“நீங்கள் இயற்கைத்தாயை பராமரித்தால், இயற்கைத் தாய் உங்களைப் பாதுகாப்பாள்” – ஆஸ்திரேலிய பழங்குடிமக்கள்
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பெருமளவான நிலப்பகுதிகளை பாதிப்பது மாத்திரமல்லாமல் பெருமளவு சொத்துச்சேதம் மற்றும் மனித உயிர் இழப்பையும் ஏற்படுத்துகிறது.
2019-20 ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட நிலப்பரப்பு இலங்கையின் மொத்த நிலப்பரப்பை விட அதிகமானது. இதேபோல் 2009 பெப்பிரவரியில் விக்டோரியா மாநிலத்தில் நடந்த இருண்ட சனிக்கிழமை (Black Saturday) காட்டுத்தீயில் 173 பேர் கருகி மாண்டது மிகப்பெரிய சோக நிகழ்வாகும்.
நூற்றுக்கணக்கான அரிய உயிரினங்கள் ஆஸ்திரேலியா கண்டத்தில் மாத்திரமே காணப்படுகின்றன. அவற்றில் பல அழிந்து விட்டன மற்றும் பல அருகிவரும் உயிரினங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
கங்காரு, வொலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வொம்பட், தஸ்மேனியன் டெவில் என்பன வயிற்றில் பை உள்ள மார்சூப்பியல் என்று அழைக்கப்படும் பாலூட்டி விலங்குப்பிரிவை சேர்ந்த விலங்குள் அவுஸ்திரேலியா கண்டத்தில் மாத்திரமே வாழ்கின்றன. இவை போன்று டன்னார்ட் என்றழைக்கப்படும் ஒரு எலியை ஒத்த மார்சூப்பியல் விலங்கினம் கங்காரு தீவில் மாத்திரம் உயிர்வாழ்ந்து வந்தது.
அண்மையில் கங்காரு தீவில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் இந்த டன்னார்ட் உட்பட பெருமளவான உயிரினங்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இவை போன்று இன்னும் பல அருகிவரும் உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் இரு அஞ்சப்படுகின்றது.
காட்டுத்தீயினால் ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு இதுவரைக்கும் இருநூறு கோடி டொலர்கள் என்று கணக்கிடப்பட்டாலும் இந்த பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காட்டுத்தீயின் பொதுவான காரணங்களாக மின்னல், மின் ஒழுக்கு, விவசாயத்திற்காக துப்புரவு செய்தல், அரைக்கும் மற்றும் வெல்டிங் நடவடிக்கைகளில் தற்செயலான பற்றவைப்பு, கேம்ப்ஃபயர், சிகரெட் மற்றும் எறியப்படும் தீக்குச்சிகள், இயந்திரங்களிலிருந்து தீப்பொறிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தீ வைப்புக்கள் கட்டுமீறி செல்வது ஆகியவற்றை சொல்லலாம். இவற்றுடன் வேண்டுமென்றே தீ வைக்கும் விஷமச்செயலும் நடைபெறுவது மறுக்க முடியாது.
இலங்கையிலும் இந்தியாவிலும் சஞ்சிவி மரம் என்றும் விக்ஸ் மரமென்றும் அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட யூக்லிப்ரஸ் மரங்களே அவுஸ்திரேலிய காடுகளில் நிறைந்துள்ளன. இவற்றை இங்கு Gum tree என்று அழைப்பர். இவை இயற்கையிலேயே நன்றாக எரியக்கூடிய எண்ணெய்யை கொண்டிருப்பதால், பச்சை மரம் கூட நன்றாக எரியும். இவற்றின் விதைகள் தீயால் பெருமளவில் பாதிக்கப்படுவதில்லை என்பது இயற்கையின் கொடைகளில் ஒன்று. ஆஸ்திரேலியாவின் சுதேச தாவரங்கள் சில இனப்பெருக்கம் செய்வதற்கான வழிமுறையாக காட்டுத்தீயை நம்பியுள்ளன என்பது ஒரு கொசுறு செய்தி.
