மங்கள மீண்டும் ஐ.தே.கவுடன் சங்கமம்?

banner

சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையக்கூடும் என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியிருந்தாலும் மங்கள சமரவீர இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை எனவும், ஆனாலும் எதிர்காலத்தில் அவர் நிச்சயம் இணைவார் எனவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.





ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்த மங்கள சமரவீர, சஜித் அணியுடன் இணைந்து கட்சியை விட்டு வெளியேறி, தொலைபேசி சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். எனினும், வேட்புமனு தாக்கலின் பின்னர் நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை அவர் விடுத்தார். தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் கட்சி ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.





அதன்பின்னர் உண்மையான தேசப்பற்றாளர்கள் எனும் அமைப்பை உருவாக்கினார். தற்போது அதன் ஊடாக பல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார். பலமானதொரு சிவில் அமைப்பை கட்டியெழுப்புவதே மங்களவின் நோக்கமாகும்.





இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக்கட்சி மங்களவுக்கு வலை விரித்துள்ளது. ஐ.தே.கவில் இணையாவிட்டாலும்கூட அக்கட்சியை வழிநடத்தும் சிவில் அமைப்பாக மங்களவின் அமைப்பு விளங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, ரணில் விக்கிரமசிங்கவே சிறப்பான தலைவர் என அண்மைக்காலமாக மங்கள சமரவீர வெளிப்படையாக கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.