உலகில் மிகப்பெரிய ஆன்மீக விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளா, கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனால் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அங்கு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயமடைந்துள்ளனர். காயம் குறித்து மட்டுமே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
உயிரிழப்புகள் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசியில் நிலவரம் குறித்து விசாரித்தனர். பிரதமர் மட்டும் ஒரு மணி நேரத்துக்குள் இரண்டு முறை யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், சங்கம் காட் பகுதியின் முகத்துவாரத்தை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வட இந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசை, மவுனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி மகா கும்பமேளாவில் இன்று (புதன்கிழமை) 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை முன்னிட்டு அம்ரித் கால ஸ்தானம் (புனித நீராடல்) மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ‘திரிவேணி யோகம்’ என்ற வானியல் தினமான இன்று அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.