மனித குலமானது ஆண், பெண் என்ற இருபாலினராக அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட காலம் இப்போது மாறி வருகின்றது. பிறப்பால் ஆண் எனவும், பெண் எனவும் முத்திரை குத்தப்பட்டு, அதற்கேற்ற குணாதியங்களுடன் ஒத்தவர்களாகவே மனிதர்கள் நோக்கப்பட்டனர். இயற்கையாக ஒரு மனிதனில் ஏற்படும் பாலின வேறுபாடுகளை மதமோ அல்லது சமூகமோ இலகுவாக ஏற்றுக் கொண்டு விடவில்லை. சமூகத்தினரால் சொல்லாலும் செயலாலும் வருத்தப்படுவதால், உண்மையை உள்ளுக்குள் வைத்துக் குமையும் ஒரு அவல நிலை உலகெங்கும் காணப்படுகின்றது அதிலும் பாலின வேறுபாடுகள் பற்றிய அறிவோ அல்லது புரிதலோ இல்லாத கீழைத்தேய நாடுகளில் அவர்கள் சமூகத்துக்கு முரணானவர்கள் எனக் கருதப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவுஸ்ரேலியா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில், அவ்வாறான ஒரு பாரபட்ச நிலைமை இருக்காது என்ற எதிர்பார்ப்புக்குப் புறம்பாகவே நடப்பு நிகழ்வுகள் இருக்கின்றன.
LGBTQ என்று சுருக்கமாகக் கூறப்படுவதற்குள் ஆண் -பெண் என்ற திட்டவட்டமான இருபால் தவிர்ந்த லெஸ்பியன் (ஓரினப்பாலுணர்வுள்ள பெண்கள்) Gay (ஓரினப்பாலுணர்வுள்ள ஆண்கள்) Bisexual (இருபாலின ஈர்ப்பு) Transgender (மாற்றுப்பாலினம்) போன்ற மேலும் பல பாலின வேறுபாடுகள் அடக்கப்பட்டுள்ளன. ஹோர்மோன்கள், மரபு ரீதியான காரணங்கள், ஒரு மனிதனின் சுய விருப்பம் அல்லது தெரிவு போன்றன இவ்வாறான பால் வேறுபாடுகளுக்குக் காரணமாக அமைகின்றன. காலத்தோடு ஏற்படும் மாற்றங்களாக இவற்றையும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் இருந்தாலும் அது அத்தனை சுலபமானதாகக் காணப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில் 2026 ஆம் ஆண்டுக்கான சனத்தொகைக் கணக்கெடுப்பில் இந்தப் பாலின வேறுபாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் அறிவித்தலால் தற்போதைய பேசுபொருளாக இவ்விடயம் மாறியிருக்கின்றது. சனத்தொகைக் கணக்கீட்டின் போது சேகரிக்கப்படும் புள்ளிவிபரமானது, அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை வகுக்க உதவுவதுடன் நிதி ஒதுக்கீடு சம்பந்தமான முக்கிய முடிவுகளையும் எடுக்க உதவுகின்றது என்பது இந்த விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை.
2023 ஆம் ஆண்டுக்கான லேபர் கட்சிப் பிரமாணத்தின் படி 2026 ஆம் ஆண்டுக்கான கேள்விக் கொத்தில் மாற்றுப் பாலினங்களை வேறுபடுத்தி அறிவதற்கான கேள்வி உள்ளடக்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதை சனத்தொகை கணக்கெடுப்பு வாரியத்தின் கேள்விக்கொத்துக்கான மீளாய்வு அறிக்கையும் உறுதிப்படுத்தியிருந்தது. ஆயினும் மாற்றுப் பாலினத்தினரை அறிவதற்கான எந்த விதமான கேள்விகளும் உள்ளடக்கப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பைத் தொடர்ந்து பெரும் அதிருப்தி அலை ஒன்று கிளம்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக 2026 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் இது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட உறுப்பினரான டேவிட் குறூனன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார்.
இது சம்பந்தமாகக் கருத்துரைத்த அவுஸ்ரேலிய பிரதம மந்திரி அவ்வாறான ஒரு கேள்வியை உள்ளடக்குவதன் மூலம் மக்களிடையே பாகுபாட்டைக் கொண்டு வந்து, பாலின வேறுபாடு உடையவர்களை சமூகத்தில் வேறுபடுத்திப் பார்ப்பதை விரும்பாததால் தான் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
பழங்குடியினரின் கலாசார வேறுபாடுகள், அவர்களின் மூதாதையினர் சம்பந்தமாக அறிவதற்குக் கணக்கெடுப்பில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூடவே ஒரு சமாதான அறிக்கை வெளியிடப்பட்ட போதும் , மாறி வரும் பாலின வேறுபாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதும் இதன் பின்னணியில் வேறு விதமான அழுத்தங்கள் இருக்கின்றனவா என்பதும் கேள்விகளாக எழுந்துள்ளன.
