ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
“ சமூக ஊடகங்கள் நம்மைத் துல்லியமாக அடிமையாக்கி வைத்திருக்கின்றன . அது எப்படியென்றால் நிஜ உலகில் இல்லாத ஒன்றை நமக்குத் தருகின்றன: அது மட்டுமின்றி இந்த ஊடகங்கள் நமக்கு தேவையான ,உடனடியான , மிகவும் நேரிடையாக , ஒரு தனிநபருக்கு கிடைக்கவேண்டிய பிரத்தியேக மதிப்பை அளிப்பதன் மூலம் நம்மை எப்பொழுதும் அடிமையாக கட்டுக்குள் வைத்திருக்கின்றன”
- டேவிட் அமேர்லாண்ட்
ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் மூத்த தலைமுறையிடம் கடந்த இரண்டு தசாப்தங்களாக பருவ வயதினரிடையே நீங்கள் பார்த்து மிரண்டு போன பழக்க வழக்க மாற்றம் என்னவென்று கேட்டால் ,கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள், ‘அலைபேசி மற்றும் கடந்த பத்து வருடங்களில் சூறாவளித்தனமாக வளர்ந்திருக்கிற சமூக ஊடகங்களின் பயன்பாடு ’ என்று. இப்போதுள்ள பதின்மவயதில் குழந்தைகளை வைத்திருக்கிற பெற்றோர் பயப்படுவது அந்தக் குழந்தைகளின் அதீத சமூக ஊடகப் பயன்பாடும் ,அது தொடர்பான மனநிலைச் சிக்கல்களையும் கண்டுதான்.
ஒரு காலத்தில் அலைபேசி நமது வாழ்க்கையை இலகுவாக்கும் என்று சொன்னதெல்லாம் போய் , அலைபேசிப் பயன்பாட்டினைக் குறையுங்கள் என்று தொடர்ந்து பிரசாரம் நடத்த வேண்டிய காலகட்டத்துக்கு வந்திருக்கிறோம். நாம் இவ்வாறாக புலம்பும் இந்த வேளையில் , கோவிட் நோய் தொற்றுக்காலத்தில் நம்மையெல்லாம் கடுமையான மன அழுத்தங்களிலிருந்து காத்தவையும் இந்த சமூக ஊடகங்கள் தான் என்பதை நாம் மறுக்க முடியாது
இவ்வாறான சூழ்நிலையில் பிரதமர் அல்பானீஸ் சமூகக்காவலராக மாறி , இணையவெளி பாதுகாப்பு திருத்த மசோதாவினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார். இந்த மசோதாவானது சமூக ஊடக தளங்களை 16 வயதிற்குட்பட்ட பயநர்கள் தங்கள் சேவைகளை அணுக அனுமதிப்பதைத் தடை செய்கிறது. இந்தச் சட்டத்தின் வழிகாட்டுதல்களை நிறைவேற்றத் தவறும் நிறுவனங்களுக்கு $50 மில்லியன் டொலர் (US$32m) வரை அபராதம் விதிக்கப்படும் . ஆனால் இந்த மசோதா எவ்வாறு செயல்படும் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை.
அதுமட்டுமின்றி பயநர்களின் வயதினை உறுதி செய்யவேண்டிய நடவடிக்கைகளை இந்த சமூக ஊடகத் தளங்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது . இன்னும் ஓராண்டுக்கு இந்த மசோதாவின் விபரங்கள் தெரியவரும். 2025 ஆம் ஆண்டின் இறுதியில் பயநர்களின் வயதினை உறுதி செய்வதற்கான தேவைப்படும் தொழில்நுட்பத்தின் சோதனை முடிவுகள் தெரியவரும் . ஆதலால் இன்னும் ஓராண்டுக்குள் இந்த மசோதா அமுலுக்கு வராது.
