ArticlesCommunityIndia

‘சந்திரயான்-3’ மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியலின் வெற்றி

இந்திய நாட்டின் விண்வெளி அறிவியல் வெற்றியின் சின்னமான சந்திரயான்-3 நிலவில் நிலைகொண்ட திகதியில் உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினர் பஞ்சாங்கம் பார்க்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. சந்திரயான்   விண்கலம் நிலவில் இறங்கியதை இந்தியாவே கொண்டாடியது.

எப்போதும் அதிகம் ஆட்டம் போடுகின்ற, மூடநம்பிக்கையின் முடைநாற்றம் வீசுகின்ற சனாதனிகள் இதை அடக்கித்தான் வாசிக்கிறார்கள். இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் ஒன்றியஅரசு அமைந்த காலத்திலிருந்து இன்றுவரை மக்களிடம் மூடநம்பிக்கைகளை தக்க வைப்பதற்கும், வளர்ப்பதற்குமான முயற்சிகளில்தான் பா.ஜ.க.வும் ஒன்றிய அரசும் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன.

மும்பையில் ஒரு மருத்துவமனைத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறை, சோதனைக் குழாய் குழந்தை பிறக்கிற முறை, குளோனிங் முறை புராணகாலத்திலே இருந்தது என்று புருடா விட்டார். இதன் தொடர்ச்சியாக பா.ஜ.க.வின் தலைவர்கள் குருஷேத்திரப் போரில் இன்டர்நெட் இருந்தது என்றும், விமானங்கள் பறந்தன என்றும், கட்டுக்கதைகளை மூடை மூடையாக அவிழ்த்து விட்டார்கள். மக்கள் நோயால் பாதிக்கப்பட்ட பொழுது மாட்டு மூத்திரத்தை குடிக்க சொல்லியும், மாட்டுச்சாணத்தை பூசிக்கொள்ளவும் மடமடவென்று ஆலோசனைகளை வணங்கினார்கள்.

மத்திய பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் ஜோசியம் பார்த்து விட்டு தான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற அறிவுரை வழங்கினார்கள். இந்தியா முழுவதும் மூடநம்பிக்கைகளை முழுதாகக் குத்தகைக்கு எடுத்து பரப்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் சந்திரயான்-3 வெற்றி உள்ளூர அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். மறுபுறத்தில் இந்த வெற்றி  பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் சாரும் என்று மக்கள் பணத்தில் விளம்பரங்களை அள்ளி வீசி விஞ்ஞானிகளையும் சந்திரயானையும் பின்னுக்கு தள்ளி மோடியை முன் நிறுத்துவார்கள். தாங்கள் வந்த பிற்பாடு தான் இஸ்ரோவே உருவானது போல் வலைததளப் பொய்களை பொங்க விடுவார்கள்.

இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக இரவு பகலாக உழைத்து ரஷ்யா அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நான்காவதாக நிலவிற்கு விண்கலம் அனுப்பும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒரு நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சரித்திர சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் தொடர் முயற்சி நாட்டில் விண்வெளி தொழில்நுட்பம் வளர்வதற்கும் முன்னேறுவதற்கும் முக்கியமான காரணமாக இருந்தது.

1920 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தாவில் சீசிர் குமார் மித்ரா என்ற விஞ்ஞானி கதிர் இயக்க செயல்பாடுகள் மூலம் விண்வெளி ஆய்வுகளில் நாட்டம் கொண்டார். சேர் சி.. வி ராமன் அவர்களும் அறிவியல் மேதை மேக்னா  போன்றவர்களும் விண்வெளி ஆய்வில் தங்களது பங்கை செலுத்தினார்கள். 1945 ஆம் ஆண்டு தான் ஒருங்கிணைந்த விண்வெளி ஆய்வுகளுக்கான முயற்சிகள் உருவாக்கப்பட்டன. இதே காலத்தில் அகமதாபாத்தில் விக்ரம் சாராபாய், மும்பையில் ஹோமி ஜஹாங்கீர் பாபா ஆகியவர்களின் முயற்சியால் விண்வெளி ஆய்வுக்கான அடித்தளம்  போடப்பட்டது. 1950 ஆம் ஆண்டு ஹோமி பாபா அவர்களால் அணு ஆற்றல் துறை உருவாக்கப்பட்டம இந்த வளர்ச்சியை மேலும் துரிப்படுத்தியது.

