ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
சமீபத்தில் பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவரின் வலைத்தளத்தில் எழுத்தாளர் சுஜாதா பற்றி மிக மோசமான விமர்சனக் கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் சுஜாதா வெறும் பத்தி எழுத்தாளர் எனவும் ,அவரைப் போன்று எவரும் எழுதிவிடலாம் எனவும் ,அவரது ஆராதகர்கள் அனைவரும் 50 வயதிற்கு முற்பட்ட முதியவர்கள் எனவும் ,சினிமாவில் மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய தோல்விக்கு காரணம் சுஜாதா எனவும் சேற்றினை அந்த எழுத்தாளர் வாரியிறைத்திருந்தார் .
இந்த விமர்சனத்தை படித்து நொந்து போன நான், எனது எழுத்தாள நண்பர் ஒருவரிடம் கேட்ட பொழுது , "சுஜாதா என்றும் இருப்பார் ,அந்த மோசமான விமர்சகர் காலப்புழுதியில் கரைந்து போவார் " என்றும் கூறினார். அது எந்த அளவுக்கு முற்றிலும் உண்மை என்பது சுஜாதாவின் கேள்வி பதில்கள் தொகுப்பினை படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு புரிந்தது. அந்தக் கேள்வி பதில் இதுதான் -
கேள்வி: சுஜாதாவின் (ரங்கராஜன் இல்லை ஸார்!) இளமையின் ரகசியம் என்ன ?
சுஜாதா : யாண்டுபலவாகியும் நரையிலன் ஆகுதல் மீண்டும் மீண்டும் dye அடித்துக்கொள்வதால்.
இந்தப் பதிலில் ஊடாடும் அங்கதமும் ,இதன் பின்னே அடங்கியிருக்கும் சுஜாதாவினுடைய ஆழமான சங்க இலக்கியங்களின் மேலுள்ள புலமையும் நமக்கு விளங்கும். இதைப்படித்த பிறகு பிசிராந்தையார் எழுதிய இந்த புறநானூற்றுக் கவிதையை தேடிப் படித்த பிறகு வாத்தியாரின் பாண்டித்தியத்தை மேலும் அறிந்து கொள்ள முடிந்தது.
பிசிராந்தையார் யார் என்று நாம் அனைவருக்கும் தெரியும் தானே. பாண்டிய நாட்டில் பிறந்த பிசிராந்தையார் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மேல் கொண்ட மதிப்பின் காரணமாக அவனைப் பற்றி நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால் இவர்களிருவரும் ஒருவரையொருவர் சந்தித்தது கிடையாது. பார்க்காமல் ,பேசிக்கொள்ளாமல் நட்பு கொள்ளுதல் சங்க காலத்தில் சாத்தியாமாக இருந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் தேவைக்கு மட்டுமே நட்பு என்று சுருங்கிவிட்டதை நினைத்தால் வருத்தம் தான்.
கோப்பெருஞ்சோழன் தன் புதல்வர்களின் சுயநலம் கண்டு நொந்து வடக்கிருந்து (வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து ) உயிர்துறக்க நினைத்த பொழுது , ’எனது நண்பன் பிசிராந்தையார் என்னைக் காண எப்படியும் வருவார் .ஆதலால் அவருக்கும் எனதருகில் வடக்கிருப்பதற்கு இடம் ஏற்பாடு செய்க’ என்று பணித்திருந்தான். அவன் நினைத்தது போலவே பிசிராந்தையாரும் வருகை புரிந்து அவனுடன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்பது பழங்கதை.
“யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?” என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை,
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.
