தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை நேரத்தில் குவிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கறுப்பு நிற எஸ்யூவி வாகனங்கள் சைரனை ஒலிக்க செய்தபடி ஜனாதிபதி மாளிகை வளாகத்தை விட்டு வெளியேறின.
கடந்த மாதம் தென்கொரியாவில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சியால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பையடுத்து யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் இன்று முயற்சித்தனர். அது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள், ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி யூன் சாக் யோலை கைது செய்தனர்.
தென்கொரியாவில் ஜனாதிபதியொருவர் கைது செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.