இந்தியா படிப்படியாக எமது நாட்டின் முக்கியமான கேந்திர மையங்களை தமக்கு சொந்தமாகும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். இது எமது நாட்டின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
இந்தியா படிப்படியாக எமது நாட்டின் முக்கியமான கேந்திர மையங்களை தமக்கு சொந்தமாகும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்பது மிக தெளிவானது.
தேசிய வளங்களை பாதுகாப்பதாக கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் இரண்டு பகுதிகள் பிரிக்கப்பட்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க போகின்றனர்.
இது எமது நாட்டின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நிலைமை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளியிட வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.