ஜெ.பிருந்தாபன்
புவிச்சரித வரலாற்றுக் காலத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவியதாகக் கருதப்படுகின்ற மயோசீன் காலத்தில் யாழ்ப்பாண குடாநாடு கடல் பகுதியிலிருந்து மேலுயர்த்தப்பட்டதாக புவிச்சரிதவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடல் பகுதியினுள் படிவான பல்வேறு அடையல்களும் ஆழமற்ற பகுதிகளிலிருந்த உயிரினங்களும், சேதனவுறுப்புக்களும், மேலுயர்த்துகையின் பின் கரைசல்பட்டு இறுகிச் சுண்ணாம்புக் கற்களாயின.
இவ்வாறு தோன்றிய சுண்ணாம்புக் கற்பாறை குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளிலில் வேறுபட்ட தன்மையுடையதாகவும், வெவ்வேறு ஆழத்திலிலும் காணப்படுகின்றது.
இதுவரை குடாநாட்டின் பல பகுதிகளின் மேற்பரப்பிலும், ஆராய்ச்சிக்காக இடப்பட்ட துளைகளின் மூலமும், குழாய்க்கிணறுகளை அமைப்பதற்குத் துளையிடப்பட்டபோதும் பெறப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இங்கு காணப்படுகின்ற சுண்ணாம்புக் கற்பாறையினை முருகைக் கற்பாறைத் தன்மைகொண்ட சுண்ணாம்புக் கற்பாறை என்றும், மக்கித் தன்மையுடைய உலர்ந்த சுண்ணாம்புக் கற்பாறை என்றும், மணல் தன்மை கூடிய வைரச் சுண்ணாம்புக் கற்பாறை என்றும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.
குடாநாட்டின் வடபகுதியில் சுண்ணாம்புக் கற்பாறைகள் உயர்த்தப்பட்ட நிலையிலும் தெற்காகவும், தென்மேற்காகவும் சாய்ந்து காணப்படுகின்றன. இப்பாறைகள் குடாநாட்டின் சில பாகங்களில் ஏறத்தாழ 350 அடி தொடக்கம் 450 அடி ஆழம்வரை அமைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
இவை தோன்றிய முறையில் வெவ்வேறு அடையல்களாகவும், இதில் அமைந்துள்ள உயிரின சேதனவுறுப்புக்களின் காரணமாக இடத்துக்கிடம் வேறுபட்ட சேர்க்கையினால் வேறுபட்ட அளவில் நுண்துளைமையைக் கொண்டுள்ளவையாகவும், அதற்கேற்ப நீரை உட்புகவிடக்கூடிய தன்மையுடையனவாகவும் இருக்கின்றன. அத்துடன் நீரில் கரையும் தன்மையைக் கொண்டிருப்பதனால், குடாநாட்டின் மேற்பரப்பின் கீழ் இப்பாறைகள் கரைந்து, மூட்டுகளும், வெடிப்புகளும், பிளவுகளும் தோன்றியுள்ளன. அத்துடன் நீர்தேங்கி நிற்கக்கூடிய குகைளையும், இடைவெளிகளையும் கொண்டமைந்துள்ளன.
ஊடுபுகவிடக்கூடிய சுண்ணாம்புக் கற்பாதையினூடாக நீர் கீழ் நோக்கி கசிந்து, இத்தகைய இடைவெளிகளுனூடே தேங்கி, நீர்கொள்படுக்கையாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு தேன்கூட்டைப்போன்றே யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் பாகம் அமைந்திருக்கின்றது.
அத்தகைய தேன்கூடு முழுவதும் நீர் நிரம்பியிருக்கிறது. சுண்ணாம்புக்கற்கள் அத்தேன்கூடாகிய நீர்க்கூட்டைத் தாங்கிவைத்திருக்கின்றன. இந்தக்கூடுகள் ஒன்றோடு ஒன்று மிக நீண்ட தொடர்புடையவை. இதனால்தான் கீரிமலையில் போடப்படும் தேசிக்காய் தொண்டைமனாற்றில் மிதக்கிறது. அந்தளவிற்கு விரைவான நீரோட்டத்தையும் இயற்கையான முறையில் இந்த சுண்ணக்கற்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.
