ஜனாதிபதி, கூட்டமைப்பினர் அவசர சந்திப்பு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.





இரா. சம்பந்தன் எம்.பியும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.





ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.





ஜி.எஸ்.பி. வரிச் சலுகையைத் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவதற்கான நிபந்தனையாக ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிப்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இலங்கை நீக்கி, மாற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.





இதேவேளை, ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கை இழக்கும் ஆபத்து நிலைமை குறித்து காட்டமான கருத்தை கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.





இலங்கை அரசுக்கும் நாட்டுக்கும் வெளிநாட்டு செலாவணியை ஈட்டித் தரும் ஒரே மார்க்கம் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை மூலமான ஏற்றுமதிதான். இப்போதைய நெருக்கடி நிலையில் அது இரத்துச் செய்யப்பட்டால், நாட்டுக்குப் பெருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.





இந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிக்கவே முதல் படியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்த ஜனாதிபதி முன்வந்துள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.





கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இதுவரை உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் எதையும் நடத்தவில்லை.





"புதிய அரசுடன் பேச்சு நடத்த நாம் தயார். ஆனால், அரசுப் பக்கத்தில் ஜனாதிபதிதான் எம்மைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும். அந்த அழைப்புக்கு நாம் காத்திருக்கிறோம்" என்று கூட்டமைப்பினர் ஏற்கனவே கருத்துக்களை வெளியிட்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.