சமூக ஊடகங்களை ஒடுக்க சதி

banner

போலி தகவல்களை பரப்புவோரை கைது செய்கின்றோம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றஞ்சாட்டினார்.





நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.





இதன்போது சமூகவலைத்தளங்களைக் கண்காணிக்க விசேட சி.ஐ.டி. குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் மனுஷ நாணயக்கார எம்.பி. மேலும் கூறியதாவது,





” போலி தகவல்களை பரப்புவோரை கைது செய்ய நடவடிக்கை என்ற போர்வையில் சமூக ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவராவது போலி தகவல் பரப்பினால் அதற்கு நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்கின்றோம்.





ஆனால், சமூக ஊடகங்களை மிரட்டி, நாட்டின் உண்மையான நிலைவரம் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு சென்றடைவதை தடுப்பதற்காக ஒடுக்குமுறையை அரசு கையாண்டு, கைது படலத்தையும் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன” – என்றார்.