அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கியமையை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அந்த விமர்சனத்தின் போது, ‘நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் (வயது 54) சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கிலும், பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டொலர்கள் வரி ஏய்ப்பு செய்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருப்பவர் பொது மன்னிப்பு மூலம் குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை இரத்து செய்ய முடியும். ஆனால் தனது மகனுக்கு அவ்வாறு மன்னிப்பு வழங்கமாட்டேன் என ஜோ பைடன் கூறி வந்த நிலையில் தற்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இவ்வாறான நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கியது போன்று 2021 இல் தாம் ஆட்சியை இழந்தபோது வெள்ளை மாளிகை பகுதியில் போராட்டம் நடத்தி தற்போதும் சிறையில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சேர்த்து பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.