ஜெரா
இது மாவீரர் மாதம். தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்திருப்பின் இந்நாட்களுக்கு உணர்வுபூர்வமான அர்த்தம் கிடைத்திருக்கும். தம் பிள்ளைகளை நில மீட்புக்காக உவந்தளித்தவர்களின் பெற்றோர் உன்னதமிக்கவர்களாக மதிப்பளிக்கப்பட்டிருப்பர். தம் பிள்ளைகளைப் போருக்குக் கொடுத்தவர்களின் பெற்றோர் , தனித்து விடப்படாதிருப்பர்.
அவர்களை வறுமைக்குள் வாடவிடாது, பிரகாசமிக்க வாழ்க்கையொன்றினைப் புலிகள் உருவாக்கிக்கொடுத்திருப்பர். ஆனால் புலிகளின் மௌனிப்புக்குப் பின்னர், தம் பிள்ளைகளைப் போருக்குக் கொடுத்த பெற்றோரின் வாழ்க்கையும் அனேகமாக மௌனித்துவிட்டது. இருள் கவிழ்ந்துவிட்டது. அப்படியாக இருளில் சிக்கிக்கொண்ட ஒரு தாயின் மெய்க்கதைதான் இது.
வயது 79ஐ நெருங்கிக்கொண்டிருக்கும் முத்தையா முனியம்மா வவுனியா வடக்கின் எல்லைக் கிராமமான முதுரம்பிட்டியில் வசிக்கிறார். அந்தக் கிராமத்தில் நேற்றுப் பிறந்த குழந்தைக்கும் முனியம்மாவைத் தெரிந்திருக்கும் அளவிற்குப் பிரபலமானவர். அன்பாகப் பேசுவதிலும், காயோ, பழமோ தன்னிடமிருக்கும் எந்த உணவையும் பகிர்ந்துகொடுப்பதிலும்தான் அவர் இத்தகைய பிரபலத்தைப் பெற்றார்.
இப்போது படத்திலிருக்கும் குடிசையில் தனித்துவிடப்பட்டிருக்கும் இவரின் பிள்ளைகள், கணவன் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் சுவரில் நினைவுப்படங்களாக மாட்டிவைக்கப்பட்டுள்ளனர். அயலிலிருக்கும் தோட்டங்களுக்கு நாளாந்த கூலி வேலைக்கு செல்லும் முனியம்மா, கூலிப்பணத்தைக் கொண்டே வாழ்க்கை நடத்துகிறார்.
அரசு கொடுக்கும் வீட்டுத்திட்டமோ, ஏனைய நிவாரண உதவிகளோ இவரை நாடிவருவதில்லை. புள்ளியிடல் அடிப்படையில் மூன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களுக்கே அரச நிவாரணங்களின் முன்னுரிமை என்கிற இலங்கையில் எழுதப்படாத சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர் முனியம்மா தான். எவ்வழியில் பார்த்தாலும் தனியே வாழும் ஒருவர் இந்தப் புள்ளியிடலை நெருங்கமுடியாது.
இந்தப் புள்ளியிடல் சூட்சுமத்தை விளங்கிக்கொள்ளாத முனியம்மா, சில பல முயற்சித் தோல்விகளுக்குப் பின்னர், அரச உதவித் திட்டங்களுக்கு அலைவதை நிறுத்திக்கொண்டார். தனது பிள்ளைகள் தன்னோடு இருந்தால், இப்படி அலையவேண்டியிருக்காது. அதேவேளை இது போன்ற புள்ளியிடல்களில் முதன்மைநிலைகளையும் பெற்றிருக்கலாம் என்ற முடிவோடு, கூலி வேலைக்கே திரும்பிவிட்டார். இப்போதைக்கு உடலில் இயலுமை இருக்கும் வரைக்கும் இந்த வேலைகளில் கிடைப்பதை கொண்டு வாழ்ந்துவிடவேண்டும். இயலுமை உள்ளநேரமே இறந்துவிடவேண்டும் என்பது அவரின் மிச்ச வாழ்வினது இலட்சியமாக இருக்கிறது.
1995ஆம் ஆண்டுக்கு முன்னரான முனியம்மாவின் குடும்பம் பற்றி அவர் நினைவுமீட்கத் தொடங்கும்போது, முகமெல்லாம் ஆயிரம் நட்சத்திரங்கள் பிரகாசிக்கத் தொடங்குகின்றன. மிகுதியான சந்தோசம் அவரை ஆட்கொள்ளத் தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.
