மிங் விலங்குகளை அழிக்க எடுத்த முடிவு அநீதி! சட்டவிரோதம்!

World 1 வருடம் முன்

banner

" கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக நாட்டின் மிங் பாலூட்டி விலங்கினங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கொன்றொழிப்பதற்கு டெனிஷ் பிரதமர் மெற் ஃபிரெடெரிக்ஸன் எடுத்த முடிவு அநீதியானது. சட்டத்துக்குப் புறம்பானது."





-இவ்வாறு அந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய 'மிங் ஆணைக்குழு' (Mink Commission) அதன் அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.





உலகம் முழுவதும் கொரோனாப் பெருந்தொற்று நோய் தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்த 2020 ஆம் ஆண்டில்,டென்மார்க் நாட்டின் சில பண்ணைகளில், தோலுக்காக வளர்க்கப்படுகின்ற சிறிய மிங் (mink) விலங்குகளிடையே, வைரஸ் தொற்றியமை கண்டறியப்பட்டது.





அதனையடுத்து, சட்டபோதிய கால அவகாசம் எதுவும் வழங்காமல் - மாற்று நடவடிக்கைகள் எதனையும் பரிசீலிக்காமல் - விலங்குகள் அனைத்தையும் கொன்றுவிடும்படிபிரதமர் ஃபிரெடெரிக்ஸன் அம்மையார் செய்தியாளர் மாநாடு ஒன்றைக் கூட்டி அவசர அறிவிப்புச் செய்திருந்தார். குழந்தை குட்டிகள் என்ற பேதம் இன்றி மில்லியன் கணக்கான மிங் விலங்குகள் கொத்துக் கொத்தாகக் கொன்று புதைக்கப்பட்ட காட்சிகள் அச்சமயம் முழு நாட்டையும் உலுக்கியிருந்தன.





ஆரோக்கியமான நிலையில் இருந்த விலங்கினங்களும் தங்கள் வாழ்வாதாரமும் ஓரிரு நாள்களில் அடியோடு அழிக்கப்பட்ட அநீதி குறித்துப் பண்ணையாளர்கள் தொலைக்காட்சிகளில் தோன்றிக்கண்ணீர் சிந்தினர்.





பண்ணையாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் எடுத்திருந்த அந்த விலங்கினப் படுகொலைத் தீர்மானத்தையே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு "அநீதியானது, சட்டத்துக்குப் புறம்பானது" என்று சாடி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.





ஆரோக்கியமானவை நோயுற்றவை என்ற தெரிவு இன்றியே 17 மில்லியன் மிங் விலங்குகளையும் கொன்றுவிடுமாறு 2020 நவம்பர் 4ஆம்திகதி செய்தியாளர் மாநாட்டில் அறிவித்த தீர்மானம் "மிகத் தவறாக வழிநடத்துகின்ற" ஒரு முடிவு (grossly misleading) என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்காகப் பொலீஸ் தலைமை அதிகாரி உட்பட வேறு மூத்த சிவில் அதிகரிகள் சிலர் மீதும் அறிக்கை கண்டனம் தெரிவித்துள்ளது.





விலங்குகளைக் கொல்ல எடுத்த முடிவு சட்டத்துக்குப் புறம்பானது என்பதைத் தான் அறிந்திருக்கவில்லை என்றும் மிகத் தீவிரமான ஒரு தேசிய இடர் கால மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டே அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் பிரதமர் தனது செயலுக்கு விளக்கம் அளித்திருந்தார்.





டென்மார்க்கில் சமூக ஜனநாயகக் கட்சியின் (Social Democratic) சிறுபான்மை அரசு ஒன்றை வழிநடத்துகின்ற பிரதமர் ஃபிரெடெரிக்ஸன் அம்மையாரின் அரசியல் பதவி மீது இந்த விவகாரம் ஆழமான வடுவை ஏற்படுத்தி உள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு எதிராகக் குற்றவிசாரணைப் பிரேரணை(impeachment) ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





பாரிஸிலிருந்து குமாரதாஸன்