூகமா – இல்லையா என்பதைப் பொறுத்து இது மாறுபடுகிறது.

உலகெங்கிலும் உள்ள முக்கிய சுகாதார வசதிகள், பாரிய ஒக்சிஜன் தாங்கிகளை நம்பியுள்ளன.  இந்த அமைப்பில்,  மருத்துவமனைகளிலுள்ள ஏராளமான தொட்டிகளில் ஒக்சிஜன் திரவ நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.  தேவைக்கேற்ப, ஒக்சிஜன் குழாய்கள் மூலம் மருத்துவமனையின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்த வசதி செய்யப்பட்டிருக்கும்.

இந்த அமைப்பை உருவாக்க அதிக செலவாகும் என்பதால்  சிறிய மருத்துவ நிலையங்களில் இவற்றை நாம் பார்ப்பது அரிது.  அத்துடன், ஒக்சிஜன் தொட்டிகளை நிரப்புவதற்கு சந்தையில் ஒப்பீட்டளவில் ஏகபோக உரிமையைக் கொண்ட எரிவாயு நிறுவனங்களுடன் உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற காரணத்தால், வளர்ந்துவரும் நாடுகளில் இப்படியான வசதி மிகக் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கு பதிலாக,  கிராமப்புற அல்லது வருமானம் குறைந்தவர்கள் வாழுகின்ற சமூகங்களிலுள்ள மருத்துவமனைகளில் ஒக்சிஜன் பொதுவாக சிலிண்டர்களில் சேமித்து வைக்கப்படுகின்றன.  இவற்றையும் எரிவாயு நிறுவனங்கள்தான் பொதுவாக நிரப்புகின்றன.  இந்த சிலிண்டர்களில் ஒக்சிஜன் அதிக அழுத்தத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த சிலிண்டர்கள் கனமானவை என்ற காரணத்தால், மிகவும் ஆபத்தானவை. பல இடங்களில் சிலிண்டர்களால் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.  அது தவிர, ஒரு ஒக்சிஜன் சிலிண்டர் மூலம் ஒரு வயதுவந்த நோயாளிக்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் போதுமான ஒக்சிஜனை மட்டுமே வழங்க முடியும்.

இவற்றிற்கும் மேலாக, எமது காற்றிலிருக்கும் ஒக்சிஜனை செறிவூட்டுவதன் மூலமும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியும்.  Oxygen concentrator எனப்படும் ஒக்சிஜன் செறிவூட்டிகள் 1970ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளன.  இந்த இயந்திரங்களில் zeolite  எனப்படும் படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  காற்றிலிருந்து நைதரசன் வாயுவை இந்தப் படிகங்கள் உறிஞ்சி, செறிவூட்டப்பட்ட ஒக்சிஜனை நாசி முனைகளுடன் இணைக்கப்பட்ட குழாய்கள் வழியாக நோயாளிக்கு வழங்குகின்றன.  பொதுவாக இந்தக் கருவி மூலம் இரண்டு நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்க முடியும். ஆனால் அவை இயங்குவதற்குத் தொடர்ச்சியான மின்சாரம் தேவைப்படுகிறது.  இப்போது அவற்றின் சிறிய கருவிகள் தனி ஒருவர் வீட்டில் பயன்படுத்தக்கூடிய வகையில் மின் கலம் மூலமோ,சூரிய ஒளியினாலோ இயக்கப்பட வடிவமைக்கப்பட்டுள்ளன.

COVID-19  தொற்றுநோய் அதி வேகமாகப் பரவ பரவ, அதனைக் கட்டுப்படுத்த சில நாட்டு அரசுகள் கவனக்குறைவுடன் செயல்படுவதால் அல்லது மூட நம்பிக்கையுடன் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனைகள் போல இருப்பதால்,ட இந்த ஒக்சிஜன் கருவிகளைத் தாமே பெற்று வீட்டிலேயே மருத்துவம் பார்க்கலாம் என்று பலர் தயாராகிவிட்டார்கள்.  

தண்ணீரைப் புட்டியில் அடைத்து விற்றார்கள்…. நாங்கள் வாங்கினோம்.  நல்ல காற்றை சுவாசிக்க ஒரு கருவியை விற்கிறார்கள்இ நாங்கள் இப்போது வாங்குகிறோம்….. அடுத்தது சூரிய ஒளிக்கும் அந்த நிலை தோன்றுமா?

Related Articles

Back to top button