2015 இல் பிரான்ஸை அதிர வைத்த ஐ.எஸ். பயங்கரவாதிக்கு மரண தண்டனை!

banner

2015 நவம்பர் 13 ஆம் திகதி பாரிஸை அதிரவைத்த பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிருடன் தப்பிப் பிடிபட்ட முக்கிய இஸ்லாமியத் தீவிரவாதக் கைதியாகிய சலா அப்தெஸ்லாமுக்கு (Salah Abdeslam) குறைக்க முடியாத ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.





பிரான்ஸின் நவீன வரலாற்றில் மிக நீண்டதும் - அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுமாகக் கருதப்படும் இந்த வழக்கு விசாரணை, தாக்குதல் நடந்து சுமார் ஆறு ஆண்டுகளின் பின்னர் கடந்த ஆண்டு செப்ரெம்பரில் தொடங்கியது. பாரிஸில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு நீதிமன்ற அறையில் கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்றுவந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.





பாதிக்கப்பட்ட குடும்பங்களது உறுப்பினர்கள்,செய்தியாளர்கள் மாத்திரமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்த பெரும்
எண்ணிக்கையானவர்களும் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சமயத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்தனர்.





சலா அப்தெஸ்லாமுடன் வேறு 19 பேருக்கும் சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர் என நம்பப்படுகிறது.





ஐ. எஸ். இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கத்தினால் திட்டமிடப்பட்டு அதன் கொமாண்டோ அணி ஒன்றினால் பாரிஸ் நகரில் அருந்தகம், உணவகம், தேசிய உதை பந்தாட்ட அரங்கு, மற்றும் பிரபல இன்னிசை அரங்கம் (Bataclan music venue) ஆகிய இடங்களில் தொடராகப் பல தற்கொலைக் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டன. பிரான்ஷூவா ஹொலன்ட் ஆட்சியில் நடந்த அந்தத் தாக்குதல் சம்பவம் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு பிரான்ஸ் மீது நடத்தப்பட்ட ஒரு போராகக் கருதப்படுகிறது. சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல நூற்றுக் கணக்கானோர் காயங்களுக்குள்ளாகினர்.





அப்தெஸ்லாம் தன் மீதான வழக்கு விசாரணைகளின் தொடக்கத்தில் தன்னை ஐ. எஸ். இயக்கத்தின் ஒரு "போர் வீரன்" என்று பிரகடனப்படுத்தியிருந்தார். ஆனால் பின்னர் இடையில் தான் ஒரு கொலைகாரன் அல்லன் என்றும் கொலைகளைச் செய்வது
தன்னுடைய நோக்கம் அல்ல என்றும் சாட்சியமளித்திருந்தார். தனக்குக் கொலைத் தண்டனை வழங்குவது அநீதி என்றும் அவர் வாதிட்டிருந்தார்.





தாக்குதல் அணியில் ஏனையோர் கொல்லப்பட்டதும் உயிருடன் தப்பி ஓடிய சலா அப்தெஸ்லாம் தான் அணிந்திருந்த தற்கொலை அங்கியைப் பாரிஸின் புற நகர் ஒன்றில் கைவிட்டுச் சென்றிருந்தார். குண்டுத் தாக்குதலின் போது எவரையும் கொல்வதற்கு விரும்பாததால் தனது தற்கொலை அங்கியை வெடிக்க வைப்பதைத் தவிர்த்தார் என்ற அவரது கூற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்கொலை அங்கி செயலிழந்த காரணத்தினாலேயே அது வெடிக்கவில்லை என்பதை விசாரணையாளர்கள் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தனர்.





அப்தெஸ்லாமுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்றினால் குற்றச் செயல்களுக்காக வழங்கப்படுகின்ற அதி கூடிய உச்சத் தண்டனை ஆகும்.





  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்-