தீபாவளியென்றால் மக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு போவார்கள் வெடி கொளுத்துவார்கள் இதுதான் காலகாலமாக எங்கள் ஊர்களில் நடைபெற்றுவரும் சம்பிரதாயமாக இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவிலோ அதற்கு நேர்மாறு. தீபாவளி என்றவுடம் அரசியல்வாதிகள் தான்பல்லினத்தவர்களினதும் கோயில் வாசலெங்கும் செல்வார்கள்.அவர்களுக்கு கோயில் மணியகாரர்கள் “ தலைப்பாகை” கட்டி அழகு பார்ப்பார்கள்;. இதுதான் ஆஸ்திரேலியாவில் பல கோயில்களில் நடைபெற்று வருகின்றது. இனி விடயத்துக்குள் வருவோம்.
சிட்னியில் ஈழத்தமிழர்களின் முக்கியமான இடங்களில் அல்லது அடையளங்களில் ஒன்று, சிட்னி முருகன் கோயில் . தேர்தல் காலம் நெருங்குவதால், ’தீபாவளி வாழ்த்தைச் ஒருக்கா சொல்லிப்போட்டு வாக்குகளுக்கு அடித்தளம் போட்டுவிட்டு வருவோம்’ என்ற ரீதியில் சிட்னி முருகன் ஆலயத்துக்கு ஒரு விசிட் அடித்திருக்கிறார் நாட்டின் பிரதமர் அல்பானீஸ். ஆனால் பிரதமரின் வருகையும் அன்று நடந்த சம்பவங்களும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளன.
பிரதமரின் நகர்வலம் குறித்த செய்தியை பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அன்ரூ சார்ல்ஸ்டனின் அலுவலகத்துக்கு இரண்டு கிழமைக்கு முன்னதாகவே அனுப்பி வைத்துள்ளது பிரதமரின் அலுவலகம். அன்ரூ சார்ல்ஸ்டனின் அலுவலகத்துக்குள் ஊடாடித்திரிந்த ரிஸி ரிஸிகேசன் என்பவர் இந்தத் தகவலை கோயில் தலைவரிடம் தெரிவித்து ’பிரதமர் கோயிலுக்கு வரப்போறார். ஆனால் தகவலை அடக்கி வாசிக்கவும்’ என்றும் சொல்லியுள்ளாராம்.’நான் தான் பிரதமரரை அழைத்து வருகிறேன். வெளியே தெரிந்தால் குழம்பிவிடும்’ என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளாராம். அத்துடன் ’பிரதமரின் வருகை நிகழ்வை நான் தான் தொகுத்து வழங்குவேன்’ என்றும் ரிஸி கட்டளை பிறப்பித்துள்ளார். அவருடைய கட்டளையை கோயில்காரர்களும் பின்பற்றியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, பிரதமர் வருவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக அன்ரூஸ் சார்ல்ஸடன், கோயில் நிர்வாகத்தின் அரசியல் தரப்புகளுடன் பேச்சு நடத்தும் ஒருவரை தொடர்பு கொண்டு , ’பிரதமர் கோயிலுக்கு வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்தானே? மக்கள் அதிகளவு வந்தால் தான் பிரதமருக்கு மதிப்பாக இருக்கும்’ என்று முன்னர் சொன்னதற்கு மாறாக கேட்டிருக்கிறார். கோயில்காரர் அதற்கு பின்னர் தான் அடித்து பிடித்து ‘ பிரதமர் கோயிலுக்கு வருகிறார். எல்லோரும் வாங்கோ வாங்கோ’ என்று பலருக்கும் மின்னஞ்சலில் தகவலை அனுப்பினர்.
ஒரு மாதிரி அடிச்சு பிடிச்சு கூட்டத்தை கூட்டி ஒரு பூசையை போட்டு விபூதியை மட்டும் கோயில்காரர் பூசிவிட்டனராம்.
இந்த இடைநடுவில் ’நான் தான் தொகுத்து வழங்குவேன்’ என்ற ரிஸிகேசன், பிரதமரின் சட்டையை வாலைப் போல பிடித்துக்கொண்டு திரிந்திருக்கிறார். பலர் சாடைமாடையாகச் அவர் கேட்டபாடில்லையாம். பூசை முடிந்த பின்னர் நிகழ்வு நடைபெறும் மேடையில் பிரதமர் , அன்ரூஸ் சார்ல்ஸ்டன் அகியோர் ஏறி அமர்ந்தனர். அதன் பின்னர் அந்தப்பிரதேசத்தில் இருந்து தெரிவான மாநில நாடாளுமன்ற உறுப்பினரும் மேடையேறி பிரதமரின் அருகில் அமர முற்பட்டார். அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த ரிஸிகேசன், அவரை இழுத்து தள்ளிவிட்டு அந்தக் கதிரையில் தான் அமர்ந்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்தை அவதானித்த மக்கள் சத்தமாக உச்சு கொட்டத் தொடங்கிவிட்டனர். இந்த சம்பத்தை தொடர்ந்து கோபத்தின் உச்சிக்கு சென்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர் வெளியேறி நடக்கத் தொடங்கிவிட்டார். பின்னர் பலர் சென்று அவரை சமாதானப்படுத்தி இருக்கின்றனர்.
“நான் இந்தக் கோயிலுக்கு 25 வருடங்களாக வருகின்றேன். நீர் யார் என்னைத் தள்ளிவிட? ”- என்று அவர் ரிஸியை பார்த்து கேட்டார். இத்தனை நிகழ்வுகளையும் பிரதமர் அவதானித்துக்கொண்டிருந்தார். அதன் பின்னர் கோயில் நிர்வாகம் கதிரை தேடி கொண்டு வந்தனர். அதன்பின்னர் நிகழ்வுகளை தொகுப்பதற்காக ஒலிவாங்கிக்கு முன் வந்த ரிஸிக்கு அறிவிப்புச் செய்ய ஒரு நிகழ்வுகளும் இருக்கவில்லை. கலசார நிகழ்வுகள் ஏதுமற்ற நிலையில் பொன்னாடையால் போர்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டனர் பிரதமரும் அவரது குழுவினரும். ஆனால் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலிய ப்பின் மட்டும் ஒரு மணி நேரமாக தனக்கு நடந்த கொடுமைகள் குறித்த மக்களை தனித்தனியாக அழைத்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி தனக்கு இழைக்கப்பட்ட தவறுக்கான மன்னிப்புக் கடிதம் தரவேண்டும் என்று கோயில நிர்வாகத்திடமும் அவர் வலியுறுத்தினார். ஆனால் கோயில் நிர்வாகமோ’ரிஸி எங்கட ஆள் இல்லை. அவர் லேபர் கட்சியை சேர்ந்தவரே’ என்று தங்கள் பக்க நியாயத்தைத் தெரிவித்தாக தகவல். குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்டது போல, பிரதமர் வருகையால் கோயிலுக்கு பிரபலம் கிடைக்கும் என நினைத்து கடைசியில் கோயில் நிர்வாகம் சேறு பூசிக்கொண்டதுதான் மிச்சம்.
ஜே.ஜே