ஆர்.சுகந்தன்
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலின்போது தமிழ் தேசியத்தை மையப்படுத்தி இயங்கும் அரசியல் கட்சிகள் பாரிய வீழ்ச்சியை சந்தித்தன. தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தியே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. அதுவொரு காரணமாக இருப்பினும், இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு “பார் லைசன்ஸ்” விவகாரமும் முக்கியமான காரணம்.
“பார் லைசன்ஸ்” விவகாரம் என்.பி.பி.யின் பரப்புரைச் சதி
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்கு வங்கியானது தமிழ் தேசியத்துக்கு முதன்மையளிப்பது. தேசம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய தமிழ் தேசியத்தின் உட்கூறுகளை தம் தேர்தல் அறிக்கைகளில் முன்வைப்பவர்களில் திறமையானவர்களுக்கே தமிழர்கள் வாக்களித்து வந்துள்ளனர். எனவேதான் நாடு முழுவதும் அனுர அலை அடித்து, அனுர குமார திஸநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோதிலும், வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி கடைசிநிலைக்கு வந்தது. ஆனால் அதற்கு அடுத்து 54 நான்கு நாட்களில் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட மாகாணத்தை வெற்றிகொண்டது தேசிய மக்கள் சக்தி. இந்தத் திடீர் வெற்றியின் சூட்சுமம் என்ன?
பாரம்பரியமாகத் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்துப் பழக்கப்பட்ட மக்கள், அந்தக் கட்சிகள் மீது ஆயிரம் குறைகளைக் கண்டபோதிலும், பல விமர்சனங்களை முன்வைத்தபோதிலும், தேர்தலென்று வந்தால், அந்தக் கட்சிகளுக்கே வாக்களிப்பர். இந்த மனநிலையை உடைக்கவேண்டிய தேவை தேசிய மக்கள் சக்திக்கு இருந்தது. எனவே தமிழ் தேசியத்தை மையப்படுத்தி தேர்தல் அரசியல் செய்யும் கட்சிகளின் பலத்தை தமிழ் மக்களிடமிருந்து உடைக்கவேண்டும். அதற்கான ஒரு பரப்புரைப் பொருள் தேவை. அந்தப் பரப்புரைப் பொருளாகக் கிடைத்ததே “பார் லைசன்ஸ்” விவகாரம்.
எவ்விதத்திலும், ஆதாரங்களை வெளியிடமுடியாத, அதே நேரத்தில் தமிழ் மக்களை இலகுவாகக் கவரக்கூடிய இந்த விடயத்தை தேசிய மக்கள் சக்தி, சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. சமூக வலைத்தளங்களிலும், ஏனைய ஊடகங்களிலும், “பார் லைசன்ஸ்” விடயம் தொடர்ச்சியாக கொதிநிலைப் பிரச்சினையாக வைக்கப்பட்டது. எனவே இந்தப் பரப்புரையில் எடுபட்ட தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர்.
எனவே சரியாக – ஆதாரபூர்வமாக வெளியிட முடியாத “பார் லைசன்ஸ்” விவகாரத்தை முன்வைத்து, இரண்டு காரியங்களை சாதித்துக்கொண்டது தேசிய மக்கள் சக்தி. முதலாவது, இதுவரைகாலமும் வடக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்த்து வந்த இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யை அந்தப்பிராந்தியத்தில் செல்வாக்குமிக்கதாக மாற்றியது, இரண்டாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் விருப்பை சிதைத்தது.
அவசரப்பட்ட விக்கினேஸ்வரன்
“பார் லைசன்ஸ்” விவகாரம் வெளிவந்தவுடனேயே முதல் ஆளாக ஊடகங்கள் முன்னால் தோன்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன், கிளிநொச்சியில் பெண் ஒருவர் “பார் லைசன்ஸ்” பெற தான் சிபாரிசு செய்ததை ஒப்புக்கொண்டார். போரினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக அந்த சிபாரிசினை வழங்கியதாகவும் சொன்னார்.
“பார் லைசன்ஸ்” பெற சிபாரிசு செய்ததைவிட, அதற்காக அவர் சொன்ன காரணம் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எவ்விதத்திலும் துரோகம் செய்யமாட்டார், பக்திமான், முன்னாள் நீதியரசர், நன்கு படித்தவர் எனத் தமிழ் மக்களால் நம்பப்பட்ட ஒருவரா இப்படி செய்தார் எனக் கொதிப்படைந்தனர் தமிழர். இந்தக் கொதிப்பினைத் தமிழ் மக்கள் வாக்களிப்பில் காட்டினர்.
