'இந்தியாவுக்கு கடல் வழியாக செல்பவர்களால் மன்னாருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து'

banner

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாகச் சென்று வருகின்றவர்கள், மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களால் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்தார்.





உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.





-அவர் மேலும் தெரிவித்ததாவது,





-இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று வருவோர், மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களால், மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.





இதனைக் கட்டுப்படுத்த சுகாதார துறையினர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.





இந் நடவடிக்கைகளுக்கு மக்களுடைய ஆதரவை எதிர் பார்த்துள்ளோம்.மக்கள் இவ்விடயத்தில் விழிப்புடன் இருந்து, சுகாதார துறையினருக்கு ஆதரவு வழங்க வேண்டும். -மன்னார் மாவட்டத்தில் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை 11 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





இவர்களில் ஒரு தொற்றாளர் இவ்வருடம் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





உலக எயிட்ஸ் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம் பெற்றது. இதில், வைத்தியர்கள், திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.