முனியம்மாவின் கணவர் கடுமையான உழைப்பாளி. அவரின் கடின உழைப்பினால், தன் ஒரே மகள் விஜயகுமாரியையும், ஒரே மகனான விஜயகுமாரையும், மனைவி முனியம்மாவையும் எவ்விதக் குறைகளுமின்றி கவனித்து வந்தார். அந்தக் கிராமத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடும், அன்போடும் வாழ்ந்த குடும்பங்களில் முதன்மையானது முனியம்மாவின் குடும்பம்.
முத்தையா – முனியம்மா இருவருமே அதிகம் படிக்காதவர்கள் என்றபோதிலும், தம் இரு பிள்ளைகளையும் நன்றாகக் கல்வி கற்கச் செய்துவிடவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தனர். பெற்றாரின் எண்ணத்தைப்போலவே பிள்ளைகளும் நன்றாகப் படித்தனர். கிராமப்புறப் பாடசாலையாக இருந்தபோதிலும், கல்விக்குக் குறைவிருக்கவில்லை.
1995ஆம் ஆண்டுகளுக்கு முன்பான வவுனியா வடக்கு எல்லைக்கிராமங்களின் வாழ்க்கை என்பது மிகுந்த அச்சுறுத்தலானது. வயல்களுக்கு செல்லும் ஆண்கள் வீடு திரும்பமாட்டார்கள். மாடு சாய்க்கச் சென்ற இளையவர்கள் வீடு திரும்பமாட்டார்கள். ஒரு கிராமத்திலிருந்து மற்றைய கிராமங்களுக்கு வேலைக்காக செல்பவர்கள் கூட வீடு திரும்புவது என்பது பலத்த சந்தேகம்தான்.
எல்லைக்கிராமங்களில் குடியேற்றம் செய்யப்பட்டிருந்த சிங்கள காடையர்களும், அவர்களோடு இணைந்த இராணுவத்தினரும், காடுகளுக்குள் வந்து பதுங்கியிருந்து கொண்டு, வேலைக்குச் செல்லும் தமிழர்களை பிடித்துச் செல்வது, சுட்டுக்கொல்வது, மாடுசாய்க்க சென்றவர்களை மாடுகளோடு சாய்த்துச் சென்று, காட்டுக்குள் வைத்து, அவர்களின் கழுத்தை அறுத்து மரங்களில் கொழுவிவிட்டுச் செல்வது, கைதுசெய்யும் ஆண்களை மரங்களில் கட்டிவைத்துவிட்டுச் செல்வது, ரயர்களை எரியூட்டி அதற்குள் தூக்கிப்போட்டு எரித்துவிட்டுப் போவது என பல்வேறு நாசகார வேலைகளை அரங்கேற்றினர்.
இந்த வகையில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் எந்தப் பதிவுமில்லை. செய்தியுமில்லை. இவ்வளவு அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுதான் அங்கே தமிழர்கள் வாழ்ந்தனர். இந்த அநியாயங்களைப் பார்த்து இளைஞர் யுவதிகள் கொதித்துப் போயிருந்தனர். எந்த வழியிலாவது போராடுவதற்கு அவர்கள் தயாராயிருந்தனர்.
இப்படியாக மக்களை போராடத் தூண்டிய காலப்பகுதியில்தான் விடுதலைப் புலிகள் முதிரம்பிட்டி கிராமத்தைக் கடந்து சென்று, பட்டிக்குடியிருப்பு என்கிற இடத்தில் முதல் முகாமை அமைத்தார்கள். அந்த முகாம் வரவிற்குப் பிறகு, காட்டுமிராண்டிகளின் அச்சுறுத்தல் சற்றுக் குறைந்தது. இதனால் ஆயுதங்களோடு வலம்வந்த புலிகள், மக்களுக்குப் மிகப் பிடித்தவர்களானார்கள்.
தங்களைப் பாதுகாக்க வந்த புனிதர்களாக மக்கள் அவர்களைப் பாதுகாக்கத் தொடங்கினர். அவர்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினர். இளைஞர்கள் ,யுவதிகள் புதிய போராளிகளாக மாறுவதில் அவ்வளவு ஆர்வம் காட்டினர். அந்தவகையில் முனியம்மாவின் மகளும் விரைவாகவே இணைந்துகொண்டார். ஆரம்பத்தில் தங்கள் ஒரே மகள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதில் விருப்பமில்லாதவர்களாக இருந்தபோதிலும், சிறிது காலத்தில், புலிகள் அமைப்பில் அனைவரும் இணையவேண்டிய தேவையை அந்தக் குடும்பம் விளங்கிக்கொண்டது. மாதந்தோறும், தம் மகள் இருக்கும் முகாமைத் தேடிப்பிடித்து, உலருணவுப் பொருட்களை வழங்கிவிட்டு வருவதை முனியம்மாவின் குடும்பம் ஒரு வழக்கமான செயற்பாடாக மாற்றியிருந்தது.
