ArticlesCommunityHealth

மனிதா, பதவி மேல் உனக்கு தீராக்காதலோ?

மனிதர்களுக்கு உண்டாகும் பல உளநோய்கள் விசித்திரமானவை. சில உளநோய்களை நாம் அவை நோயென்ற நோக்கில் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அவையும் கூட , ஒருவகையான ஆளுமைச் சிதைவுகளே. அவ்வகையில் எம்மில் பலரிடத்தே உண்டாகும் பதவிமோகம் அல்லது தலைமைத்துவ ஆசை என்பதற்கான அடிப்படை உளவியல் காரணிகளையும் அவற்றை சரியான வழியில் திசைப்படுத்துவதற்கான வழிகளையும் ‘எதிரொலி’ வாசகர்களுக்காக இங்கே கேள்வி -பதிலாக தருகிறார் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் ரைஸ்.

கேள்வி: ஏன் சில பேர் பதவி மோகம் கொண்டுள்ளனர்?

பதில்: உணவு, உடை, இருப்பிடம் போல மனிதனின் இன்றியாமையாத தேவைகளில் ஒன்று, தான் சார்ந்த சமுதாயத்தில் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவது என்பது. அந்தத் தேவை இலகுவாகப் பூர்த்தியடைய வேண்டுமென்றால் பிறர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மற்றவர்கள் யாரும் செய்யாத ஏதாவது ஒன்றை விசேடமாகச் செய்துகாட்ட வேண்டும். அப்படி விசேடமாக எல்லோராலும் செய்ய முடியாதல்லவா. அப்படியென்றால் ஒரு கூட்டத்தில் வேறு எப்படியாவது தன்னை தனித்துக காட்ட வேண்டும். அதில் முதன்மையானதும் அதிக திருப்தி தருவதும் எது என்றால் தலைமைப் பதவி தான், அல்லது குறைந்தபட்சம் துணைத் தலைவர் பதவி. இது ஒரு மனிதன் தனது சுயத்தை, சுயமதிப்பை பாதுகாத்துக் கொள்ள செய்யும் முயற்சியாகவும் இருக்கலாம். மனிதன் வேட்டையாடி பிழைத்திருந்த காலத்தில், எங்கு வேட்டையாடுவது எனத் திட்டமிடுதலுக்கும், கூட்டத்தின் பாதுகாப்புக்கும், வேட்டையாடிய உணவைப் பகிர்வதற்கும் ஒரு தலைமை தேவையாக இருந்ததால், தலைவன் எனும் பதவி முதலில் உருவாகி இருக்க வேண்டும். அக்காலத்தில் தலைவன் இல்லாத கூட்டம் எதிரிகளால் இலகுவாக தாக்கப்படக் கூடியதாகவே இருந்திருக்கிறது.

ஆனால் பொதுவாக இக்காலத்தில் Narcissism எனும் தற்காதல் கொண்டவர்களும் attention seekers எனும் கவனஈர்ப்பில் அதீத ஈடுபாடு கொண்டவர்களும் எப்படியாவது தலைமைப் பதவிக்கு வர வேண்டும் எனத் துடிக்கின்றனர்.

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் எனும் இடத்தில் தனது பெயர் இருப்பதை கூட பலர் சிலாகித்து ஆனந்தமடைவதை நாம் பார்த்திருப்போம். ஒரு தலைவனுக்குக் கீழ் இருக்கும் தொண்டனுக்குக் கூட அதில் தான் தான் தலைமைத் தொண்டனாக இருக்கத் தான் ஆசை. ஒரு நாள் தானும் தலைவனாவேன் எனும் உந்துதல் எந்த தொண்டனுக்கும் இருக்காமலிருக்காது. சிலர் அதை நோக்கி தன்னை செலுத்தி மெல்ல மெல்ல தலைமைப் பண்பை கற்று ஒரு நாள் தலைவராகிவிடுவர். ஆனால் பல பேர் அதற்கு முயற்சித்தே காலத்தை ஓட்டி விடுவர். அப்படி இயலாமல் இருப்பவர்கள் தலைவனிடத்திலேயே தனது பிம்பத்தை பார்க்கத் தொடங்குவதால், அவனை புகழ்வதன் மூலமும் ,தகுதிக்கு மீறி் போற்றுவது மூலமும் தம் நிறைவேறா ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்தப் புகழ்ச்சியும் போற்றுதலும் அந்த தலைவனுக்கு அந்த பதவியின் மேல் உள்ள மோகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. அதனால் அவன் தன்னைத் தவிர வேறு யாரும் தலைவனாக வந்துவிடக் கூடாது என நினைக்கிறான். பதவியை இழந்தால் சிலர் தனது அடையாளத்தையே இழந்ததாக நினைத்து எந்தக் கீழ் நிலையிலும் இறங்கிப் போய் அதனை மீண்டும் பற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

கேள்வி: எல்லோராலும் தலைவராக முடியாதல்லவா? அப்படியென்றால் அந்த உந்துதலை அல்லது தேவையை எப்படி மனிதன் பூர்த்தி செய்கிறான்?

பதில்: விளம்பரம் இல்லாமல் பிறருக்கு நல்லது செய்வது மூலமும் பிறர் நலன் பேணுவதின் மூலம் அந்த உந்துதலை நல்ல பண்புள்ள மனிதன் பூர்த்தி செய்கிறான். அவன் தலைமைப் பண்பை தன்னுள் கொண்டிருந்து, தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்துகொண்டிருப்பான். பதவியில் இல்லாமலே அவன் தனது நல்ல செயல்களால் மற்றவர்களுக்கு உந்துதல் சக்தியாக இருப்பான். பதவியில் இல்லாவிட்டாலும் அவனும் தலைவன் தான். பிறரின் சந்தோசத்தில் தான் இவன் போன்றோரின் சந்தோசம் அடங்கி இருக்கிறது. ஒரு நல்ல தலைவன் என்பவன் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்துக் கூடியவனாக இருப்பவனே ஆவான்.

கேள்வி: சில பேரைப் பார்த்தால் ஏன் தான் இவன் எல்லாம் தலைவனாக இருக்கிறானோ எனத் தோன்றுகிறதே, அது ஏன்?

பதில்: இயற்கையாகவே உள்ள இந்த உந்துதலாலோ இல்லை மேலே சொன்ன தற்காதல், அதீத கவனம் விரும்புதல் போன்ற காரணங்களாலோ தலைமை குணம் எதுவுமே இல்லாமலே எப்படியாவது அடிச்சி பிடிச்சி பதவியை பலர் அடைந்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரும் நல்ல தலைவனாக இருப்பதில்லை.. இது போல தலைவர்களின் சந்தோசம் அவர்களின் சொந்த நலனில் மட்டும் தான் தொக்கி இருக்கும், மற்றவர்களின் நலனில் அல்ல. ஆனால் தன்னை மற்றவன் சிறந்த தலைவன் என புகழ வேண்டுமென மட்டும் எதிர்ப்பார்ப்பர். இது போல உள்ள தலைவர்களைப் பார்த்தால் தான் நமக்கு அப்படித் தோன்றும்

Related Articles

Back to top button