ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிகாரம் இல்லை - இலங்கை சீற்றம்

banner

இலங்கையின் இறையாண்மையை சவாலுக்குட்படுத்தி அரசமைப்பில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கான அதிகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடையாது. இவ்விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உரிய வகையில் தலையிடும் – என்று அரசு அறிவித்துள்ளது.





இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ வரிச் சலுகை மற்றும் அதனால் கிடைக்கும் பிரதிபலன்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் கடந்த 10 ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.





இலங்கை அரசுக்கு பலவந்தப்படுத்தல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச்செய்ய இயலாது போயுள்ளமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.





இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறியவை வருமாறு,





” ஆடைக் கைத்தொழில் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்மீதே ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை தாக்கம் செலுத்துகின்றது.எனவே, துறைசார் விடயங்கள் தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதற்கான உரிமை சம்பந்தப்பட்ட ஒன்றியத்துக்கு இருக்கின்றது. குறிப்பாக சிறுவர் ஊழியர்கள் மற்றும் ஆடைத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்படுமானால் அவை தொடர்பில் கேள்வி எழுப்பலாம்.





இலங்கை என்பது சுயாதீன நாடாகும். அரசமைப்பின் பிரகாரமே ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. அந்த அரசமைப்பானது மக்கள் இறைமைக்கு உட்படுத்தப்பட்டது. நிறைவேற்று, சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஊடாக மக்களின் இறைமை பாதுகாக்கப்படுகின்றது.





எமது நாட்டுக்கு உதவி வழங்கும் ஏதேனுமொரு நிறுவனம் அல்லது ஒன்றியத்துக்கு இறைமையை சவாலுக்குட்படுத்தி, அரசமைப்பை திருத்துமாறு கோருவதற்கான உரிமை எவ்வாறு கிடைக்கின்றது? அவ்வாறு செய்யாவிட்டால் ‘கழுத்தில் துப்பாக்கி வைப்போம்’ என்ற தொனியில் மிரட்டுவது சாதாரண விடயமா? இது எனது கருத்து. வெளிவிவகார அமைச்சு இது விடயத்தில் தலையிட்டு செயற்படும்.” – என்றார்.