1957ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வானாய்வு மையம் அமைக்கப்பட்டது. அமெரிக்க தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த வானாய்வு மையம் உருவாக்கப்பட்டது.
1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் முதன்முதலாக ஸ்புட்னிக் விண்கலத்தை செலுத்தி விண்வெளி ராஜ்யத்தை துவங்கி வைத்தது. இதன்பிறகு பல நாடுகளிலும் விண்வெளி ஆய்வை நடத்துவதற்காக ஆர்வமும் உந்து சக்தியும் ஏற்பட்டது.

1962 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி குழு(INCOSPAN) அமைக்கப்பட்டது. இந்த காலம் முழுவதும் நடைபெற்ற விண்வெளி ஆய்வு மைய கட்டமைப்பும் வளர்ச்சியும் ஜவஹர்லால் நேரு அவர்களுடைய அறிவியல் பார்வையின் மூலமாக முன்னெடுக்கப்பட்டது. இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக விண்வெளி ஆய்வு மிக அவசியமானது என்பதை அவர் வலியுறுத்தி அதற்கான பணிகளில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாகத்தான் 1969 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான  இஸ்ரோ உருவானது.

உலகில் புவி சார்ந்த அரசியல் அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் ஒவ்வொரு நாடும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியது. இந்தியாவிற்கும் இந்த நிலைமை உருவான பொழுது 1960 முதல் 1970 ஆம் ஆண்டுகளில் விண்வெளி ஆய்வில் இந்தியா தனது சொந்த தொழில்நுட்பங்களை வளர்த்துக் கொள்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெறவும் ஆரம்பித்தது. இதே காலத்தில் இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதில் அமெரிக்கா பல இடையூறுகளை செய்ய ஆரம்பித்தது.

இந்தப் பின்னணியில் 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்கலமான ஆரியப்பட்டா சோவியத் சோசலிச ஐக்கிய குடியரசின் ஆதரவுடன் விண்ணில் ஏவப்பட்டது. விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்கு அமெரிக்கா பல நாடுகளை அனுமதிக்கவில்லை. அமெரிக்காவின் ஏவு தளங்களில் இருந்து அனுப்புவதற்கு அதிகபட்சமான கட்டணங்களை வசூல் செய்தது. இந்தப் பின்னணியில்தான் சோவியத் யூனியன் உதவியுடன் இந்தியா ஆரியபட்டாவை அனுப்பியது. மக்கள் சீன குடியரசு விண்வெளி துறையில் வளர்ச்சி பெற்ற பிறகு மிகக் குறைந்த கட்டணத்தில் வளரும் நாடுகளின் விண்கலங்களை அனுப்பியது.

விண்ணுலகம் தன்னுலகம் என்று அமெரிக்கா ஆதிக்கம் செய்ய எடுத்த முயற்சிகள் தகர்ந்து வருவதற்கான சான்றுகளில் ஒன்று தான் இந்திய விஞ்ஞானிகளின் சந்திரயான்-3 வெற்றி.

1980 ஆம் ஆண்டு இஸ்ரோ தனது சொந்த முயற்சியால் ஏவு தளங்களையும் ஏவுகணைகளையும் உருவாக்கி எஸ் எல் வி 3 ஏவுகணைகள் மூலமாக முதல் செயற்கை கோளான ரோகினி செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 1979 முதல் 1983வரை நான்கு விண்கலங்களை அனுப்பி இரண்டில் வெற்றியும் பெற்றது. 2008 ஆம் ஆண்டு பி எஸ் எல் வி என்ற புதிய முறைகள் மூலமாக ஒரே முறையில் 10 துணை விண்கலங்களை அனுப்பி இந்தியா ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது  முதல் முயற்சியாக, 2008- ஆம் ஆண்டு ஒக்டோபர் 22-ம் திகதி பி.எஸ்.எல்.வி-சி11 ரொக்கெட் மூலம் ரூ.365 கோடியில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-1 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2009- ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் திகதி 100 கி.மீ. தொலைவிலான நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 11 அறிவியல் கருவிகளைத் தாங்கி சென்ற சந்திரயான்-1, நிலவில் தண்ணீா் இருப்பதை உறுதி செய்தது.

