தென் கொரிய ஜனாதிபதி தாமாகவே முன்வந்து பதவி விலகினாலும் விலகாவிடினும் அவருக்கு எதிராக நிச்சயமாக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுமென அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கான நகர்த்தல் பத்திரத்தை 06 எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ளதுடன் நாளை(05) நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய நாளை மறுதினம் அல்லது சனிக்கிழமை அதாவது நாடாளுமன்றத்தில் குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படுமென தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரே பெரும்பான்மையினராக உள்ளமையால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது.
தென் கொரியாவில் நேற்று ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால இராணுவ சட்டம், எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பால் மீளப் பெறப்பட்டது.
எனினும் இதனை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கான நகர்த்தல் பத்திரத்தை எதிர்க்கட்சியினர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில் இது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக ஜனாதிபதி யூன் சுக் யோல், பிரதமர் ஹென் டக் சூவையும் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
இதனிடையே, தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கிம் யொங் யுன், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
அத்துடன் இராணுவச் சட்டம் மீதான முழுமையான பொறுப்பையும் தாம் ஏற்றுக் கொள்வதாகவும் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தென்கொரிய ஜனாதிபதியால் இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.