இப்படியான காலப்பகுதியில்தான் ஜெயசிக்குறு படை நடவடிக்கையை சந்திரிக்கா அம்மையார் தொடங்கினார். அந்த நடவடிக்கையின் முதல் இலக்காக இருந்ததே முனியம்மா வசித்த எல்லைக்கிராமம் தான். எனவே அந்த எல்லைக்கிராமங்களிலிருந்த அனைத்து மக்களும் ஒரு சில மணிநேரங்களில் தம் அனைத்து உடைமைகளையும் விட்டு வன்னியின் பல்வேறு பாகங்களுக்கும் இடம்பெயரலாயினர்.
மடு, நட்டாங்கண்டல், ஒட்டுசுட்டான், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், அக்கராயன் எனப் பல கிராமங்களுக்கும் இடம்பெயர்ந்தனர். முனியம்மாவின் குடும்பம் வள்ளிபுனத்திற்கு இடம்பெயர்ந்தது. வள்ளிபுனம் பாடசாலையில் முனியம்மாவின் குடும்பம் தங்கியிருந்தபோதுதான், சில பெண் போராளிகள் அவரைத் தேடி வந்தனர். நோய்வாய்ப்பட்டு படுக்கையிலிருந்து முத்தையாவைப் பார்த்ததும் அவர்களால் அந்தச் செய்தியைச் சொல்லமுடியவில்லை. நலம் விசாரித்ததோடு திரும்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர் முகாம் தலைவரோடு உரையாடி, பிரதேச அரசியல்துறை பொறுப்பாளரையும் அழைத்து வந்து, “அம்மா உங்கட மகள் மாவீரர் ஆகீற்றா” என்கிற செய்தியை தயங்கித் தயங்கிச் சொல்லிவிட்டனர். அந்த செய்தியைக் கடந்து சில நாட்களிலேயே முத்தையாவும் இறந்துபோனார். அதற்குப் பிறகு தன் மகனோடு உடைந்துபோனதொரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார் முனியம்மா.
2001ஆம் ஆண்டு ஓயாத அலைகள் படை நடவடிக்கையைப் புலிகள் நடத்தினர். ஒரே இரவில் முனியம்மாவின் கிராமமும் புலிகளிடம் விழுந்தது.
இடப்பெயர்வுக்குள்ளேயே இளைஞனாக வளர்ந்து விட்ட முனியம்மாவின் மகனோடு 2002ஆம் ஆண்டில் மீளவும் ஊர்திரும்பினார். ஊர் திரும்பியதும், மகன் தாயைப் பார்த்துக்கொண்டார். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எல்லை காக்கும் போராளிகளுக்கு உதவியாக செல்லும் பணி அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பணியிலீடுபடுபவர்களை எல்லைப் படை வீரர்கள் என்று அழைத்தனர். 2005 ஆம் ஆண்டு முனியம்மாவின் மகன் உழவு இயந்திரமொன்றில் பண்ணை வேலைக்காக எரு ஏற்றிக்கொண்டு சென்றார். அவருடன் சேர்ந்து மரியான், சுரேஸ் ஆகியோரும் சென்றனர். அவர்களிடம் எரு அள்ளப் பயன்படும் மண்வெட்டியும், எரு அள்ளிக்கொட்டும் கூடையும், ஒரு உமல் பையும், அதற்குள் தேநீர் போத்தல் மாத்திரமே இருந்தது. இந்த உழவு இயந்திரத்தை இலக்குவைத்து இலங்கை அரச படைகளின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் முனியம்மாவின் ஒரே நம்பிக்கையாக இருந்த ஒரே மகனும் உடல் சிதறி இறந்துபோனார்.
அதற்குப் பிறகு நடந்தவற்றை முனியம்மால் சொல்லவும் முடியவில்லை. கட்டுரையாளரால் கேட்கவும் முடியவில்லை. 2009 இடப்பெயர்வு, 2011 மீள் குடியேற்றம், அதற்குப் பின்னரான அவரைத் தொடரும் வறுமையும் தனிமையும், அவரின் 79 வருட வாழ்வை நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வின் மீதான எந்தப் பிடிமானமும் இல்லாது கைவிடப்பட்டிருக்கும் பல்லாயிரம் மாவீரர்களின் பெற்றோரின் மொத்த சாட்சியமாக இருக்கிறார் முனியம்மா.
’போருக்குப் பிள்ளைகளைக்
கொடுத்த வானம் இன்னமும் அழுதுகொண்டிருக்கிறது’ – என்கிற விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக் கவிதையின் வாழும் சாட்சியமாகவும் முனியம்மா நம் முன் இருக்கிறார்.
..