இவை போதாதென்று அவுஸ்திரேலிய சுதேச பறவைகள் சில காட்டுத்தீயை பரப்புவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். கழுகு இனத்தை சேர்ந்த Whistling Kites, Black Kites மற்றும் Brown Falcons ஆகிய பறவைகளே இதை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரியும் கொள்ளியை பாதுகாப்பாக தூக்கிச்சென்று வெகு தூரத்தில் உள்ள பற்றைக்காடுகளில் போட்டு அத்தீயின் காரணமாக வெளியில் ஓடி வரும் எலி போன்ற பிராணிகளை இவை வேட்டையாடுவதாக சொல்லப்படுகின்றது.
மேலும், ஒரு இடத்தில் ஏற்படும் தீ, பைரோகுமுலோனிம்பஸ் (pyrocumulonimbus) என்ற ஒரு வகை மேகத்தை உருவாக்கி அதன்மூலம் அயற்பிரதேசங்களுக்கும் மின்னல் மூலம் தீயை பரப்புகின்றது. வழக்கமான இடியுடன் கூடிய மழையைப் போலவே, காற்று மற்றும் வெப்ப நிரலால் ஏற்படும் மேற்காவுகை காற்றின் மூலம் பைரோகுமுலோனிம்பஸ் இடிமுழக்க மழை உருவாகிறது. வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அளவு காரணமாக புகை ஆபத்தான புயல் மேகங்களாக மாறுகிறது. இது நீர் சொட்டுகளுக்கு பதிலாக வானத்திலிருந்து கீழே விழும் நெருப்புத்தணல்களை கொண்டுவருகிறது.
நெருப்பின் வெப்பத்தால் உருவாக்கப்பட்ட மேற்காவுகை காற்றானது நீர் மற்றும் சாம்பலை வானத்தில் உறிஞ்சும்போது இந்த மேகங்களின் உருவாக்கம் நிகழ்கிறது. இந்த மேகங்கள் மேலும் உயரும்போது ஒரு "தீ மேகம்" உருவாகி வழக்கமான இடிமுழக்க மழை போன்று நெருப்பு மழை பெய்யும். இந்த பைரோகுமுலோனிம்பஸ் அடிக்கடி மின்னலை உருவாக்குவைத்தால் அதனால் உருவாகும் மின்சாரம் புதிய நெருப்பை உருவாக்கி, காட்டுத்தீயை அணைக்கமுடியாதபடி மேலும் பரவச்செய்கிறது.
அவுஸ்திரேலியாவில் ஐரோப்பியர் பெருமளவில் குடியேறத்தொடங்கி கிட்டத்தட்ட 200 வருடங்களே ஆகின்றன. இக்காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் கைக்கொள்ளப்பட்ட தீயணைக்கும் முறைகளையே அவர்கள் பயன்படுத்தி வந்தனர். அவை தகுந்த முறையில் பலனளிக்கவில்லை என்பதைக் கண்டுகொண்ட ஆராய்ச்சியாளர்கள், பழங்குடிமக்களின் முறைகளை ஆராய்ந்து அவற்றையும் சேர்த்துக்கொள்ள அண்மைக்காலமாக தொடங்கியுள்ளனர்.
பழங்குடிமக்களின் தீ முகாமைத்துவம்
பழங்குடி மக்களுக்கு மட்டும்தான் பல இயற்கை நிகழ்வுகளுக்கான அறிவும் விளக்கமும் இருக்கின்றது. பழங்குடிமக்களுக்கும் நிலங்களுக்கும் உள்ள பிணைப்பு மிகவும் வித்தியாசமானது. 'நீங்கள் இயற்கைத்தாயை பராமரித்தால் , இயற்கைத் தாய் உங்களைப் பாதுகாப்பாள்' என்பதே அவர்களின் தாரக மந்திரம்.
அவுஸ்திரேலிய பழங்குடி மக்களின் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறையையும் தற்போதைய விஞ்ஞான முறைகளையும் ஒருங்கிணைத்து காடுகளை முகாமைத்துவம் செய்யும் ஒரு முறை சிறிது காலமாக பின்பற்றப்படுகின்றது. மின்னலால் இலகுவாக தீ பற்றிக்கொள்ளாதிருக்கும்படி பழங்குடியின மக்கள் காடுகளை அவ்வப்போது எரித்து அவற்றை நிர்வகித்தனர். தீ ஏற்பட்டாலும், எரிபொருளாக இருக்கக்கூடிய காய்ந்த சருகுகள், மரங்கள் இல்லாதவிடத்து தீயின் உக்கிரம் குறைவாகவே இருக்கும். உக்கிரம் இல்லாத தீ மரங்களை அதிகம் பாதிப்பதில்லை.