மாற்றுப் பாலினத்தினர் தொடர்பான கேள்விகள் உள்ளடக்கப்பட்டு அவர்கள் தொடர்பான தகவல்கள் ஏன் திரட்டப்பட வேண்டும்? இன்றைய இளம் சந்ததியினர் பலரிடையே மாற்றுப் பாலினம் என்பது பெரும் உளவியல் பிரச்சனையாக உருவாகி வருகின்றது. தம் உடல் பற்றியோ அல்லது உளம் பற்றியோ வெளியில் சொல்லத் தயங்குவதால் அவர்கள் மனரீதியான பாதிப்புள்ளாகி, தற்கொலை, சட்டத்துக்குப் புறம்பான போதை மருந்துப் பாவிப்பு, மனஅழுத்தம், வீட்டில் தங்கியிருக்க முடியாமல் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் சமூகத்துக்கு அஞ்சி உடல் ரீதியாக எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெற முடியாமலும் தவிக்கின்றார்கள். தம்முடன் தாமே போராடிக் கொண்டிருப்பவர்களிற் பலர் பாலியற் தொல்லைகளுக்கு உள்ளாவதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் சம்பவங்களையும் மறுப்பதற்கில்லை.
கணக்கெடுப்புப் புள்ளி விபரமானது மாறுபட்ட பாலினத்தினரில் இத்தனை சதவீதமானோர் இருக்கின்றார்கள் என்று வெளிப்படையாக அறிவிக்கும் போது, அதனால் நிறைய நன்மைகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்கள், தாம் மட்டும் தனித்தவர்கள் அல்ல, தம்மைப் போல் இன்னும் பலர் இந்த சமூகத்தில் இருக்கின்றார்கள் என்று உணரும் போது கிடைக்கக் கூடிய மனஆறுதல் மிக முக்கியமானது. எம்மைச் சுற்றிலும் அவ்வாறான பலர் வாழ்கின்றார்கள் என்று தெரிய வரும் போது, சமூகமும் அந்த உண்மையை இலகுவாக ஏற்றுக் கொள்ளக் கூடும். அதனால் அவ்வாறானோரை தவறாக நோக்கும் சமூகத்தின் கண்ணோட்டம் மாறுவதற்கான வாய்ப்பும் உருவாகும்.
அது மட்டுமல்லாமல் பாலின வேறுபாடு கொண்டவர்கள், வெளியுலகைப் பற்றிய அச்சமின்றித் தமக்கான வைத்திய உதவியையோ அல்லது கல்வியையோ எந்தத் தயக்கமுமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆண், பெண் கழிப்பறை என்று மட்டும் மட்டுப்படுத்தி இருக்கும் இடங்களில் எல்லாம் பாலின வேறுபாடுள்ளவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள். எந்தக் கழிப்பறையைப் பாவிப்பது என்று தெரியாமல் குழம்புகின்றார்கள். மனிதர்களில் வேறுபாடு காட்டாமல் எல்லோரும் ஒரே விதமாகத் தான் நடத்தப்படுகின்றார்கள் என்ற அடிப்படை மனித உரிமைக்கூற்று இங்கே பிழைத்து விடுகின்றது அல்லவா? உடலில் ஏற்படும் மாற்றங்களுடனும் உள்ளத்தில் ஏற்படும் குழப்பங்களுடனும் போராடுபவர்களை சமூகமும் வேறுபடுத்திப் பார்ப்பது நியாயமாக இருக்க மாட்டாது என்ற உண்மையை சகமனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மெல்பேர்ன் மாநில முதல்வருடன், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கொடுத்து வரும் அழுத்தத்தினால், பாலின வேறுபாட்டாளர்களை அடையாளம் காணும் ஓரிரு கேள்விகள் 2026ல் உள்ளடக்கப்படலாம் எனுமளவுக்கு அரசாங்கம் இறங்கி வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. மதத்தை அடிப்படையாகக் கொண்ட பாடசாலைகளில் சில இவ்வாறான பல்லினப்பாலியற் கருத்தைக் இன்னமும் ஆதரிக்கத் தயாராக இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது எனினும் அவை அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுவதில்லை.
இவ்வாறான சமூக அங்கீகரிப்புகளை மனிதன் தனக்குச் சாதகமாக்கி தன் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு கொள்ளலாம். ஆனால் ஆண், பெண் என்ற இயற்கையின் படைப்புக்கு முற்று முழுதாக எதிரியாகி, மனதளவில் தன்னைத் தானே குழப்பிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கின்றது. குழப்பமான மனத்தெரிவுகள் அதிகமாகி மனித இனத்தின் இருப்பு கேள்விக்குறியாக மாறாமல் இருக்க வேண்டுமாயின், அதற்கான தெளிவும், கல்வியறிவும் இளம்சமுதாயத்துக்கு வழங்கப்பட வேண்டும்.