தடைகளைத் தாண்டி மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

banner

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது.





பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில் பொலிசாரும் இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.





பல்வேறு அச்சுறுத்தல் தடைகளையும் தாண்டி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திடலுக்குள் இராணுவத்தால் உள்நுழைய அனுமதிக்கப்பட்ட உறவுகள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன் பொதுச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.





இதன்போது உறவுகளை இழந்தவர்கள், மதத் தலைவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.





இதேவேளை ,இதனை கண்டு அஞ்சலி செய்ய தீருவில் திடலுக்கு வெளியே ஒன்று கூடி தீபங்களை ஏற்றி பொதுமக்கள் அஞ்சலித்த பொழுது மிகக் கேவலமான முறையில் சிவில் உடையில் இருந்த புலனாய்வுப் பிரிவினர் தீபங்களை தட்டி விட்டதுடன் அநாகரிகமான முறையில் செயற்பட்டனர்.





இதேவேளை இந் அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினரும் பொலிசாரும் நடந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்களுடனும் முரண்பட்டனர்.