ஸ்னாப்சாட், ரிக்ரொக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், ரெடிட் மற்றும் பேஸ்புக் ஆகிய ஊடகங்கள் இந்த மசோதாவின் தடையின் கீழே வரும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் கூறியிருந்தாலும் எந்தெந்த நிறுவனங்களுக்கெல்லாம் இந்த சட்டம் பொருந்தும் என்பதையும் இந்த மசோதா குறிப்பிடவில்லை. ஆனால் YouTube தளமானது அதன் "குறிப்பிடத்தக்க" கல்வி பயன்பாட்டின் காரணமாக இந்த மசோதாவின் தடையின் கீழே வராது என்றும் அவர் கூறினார். பிரதமர் அல்பானீஸ் " சமூக ஊடகங்களின் அதீத பயன்பாட்டினால் ஆஸ்திரேலியா இளம் சந்ததியினர், மனநிலைச் சிக்கலுக்கும் கடும் மனஅழுத்த சிதைவிற்கும் உள்ளாகின்றனர்" என்று இந்த சட்டத்தினை நிறைவேற்றுகையில் பேசியிருக்கிறார்.
yougov நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 77 சதவிகித மக்கள் இந்த சட்டத்தினை ஆதரவளித்திருக்கின்றனர். ஆனால் வல்லுநர்களோ ""இந்தச் சட்டங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளில் கணிசமான அளவில் தலையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன" என்று இந்த சட்டத்தினை குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். இந்த தடையினால் குழந்தைகள் தவறான வழிகளில் ( darkweb - இருண்ட வலை ) சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி குழந்தைகள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் , ஆரோக்கிய உரையாடல்களுக்கு தேவையான தளத்தினை இல்லாமல் செய்கிறது. சுயேச்சை உறுப்பினரான ஆண்ட்ரு வில்கி அவர்கள் "குழந்தைகளை சமூக ஊடகங்களின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது முக்கியமெனினும் , அதைவிட பாதகமான சூதாட்ட விளம்பரங்களை தடை செய்யும் திட்டங்களை கைவிட்டது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாமையை நிறுத்தி வைத்தது , சுற்றுச்சூழல் சட்ட சீர்திருத்தத்தை கைவிட்டது மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் காரணமாக இருக்கும் புதைபடிவ எரிபொருட்களை மென்மேலும் தோண்டி எடுப்பதற்கு பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்த அரசாங்கம் .
இணைய வெளியில் எங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் தீவிரபடுத்தவேண்டும் என்று முயன்றால் முதலில் நாம் சமூக ஊடக நிறுவனங்களின் நிரல்களையும் ,படிமுறைத் தீர்வுகளையும் முறைப்படுத்தி கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் . மேலும் அவர்கள் பொறுப்பான ,பக்குவமான குழந்தைகளாக வாழ்வதற்கு வழிகாட்ட முடியும்".என்கிறார்
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மக்களிடம் நன்மதிப்பை பெறுவதற்காக லேபர் கட்சியால் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டதே இந்த சட்டம். இதன் சாதகங்களை விட பாதகங்களே மிக அதிகம். பயநர்களின் வயதினை எவ்வாறு உறுதி செய்யப்போகிறார்கள் மற்றும் பயநர்களின் தகவல்கள் எவ்வாறு பாதுகாப்பான முறையில் சேகரித்து விபரங்கள் சரிபார்க்கப்படும் என்பதற்குண்டான எந்த விவரங்களுமில்லை. தேர்தலையொட்டி மக்களை திசைதிருப்பும் மலின உத்தியாகவே இந்தச் சட்டம் தெரிகிறது.
சமீபத்தில் சிட்னி பல்கலைக்கழகம் வழங்கும் மருத்துவர் மற்றும் மருத்துவம் சார்ந்த முனைவர் பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த விழாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் இறுதியாக ஹிப்போகிரேடஸ் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அந்த உறுதிமொழியின் சாராம்சமென வல்லுநர்கள் சொல்வதென்றால் " First , do no Harm ".
முதலில் நோயாளிக்கு கேடு விளைவிக்காதே. இதேபோன்ற உறுதிமொழியை அனைத்து அரசியல்வாதிகளும் பதவியேற்பதற்கு முன்பே ஏற்றுக்கொள்ளவேண்டும். மக்களாகிய நாம் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்வதென்னவென்றால் புறநானூற்று வரிகள் சொல்வது போல் "நல்லது செய்து ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் " . அதாவது உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை , உபத்திரவம் செய்யாதே என்பது தான்