யாழ்ப்பாண நிலத்திற்கு இயற்கை அளித்த பெருங்கொடைதான் இந்தச் சுண்ணக்கற்கள். இந்தச் சுண்ணக்கற்கள் இல்லாவிடின், அல்லது, அதன் நிலக்கீழ் தளக்கோளத்தில் சிதைவு ஏற்பட்டால் விரைவாகவே கடல் நீர் உள்நுழைந்துவிடும். இதனால் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீருக்கு உப்புத்தன்மை ஏற்படுவதுடன், நிலத்தின் மேற்படையும் உவர்த்தன்மையாகிவிடும். எனவேதான் யாழ்ப்பாணத்தின் உயிர்க்கோளம் நிலைத்திருக்கவேண்டுமாயின் சுண்ணாம்புக்கற்களின் இருப்பு மிக அவசியம் என்கிற விடயம் வலியுறுத்தப்படுகின்றது.
ஆனால் யாழ்ப்பாணத்தின் கள நிலமையோ வேறானதாக இருக்கின்றது. பெரு வணிக மாபியாக்கள், கல்லுடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள், கனிமவள வியாபாரிகள் யாழ்ப்பாணத்தின் உயிர்மூச்சையே விற்றுப் பணமாக்குவதற்குத் தம்மால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதனையெல்லாம் செய்கின்றனர். அதற்காக அவர்கள் செய்யும் திருக்கூத்துக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. சுண்ணக்கல் வளமுள்ள காணிகளை விலைக்கு வாங்கி, அந்தக் காணியில் எவ்வளவு ஆழத்திற்கு சுண்ணக்கற் படைகள் உள்ளனவோ அதனை அகழ்ந்து விற்பனைசெய்வது.
2. தம் காணிகளை விட்டு புலம்பெயர்ந்திருக்கின்றவர்களி
3. விவசாயிகளைத் தொடர்புகொண்டு, சுண்ணக்கல் அகழவேண்டிய காணிகளைத் தமக்குத் தந்தால் தாம் இலவசமாக அந்தச் சுண்ணக்கற்களை அகழ்ந்து காணியைப் பண்படுத்தித் தருவதாகவும் கூறி, அங்கே தம் கைவரிசையைக் காட்டுவது. விவசாய நடவடிக்கைகளுக்காக இரண்டரை அடி வரை சுண்ணக்கற்களை அகழலாம் என்பதற்கு அனுமதியுள்ளபோதிலும், வியாபாரிகள் பெருங்குழிகளை ஏற்படுத்தி அகழ்வுசெய்கின்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
4. அண்மை நாட்களாக வீதிகள், பொது இடங்கள் போன்றவற்றில் படிந்திருக்கின்ற சுண்ணக்கற்களை இரவோடிரவாக அகழும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.
5. இவ்வாறு அகழப்படும் சுண்ணாம்புக்கற்களை முழுமையாக வீதியில் வாகனங்களில் எடுத்துச்செல்லமுடியாது. எனவே அதனை அயலில் உள்ள ஆலைகளுக்கு அனுப்பி, அங்கு சல்லியாக அல்லது மாவாக மாற்றி, திருகோணமலை சீமெந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லுகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில், யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்விற்கு சுற்றுச்சூழல்சார்ந்தவர்களும், மக்களும் நீண்டகாலமாகவே குரல்கொடுத்துவருகின்றனர். சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திவருகின்றனர். ஆனால் உரியதரப்பினர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் கொடுத்த நெருக்குவாரங்களின் காரணமாக, வேறுவழியே இல்லாமல் அவர்கள் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை நிறுத்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றிய போதிலும், அவை நடைமுறைக்கு வந்ததில்லை.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சாவகச்சேரி, வேம்பிராய் மக்கள் பலமுறை முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். மக்களின் முறைப்பாட்டுக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சுண்ணக்கற்கள் அகழப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்.
அவர் அவ்விடங்களைச் சென்று பார்வையிட்டபோதும், எதுவித நடவடிக்கைகளுக்கும் எடுக்க முடியாதவராக இருந்தார். எனவேதான் கொதிப்படைந்த பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த சில வாரங்களாகவே தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
மாற்றத்தை ஏற்படுத்துவார்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பார்கள் என நம்பி வாக்களித்த தேசிய மக்கள் சக்திகூட இதுவிடயத்தில் தம் பக்கம் இல்லை என்பதை சுட்டிக்காட்டினர். விடயம் இளங்குமரனின் காதுக்குப்போகவே, வேறு வழியே இல்லாமல் களத்தில் குதித்தார் அவர். கடந்தவாரம், நுணாவில் பகுதியில் சல்லியாக்கப்பட்ட சுண்ணக்கற்களை (கண்டக்கல் அல்லது வெள்ளைச்சல்லி என்கின்றனர்) ஏற்றிப் பயணித்துக்கொண்டிருந்த, “சிற்றி ஹார்ட்வெயார்” வணிக குழுமத்திற்குரிய கனரக வாகனமொன்றை வழிமறித்து, அதனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தார் அவர்.