பழங்குடி கலாச்சாரத்தில் நெருப்பு ஒரு முக்கிய அடையாளமாகும். பாரம்பரியமாக வேட்டை, சமையல், மற்றும் நிலப்பரப்பை நிர்வகித்தல் ஆகியவற்றில் தீ ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. தீ என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆன்மீக அர்த்தத்தை கொண்டுள்ளதுடன் அவர்களின் பல கதைகள், நினைவுகள் மற்றும் நடனம் ஆகியவை தீயை சுற்றியே வருகின்றன.
தீ முகாமைத்துவம் என்பது பழங்குடியின மக்கள் நாட்டை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள் என்பதன் ஒரு பகுதியாகும் . இது பெரும்பாலும் 'கலாச்சார எரிப்பு' (Cultural burning) என்று அழைக்கப்படுகிறது.
பழங்குடிமக்களின் வேகமும் உக்கிரமும் குறைந்த மென்தீயால் (Cool burn) தாவரங்களுக்கும் விலங்குகளும் பாதுகாக்கப்படும். இதன்போது வண்டுகள் மற்றும் எறும்பு உள்ளிட்ட விலங்குகள் தப்பிக்க போதுமான நேரம் இருக்கும். இளம் மரங்களும் புல் விதைகளும் அழியாது மீண்டு வரும். பெருந்தீக்களை விட மென்தீயின் வெப்பம், மரத்தின் பட்டைகளில் உள்ள எண்ணெயைப் பற்றவைக்காது. இது "சுற்றுச்சூழலை பசுமையாக வளர்ப்பதற்கான ஒரு கருவி" ஆகும்.
பழங்குடியினருக்கு மரங்களின் விதானங்கள் (canopy) மிகவும் புனிதமானது. அவர்களின் மென் தீ வைப்பின் போது மரங்களின் விதானங்கள் எரியாதவாறு கவனமாக பார்த்துக்கொள்வார்கள்.
இம்முறையில் மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையேயான வறண்ட காலங்களில் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் காய்ந்த புற்கள் சருகுகள் என்பன எரிக்கப்பட்டு எரிபற்றும் பொருள்கள் குறைக்கப்படும். இக்காலப்பகுதி இடங்களுக்கு இடங்கள் வேறுபடும். முக்கியமாக மழைக்காலத்துக்கு சற்று முன்பாக இவை எரிக்கப்படும். கலாச்சார தீ ஆபத்து குறைப்பு எரிப்பை (hazard reduction burning) ஐ விட அடிக்கடி செய்யப்படுவதால் மிகவும் நேரமினக்கேடும் செலவுகூடியதுமான ஒருமுறையாகும்.
ஒவ்வொரு வருடமும் காட்டுத்தீயின் அழிவுகள் கூடி வருவது போன்று தோன்றுவதால் இது புவி வெப்பமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றத்தோடு தொடர்புடையது என்று பலரும் வாதிடுகின்றனர். தற்போதைய அரசாங்கம் புவி வெப்பமாதலுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்றும், இம்முறை காட்டுத்தீயின் உக்கிரம் மிகவும் கூடுதலாக இருக்கும் என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் தேவையான முன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பலரும் குற்றம் சொல்ல தொடங்கியுள்ளனர்.
சீனா உட்பட பல நாடுகள் புவி வெப்பமாதலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் மிகவும் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இருக்கும் ஆஸ்திரேலியா அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பது வேதனையான விடயம் மாத்திரமல்லாமல் எமது அடுத்த தலைமுறைக்கு காட்டுத்தீயும் , வெள்ளப்பெருக்கும் நிறைந்த ஒரு மோசமான காலநிலையுள்ள நாட்டை நாம் விட்டுச்செல்ல வேண்டியிருக்கும் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.