உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் தூதரக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிகுந்த எச்சரிக்கையுடன் தூதரகம் மூடப்படுகிறது. தூதரக ஊழியர்கள் தங்குமிடமித்தில் இருக்க அறிவுத்தப்படுகிறார்கள்.
வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை கேட்டால் கீவ் நகரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், கீவ் நகரில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை தினசரி நிகழ்வாக்கி விட்டது என்றாலும், இந்த எச்சரிக்கை அதன் தனித்தன்மையால் அசாதாரணமான ஒன்று.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கினார். பிரையான்ஸ் பகுதியில் உள்ள ஆயுதக்கிடங்கின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டிய மறுநாள் இந்த வான்வழி தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது.
முன்னதாக, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்று புதின் தொடர்ந்து எச்சரித்து வந்தார். எனினும், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வந்தன. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை பயன்படுத்த உக்ரனைக்கு அனுமதி வழங்கினால், ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான போராக அது மாறும் என்று புதின் எச்சரித்திருந்தார்.
மேலும், அணு ஆயுத பயன்பாட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப் போவதாக ரஷ்யா கூறி வந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட அறிக்கையில், “தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப எங்களது அணு ஆயுதக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவது முக்கியம். அணு ஆயுதங்களை தவிர்ப்பதற்கான வழிகளையே நாங்கள் பார்க்கிறோம்.
ஆனால், அவற்றை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடும். அணு ஆயுதம் இல்லாத நாடு அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் இணைந்து போரில் ஈடுபட்டால் அது கூட்டு தாக்குதலாகவே கருதப்படும்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.