ஆனால் மறுநாளே பொலிஸ் நிலையத்தை நாடியது குறித்த “சிற்றி ஹார்ட்வெயார்” வணிக நிலையம். முறைப்பாட்டின் பின்னர் ஊடகங்களை சந்தித்த குறித்த வணிக நிலையத்தின் உரிமையாளர், 68 வருட பாரம்பரியமுடைய தமது வணிக நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்தினைப் பதிவிட்டமைக்கு எதிராகவே நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாகவும், வெள்ளைச்சல்லி எடுத்துச்செல்வதற்கு வாகன அனுமதி பெறத்தேவையில்லை எனவும், கடந்த காலத்தில் இந்த விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதனையும் அறிந்திராத நாடாளுமன்ற உறுப்பினர் அவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
குறித்த வணிக உரிமையாளர் குறிப்பிட்ட வெள்ளைச் சல்லிக்கு வாகன அனுமதி பெறத்தேவையில்லை என்கிற விடயம்கூட தவறானது என்பதை உறுதிப்படுத்தும், கனிமவளத் திணைக்களத்தின் கடிதம் ஒன்றினையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட யாழ்ப்பாண பொலிஸார், குறித்த சுண்ணாம்புக்கல் அகழ்வு விடயம் தம்மோடு சம்பந்தப்பட்டதல்ல எனவும், கனிமவளத் திணைக்கள அதிகாரிகளே அதற்குப் பொறுப்பானவர்கள் எனவும், அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தமது எதிர்கால நடவடிக்கைகள் அமையும் எனவும் தெரிவித்தனர்.
இப்படியாக கையுமெய்யுமாகப் பிடித்துக்கொடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை ஒன்று குறித்து பொறுப்புச்சொல்லவேண்டிய, நடவடிக்கை எடுக்கவேண்டிய அனைத்து தரப்பினரும், ஆளையாள் விரல்சுட்டிக்காட்டி விலகிக்கொண்டிருக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், இது விடயத்தில் யாழ். மாவட்ட அரச அதிபரும், பிரதேச செயலாளரும் பதில் தரவேண்டும் எனக் குறிப்பிட்டு நழுவிவிட்டார். இதே சந்திரசேகரன், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு, தாம் பொன்னாவெளியிலிருந்து ஒரு துண்டு சுண்ணக்கல்லைக்கூட எடுத்துச்செல்ல அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்திருந்தமையை அனைவரும் நன்கு நினைவுவைத்திருக்கின்றனர்.
வணிக மாபியாக்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கு
இந்த விடயத்தில் மக்களின் பக்கம் நின்று, உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் இந்த விடயத்தில் ஊடக நிறுவனங்கள் கண்டும் காணாதபோக்கினையே கடைபிடிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஆழக்கால் பதித்திருக்கும் வணிக நிறுவனமொன்றை பகைக்கும் விதமாக செய்தி வெளியிட்டால், விளம்பரம் கிடைக்காது போகும் என்கிற ஒரே காரணத்தினால்தான் யாழ்ப்பாண ஊடகங்கள் இப்படியொரு மென்மைப்போக்கை கடைபிடிக்கின்றன என்பதை மக்கள் அறியாமல் இல்லை.
வடக்கு, கிழக்கு பாகங்களில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வளச்சுரண்டல்களுக்கு எதிராக செய்திசேகரிப்பில் ஈடுபடும், சமூக வலைதளங்களில் எழுதிவரும் ஊடகவியலாளர்களைத் தாக்கி அச்சுறுத்தும் போக்கொன்றும் உருவாகிவருகின்றது.
