பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 2 பயணிகள் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவரில் இருந்து பராசினார் நகருக்குச் சென்ற ஒரு பயணிகள் வாகனத்தின் மீதும், பராசினாரில் இருந்து பெஷாவர் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு பயணிகள் வாகனத்தின் மீதும் குர்ரம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, "கடந்த வாரம் கடினமாகவும் வருத்தமாகவும் இருந்தது. இப்போது குர்ரமில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாங்கள் இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சம்பவத்தைப் பார்க்கிறோம். கைபர் பக்துன்வா அதிகாரிகள், கைபர் பக்துன்வா இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதலமைச்சர் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. கைபர் பக்துன்வா எங்கள் மாகாணங்களில் ஒன்று. அது எங்கள் நாட்டின் ஒரு பகுதி. நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம். எங்களால் முடிந்தவரை நாங்கள் உதவுவோம்" என தெரிவித்தார்.
சம்பவம் குறித்து விவரித்த கைபர் பக்துன்வா அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாரிஸ்டர் டாக்டர் சைஃப், "முதலில் போலீஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டனர். பின்னர் பயணிகள் வாகனம் இரு தரப்பிலிருந்தும் குறிவைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது" என தெரிவித்தார். கைபர் பக்துன்வா தலைமைச் செயலாளர் நதீம் அஸ்லாம் சௌத்ரி, "இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அப்பாவி பயணிகளைத் தாக்குவது கோழைத்தனமான, மனிதாபிமானமற்ற செயல். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கைபர் பக்துன்வா முதல்வர் அலி அமீன் கந்தாபூர், "தலைமை செயலாளர், மாகாண சட்ட அமைச்சர் மற்றும் அப்பகுதியின் எம்என்ஏ மற்றும் எம்பிஏ ஆகியோர் அடங்கிய குழு உடனடியாக குர்ரம் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். மாகாணத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் பாதுகாக்க ஒரு மாகாண நெடுஞ்சாலை காவல்துறையை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாகாண அரசாங்கம், காவல் துறை மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அப்பாவி குடிமக்களை குறிவைப்பது மிகவும் வருந்தத்தக்கது; கண்டனத்திற்குரியது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு, பாதுகாப்புப் படைகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் கைபர் பக்துன்வாவின் பன்னுவின் மாலி கேல் பகுதியில் ஒரு சோதனைச் சாவடியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.