அவதானமெடுத்த சிறீதரன்
நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே “பார் லைசன்ஸ்” விவகாரம் கையிலெடுக்கப்படுகிறது என்பதையும், தன்னைத் தோற்கடிக்கவே தனது பெயர் இதில் இழுத்துவிடப்பட்டிருக்கிறது என்பதையும் உணர்ந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அனுரகுமார திஸநாயக்க ஜனாதிபதியாகியவுடனேயே அவரை நேரில் சென்று சந்தித்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைவராக அல்லாமல், தனிப்பட்ட ரீதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. இந்தச் சந்திப்பில் “பார் லைசன்ஸ்” விடயத்தில் “ஏதோ டீல்” செய்திருக்கிறார் சிறீதரன் என்கிற விமர்சனங்கள் வரத்தொடங்க, ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கவே நேரில் சந்தித்தேன் எனவும், அது வழமையான சந்திப்பெனவும் அவர்சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் சமூக வலைத்தள ஆதரவாளர்கள் என வெளித்தெரியப்படுபவர்களின் சிறீதரன் “பார் லைசன்ஸ்” என்கிற விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக்கப்பட்டது.
இது தனது எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக மாறப்போகிறது என்பதை ஊகித்த சிறீதரன், உடனடியாகவே அவ்வாறு சமூகவலைத்தளங்களில் ஆதரமாற்ற குற்றச்சாட்டுக்களைப் பரப்பியவர்கள் மீதெல்லாம் தயவுதாட்சண்யமின்றி சட்டநடவடிக்கை எடுத்தார்.
அதில் கைதான சுமந்திரனின் ஆதரவாளர் ஒருவர் தனக்கு மனநோய் எனக் கடிதம் கொடுத்தே அந்த சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவேண்டியேற்பட்டது. இவ்வாறு தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த ஆதாரங்களை வெளியிடமுடியாத குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவதானத்துடன் கையாளவிட்டிருந்தால், இப்போது அவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்திருக்க முடியும்.
சொன்னதை செய்யாத தேசிய மக்கள் சக்தி
தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கும்போது “பார் லைசன்ஸ்” விவகாரத்தைக் கையிலெடுத்த தேசிய மக்கள் சக்தியினர், எந்தெந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்கிற உண்மையை வெளியிடப்போவதாகக் கூறினர். உண்மையில் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டிருந்த பலர் தேர்தலிலிருந்து ஒதுங்கிக்கொண்டனர். சிலர் உண்மையைப் பொதுவெளியில் ஒப்புக்கொண்டனர்.
அப்படியனாவர்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒருவர் தான் நினைத்தால், பாராளுமன்றத்தின் அனுமதியின்றியே “பார் லைசன்ஸ்” பெற்வர்களின் விபரத்தையும், அதற்காக சிபாரிசு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டிருக்க முடியும். ஊடகங்களுக்கும் அந்தத் தகவலைக் கசியவிட்டிருக்க முடியும்.
ஆனால் ஆரம்பத்தில் ’நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பார் லைசன்ஸ்” பெற்றவர்களின் விபரத்தை வெளியிடுவோம்’ எனக்கூறிவந்த தேசியமக்கள் சக்தி, திடீரென அதிலிருந்து குத்துக்கரணம் அடித்துப் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே வெளியிடுவோம் என்றது. எனவே இந்த உண்மையை அறிவதற்கு ஆர்வப்பட்டவர்களும் தேசிய மக்கள் சக்தி வாக்களித்தனர்.
இவ்வாறு பார் லைசன்ஸ்” விவகாரத்தை வைத்து வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தையும் அதிக பெரும்பான்மையுடன் அமைத்த தேசிய மக்கள் சக்தி,’ பார் லைசன்ஸ்’விடயத்தில் தான் கொடுத்த வாக்கை தேர்தலுக்குப் பின்னரும் செயலில் காட்ட பின்னடித்தது.
நாடாளுமன்ற அமர்வுகளிலும், ஊடகங்களிலும் இதுகுறித்த விமர்சனங்கள் பரவலாக எழுந்த பின்பே, தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் புதிதாக ’பார் லைசன்ஸ்’பெற்ற 372 பேரின் பெயர் விபரங்களை வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட இந்த பெயர் விபரத்தை சாதாரணர் ஒருவர் மதுவரித்திணைக்களத்திற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக விண்ணப்பித்தாலே பெற்றுக்கொள்ளமுடியும். எனவே மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. மக்களும், ஊடகங்களும் எதிர்பார்த்ததெல்லாம், இந்த பார் லைசன்ஸை” உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள சிபாரிசு கடிதங்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை வெளிப்படுத்துவார்கள் என்பதையே.
அரசாங்கம் வெளியிட்டிருக்கின்ற ஆதாரங்களின்படி, கிளிநொச்சி மாவட்டத்திற்கு 18 “பார் லைசன்ஸ்” வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர புதிதாக எதுவுமில்லை. எனவே இந்த “பார் லைசன்ஸ்” விடயம் குறித்த உண்மையையே வெளியிட முடியாத இந்த அரசாங்கம், நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் விடயங்களை எப்படி வெளியிடப்போகிறது என்கிற சந்தேகமும் வலுக்கிறது. “பார் லைசன்ஸ்” விவகாரத்தையும், ஊழலையும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பரப்புரை உத்தியாக மாத்திரமே தேசிய மக்கள் பயன்படுத்தி வந்துள்ளது என்கிற உண்மையையும் இந்த “பார் லைசன்ஸ்” விவகாரம் வெளிப்படுத்தியுள்ளதாக நோக்கர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.