----புறநானூறு, பாடல்191
பாடியவர்: பிசிராந்தையர்
பாடலின் பின்னணி: எப்படி இவ்வளவு வயதாகியும் சிறிதும் நரையின்றி இளமையாகவும் இருப்பதற்குரிய ரகசியம் என்ன என்று மக்கள் கேட்டபொழுது, அதற்கான காரணங்களை இப்பாடலில் பிசிராந்தையார் தொகுத்துக் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளை கூறும் பாடல்களை அடக்கியது பொதுவியல் திணை.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. இம்மண்ணில் வாழும் உயிர்களுக்கு உத்திரவாதம் அளிக்க கூடும் என்று நம்பப்படும் பிறப்பு ,மறுபிறப்பு தொடர்பான கடன்களை எடுத்துக் கூறுதல்.
பாடலின் பொருள் :
ஆண்டுகள் பல கடந்து வயதாகி மூப்பெய்தினாலும் , தலையில் நரைமுடிகள் இன்றி அதாவது என்றும் இளமையாக இருப்பதற்கான காரணங்கள் அல்லது ரகசியம் என்ன ? என்று என்னிடம் கேட்டீர்கள் என்றால் (யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் ) . "மேன்மை குணநலன்கள் பொருந்திய மனைவி ( மாண்டஎன் மனைவியோடு )
கிடைக்கப்பெற்றேன் . அறிவு,பண்பு ,அடக்கம் முதலான சிறந்த குணநலன்கள் நிரம்பிய பிள்ளைகளுக்கு தந்தையாகும் நல்வாய்ப்பு பெற்றேன் (மக்களும் நிரம்பினர்) .
என் எண்ணம் போல் ஒழுக்கம் தவறாது நடக்கும் உற்றார் மற்றும் சுற்றம் பெற்றேன் ( யான்கண் டனையர் என் இளையரும்) . ஒரு நாளும் மக்களுக்கு தீங்கு செய்யாமல் நல்லாட்சி நடத்தும் மன்னனும் எனக்கு கிடைத்தார் (வேந்தனும் அல்லவை செய்யான் ) .அது மட்டுமின்றி அறிவு ,அன்பு ,அடக்கம் முதலான நற்பண்புகள் வாய்க்கப் பெற்றதோடு அனுபவத்திலும் முதிர்ச்சியடைந்து , கொண்ட கொள்கையில் சிறிதும் தவறாமல், நீதிநெறி வழுவாமல் வாழும் சான்றோர்கள் பலர் வாழும் ஊரில் பிறந்து வாழும் மாபெரும் வரம் பெற்றவன் நான். (அதன் தலை ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் பலர் யான் வாழும் ஊரே?) . இப்படிப்பட்ட ஊரில் வாழும் எனக்கு எவ்வாறு நரை விழுந்து முதுமை தோன்றும் ?என்று கேட்கிறார்
இந்தப் பாடலை நன்றாகக் கவனித்தோம் என்றால் இளமையாக இருப்பதற்கான ரகசியம் என்னவென்று தோன்றும். இளமையாக இருக்க என்ன செய்யவேண்டும்? எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். ஒருவன் எப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பான்? எந்தவொரு கவலையும், துக்கமும், மன அழுத்தமின்றி இருப்பவனே மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.
இந்த மகிழ்ச்சிக்கு தடையாக ,மனஅழுத்தம் தரக்கூடிய காரணிகள் என்னவென்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிசிராந்தையார் கச்சிதமாக கண்டித்திருக்கிறார் . அதாவது மனைவி / கணவன் ,குழந்தைகள் ,உறவினர்கள் , அரசாங்கம் / மன்னன் ( ஆட்சி புரிபவர்கள் ) , நல்லெண்ணம் பெற்ற சமூகம் . இந்தக் காரணிகள் எல்லாம் பொருந்தி அமைவது இயலாத காரியம். ஆதலால் கூடுமானவரை சகித்துக் கொண்டு , இனியவற்றை மட்டுமே கண்டு , நல் இயல்புடன் என்றும் நடந்தால் என்றும் இளமையாக இருக்க முடியும் என்கிறார். ஆதலால் மோடி ஆண்டாலும் , அல்பானீஸ் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்றிருத்தல் சாலச்சிறந்தது.