அண்மை வாரங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் எழுதிவந்த ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்குள்ளானார். அவர் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பில் அடையாளப்படுத்திய போதிலும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதேபோல மட்டக்களப்பின், சம்மாந்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வினை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரும் மணல் அகழ்பவர்களால் தாக்கப்பட்டு, அவரின் தொழில் உபகரணங்களும் பறித்துச்செல்லப்பட்டுள்ளன. எனவே வடக்கு, கிழக்கின் மொத்த வளங்களையும் சூறையாடிக்கொண்டிருக்கும் இந்த வணிக மாபியாக்கள் குறித்து ஊடகங்களும் வெளிப்படுத்துவதில்லை. அதனை செய்தியாக்க முனையும் ஊடகவியலாளர்களுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையும் உருவாகியிருக்கிறது.
மறுபுறத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றவேண்டிய இடத்தில் இருக்கின்ற துறைசார் அரச அதிகாரிகள் இதுவிடயத்தில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. எனவே பொதுமக்கள் குறிப்பிடுவதுபோல, இந்த அரச அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களிடம் கையூட்டைப் பெற்றுக்கொண்டு அமைதிகாக்கின்றனர் என்பதில் உண்மையிருப்பது உறுதியாகின்றது. அதேபோல நாட்டில் தமிழ் மக்கள் எங்கே போகின்றனர், யாரோடு தொடர்பு வைத்திருக்கின்றனர் என்பதைக் கவனிப்பதிலேயே தம் முழுக்கவனத்தையும் வைத்திருக்கின்ற புலனாய்வுத்துறையினர், இராணுவத்தினர், பொலிஸார் இந்த சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு விடயத்தில் கடுகளவு கரிசனையும் காட்டுவதில்லை. கவனிப்பதுமில்லை.
தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நிலைமையோ சொல்லவே தேவையில்லை. தமிழ் மக்களுக்கும், தமிழர் நிலத்திற்கும் ஆபத்து நேரும்போது முதலில் களத்தில் நிற்கவேண்டியதும், குரல்கொடுக்கவேண்டியதும் தமிழ்த் தேசியக் கட்சிகள்தான்.
சுண்ணக்கல் அகழ்வென்பது தமிழர்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாண நிலத்தையே பாழாக்கும் நடவடிக்கை. எனவே தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்தான் இதுவிடயத்தில் முதலில் களத்தில் இறங்கியிருக்கவேண்டும். தடுத்து நிறுத்தப் போராடியிருக்கவேண்டும். ஆனால் இவ்வளவு பிரச்சினைகள் நடந்துள்ளபோதிலும், எந்தவொரு தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகளும் இதுவரையில் ஒரு துண்டுப்பிரசுரம் கூட வெளியிடவில்லை. எனவேதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரித்தமையே சரியென்றாகிறது.
போர் முடிவுற்ற காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்தின் கனிமவளங்களான மணல், சுண்ணாம்புக்கற்கள் போன்றன சட்டவிரோதமான முறையில் அகழப்பட்டுத் தெற்கிற்கு கொண்டுசெல்லப்படுகின்றன. சட்டவிரோதமான முறையில் வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்தும், பூநகரியின் கௌதாரிமுனையிலிரும் மணல் ஏற்றிச்செல்லப்படுகின்றது என்கிற குற்றச்சாட்டுக்கள் இன்றும் குறைந்தபாடில்லை. மக்கள் இன்றும்கூட இந்த சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஒருவர் கூட இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்கூட வடமராட்சி கிழக்குப் பகுதியில் சிலவருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து கனிமவளங்களை அள்ளிச்செல்வது என்ப நன்கு திட்டமிட்ட வகையில், அதிகாரமிக்கவர்களின் மெய்ப்பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றது.
அதனை யாராலும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. சட்டவிரோத கனிமவள அகழ்வுக்கு எதிரான பொலிஸ் முறைப்பாடுகள், திணைக்களங்கள் ரீதியான நடவடிக்கைகள், நீதிமன்ற வழக்குகள், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் என எதனாலும் இந்த சட்டவிரோத கனிமவள கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியாயின் இதற்குப் பின்னால் மிகப் பலமானதொரு தரப்பு உள்ளதென்று தானே அர்த்தம். அந்தத் தரப்பினரின் அழுத்தம்தான் பலரையும் மௌனிக்கச்செய்திருக்கிறது. இந்த விடயத்தை கண்டுங்காணாமல் கடந்துபோகச் செய்திருக்கிறது. இந்நிலமை நீடிக்கத்தான் போகிறது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர்வளமும், இயற்கை யாழ்ப்பாணத்திற்கு அளித்த அருங்கொடையும் அழிக்கப்படத்தான் போகிறது.