கம்பன்பிலவின் தலைவிதி நாளை நிர்ணயம்

banner

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் வலு சக்தி அமைச்சு பதவியை வகிக்கும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.
 
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு உட்பட பிரதான சபை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமாகும். 5 மணியளவில் சபை ஒத்திவைக்கப்படும்.
 
அதன்பின்னர் நாளை 20 ஆம் திகதி முற்பகல் விவாதம் ஆரம்பமாகி மாலைவரை நடைபெறும். நம்பிக்கையில்லாப் பிரேரணை மாலையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
 
இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட தோழமைக்கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
 
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மொட்டு கட்சி கருத்து வெளியிட்டது. அவர் பதவி துறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க மொட்டு கட்சி முடிவெடுத்துள்ளது.
 
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய சில எதிர்க்கட்சிகளும் எதிராக வாக்களிக்கவுள்ளன. அந்தவகையில் சலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான பெரும்பான்மை அரச வசமுள்ளது.