இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன
முதல் நாளாக இரவுப் பொழுது குண்டு மழை, துப்பாக்கி தாக்குதல்கள் இல்லாமல் காசா மக்கள் கழித்தனர். குறிப்பாக மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் 630 டிரக்குகள் காசாவுக்குள் சென்றன. இவற்றில் 300 டிரக்குகள் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு காசாவுக்குள் சென்றன.
முன்னதாக, இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ்தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர்.
இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கத்தார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், பிணைக் கைதிகள் பட்டியலை அனுப்ப ஹமாஸ் தாமதப்படுத்தியதால் 3 மணி நேரம் தாமதமாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவது தாமதமானதால் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது இதில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.