தொடர்ந்து இஸ்ரோவின் விண்வெளி ஆய்வுகள் முன்னேறிக்கொண்டே இருந்தன. ரூ.604 கோடி செலவில் உருவான சந்திரயான்-2 விண்கலம், எல்.வி.எம். ரொக்கெட் மூலம் 2019- ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. செப்ரெம்பர் 6-ஆம் திகதி நிலவின் மீது அதை இறக்கும் முயற்சியின்போது, தோல்வியடைந்தது.
சந்திரயான்-2 தோல்வியில் கிடைத்த பாடங்களின் விளைவாக, தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டா், ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ஆம் திகதி எல்.வி.எம். மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம், 18 நாட்கள் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த 7- ஆம் திகதி  லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டது. லேண்டா் சாதனத்தின் மென் தரையிறக்கம், ஓகஸ்ட் 23 ஆம் திகதி (23-8-23) புதன்கிழமை மாலை

6.03 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த விண்கலம் மூலமாகவும் நிலவில் தரை இறங்கியுள்ள ரோவர் கருவி மூலமாகவும் நிலவில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், லித்தியம், ஹைட்ரஜன் போன்ற கனிமங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து பூமிக்கு தகவல் தெரிவிக்கப்படும். நிலவில் ஆய்வை துவங்கி ரோவர் வெற்றிகரமாக செயற்படத் தொடங்கி விட்டது.

இந்த விண்கலம் வெற்றி பெற்றதன் மூலமாக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவும் தனது முக்கியமான பங்கைப் பெற ஆரம்பிக்கும்.

உலக விண்வெளி பொருளாதாரம் 550 பில்லியன் டொலரை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் தற்போது 10 முதல் 11 பில்லியன் டொலராக உள்ளது. சந்திரயான் 3 வெற்றியின் மூலம், மேலும் வளம் பெறும்.

2023-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரம் ஏற்கனவே 546 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்று விண்வெளி அறக்கட்டளை தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 91% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 2025-க்குள் 13 பில்லியன் அமெரிக்க டொலரை  எட்டும். 2020ல் இது 9 பில்லியன் டொலராக இருந்தது. அதாவது விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் உலகளாவிய பங்கு தற்போது மிகவும் குறைவாக உள்ளது.

1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் நிலவிலும் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு அமெரிக்காவிற்கு அச்சம் ஏற்பட்டது. எனவே 1960 ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தம் (outer space treaty) போடப்பட்டது. பிறகு 1967,1968 ,1972 ,1975 ,1979 ஆகிய ஆண்டுகளில் பல துணை ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியமான சாராம்சம் விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுச்சொத்து என்று ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என சோவியத் யூனியன் நிபந்தனை வைத்ததின் பெயரில் அந்த சரத்து சேர்க்கப்பட்டது.

இதுவரை அப்படித்தான் இருந்தது. தற்போது அமெரிக்கா தனக்குத்தானே ஒரு சட்டத்தை இயற்றி விண்வெளியில் ஆய்வை மேற்கொள்ளலாம் என்று அறிவித்தது. நிலவில் தனியார் விண்கலங்களும் செல்லலாம் என்று தனியார் மயம் ஆக்கியது. நிலவில் இருக்கும் தாதுப் பொருட்களை (குறிப்பாக  ஹீலியம்) கொள்ளை அடிப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசுகள் முயற்சி செய்கின்றன. நிலவு வணிக மயத்திற்கும் தனியார் மயத்திற்கும் ஆளாகிறது.

Deloitte அறிக்கையின்படி, 2013லிருந்து 1,791 நிறுவனங்களில் 272 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் தனியார் பங்கு மூலம் திரட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விண்வெளித் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலைமை இந்தியாவில் தாராளமாக நடக்கும். ஏற்கனவே அதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு செய்திருக்கிறது.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பை துவங்குகிற பொழுது அதனுடைய நோக்கமாக விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் நாட்டு நலன்களுக்கு பயன்படுத்துவதற்குமான முறையில் செயல்படுவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் நாட்டு நலனை புறக்கணித்து தனியார்களின் வணிக மயத்தை நோக்கி தள்ளி விடுவதும் மக்கள் வஞ்சிக்கப்படுவதும் நடக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்திய விஞ்ஞானிகளின் சரித்திர சாதனையை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் அதே நேரத்தில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவியல் துறையை ஏதாவது ஒரு வடிவத்தில் மூட நம்பிக்கை அமைப்புக்குள் திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.

விண்கலம் மாதிரிகளையும் ஏவுகணை மாதிரிகளையும் உருவாக்கி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் செல்லக்கூடிய செயல்களை எல்லாம் ஊக்குவிக்க கூடிய பணிகளும் நடைபெறுகிறது. எனவேதான் ஒன்றிய அரசின் மூட நம்பிக்கையில் இந்திய மக்களை மூழ்கடிப்பதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு எதிராக மிகப் பெரிய சவாலாகவும் வெற்றியாகவும் தான் சந்திரன்யான் விண்கலத்தில் பயணம் தொடங்கி இருக்கிறது. இது முற்போக்கு சக்திகளின் முன்னேற்றத்திற்கான பாதையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

அ.பாக்கியம்

Related Articles

Back to top button