ரணிலை விளாசித்தள்ளிய பொன்சேகா

banner

சிங்கள, பௌத்த மக்களை ஏமாற்றுவதற்காகவும், வாக்குவேட்டை நடத்துவதற்காகவுமே தற்போதைய ஆட்சியாளர்கள் தேசப்பற்றை கையில் எடுக்கின்றனர். தங்களுக்கு ஏதாவது நடக்க வேண்டுமென்றால் எந்த தரப்புடனும் இணைந்து செயற்பட தயார் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் இது உறுதியானது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.





எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" எரிபொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்களின் பிரதிபலிப்பையே நம்பிக்கையில்லாப் பிரேரணையாக நாம் முன்வைத்தோம். எனவே, மக்களின் கோரிக்கைக்கு செவிமடுப்பவர்களாக, மக்களின் மனநிலையை புரிந்துக்கொள்ளக்கூடியவர்களாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருந்திருந்தால் பிரேரணையை ஆதரித்திருப்பார்கள். வலுசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் என குரல் எழுப்பியவர்கள்கூட அவருக்கு சார்பாகவே வாக்களித்தனர். இதன்மூலம் அவர்களின் கொள்கையற்ற அரசியல் பயணம் தெளிவாகின்றது.





முஸ்லிம் எம்.பிக்களையும் விலைக்குவாங்கியே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அரசு நிரூபித்துள்ளது. அந்த எம்.பிக்கள் எங்களுடன் இருக்கும்போது ஆளுங்கட்சியின் இனவாதம் பரப்பினர். தேசப்பற்று குறித்து முழங்கினர். இன்று என்ன நடந்துள்ளது? எனவே, சிங்கள, பௌத்த மக்களை ஏமாற்றி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவே இந்த அரசு தேசப்பற்று குறித்து கதைக்கின்றது. இனவாதம் மற்றும் தேசியவாதத்தை தூண்டுகின்றது. தங்களுக்கு ஏதாவது நடக்க வேண்டுமென்றால் யாருடனும் இணைந்து செயற்பட தயார் என்ற போக்கிலேயே அரசு உள்ளது.





நாடாளுமன்றத்துக்குள் இந்த அரசை வீழ்த்த முடியாது. தேர்தல் வந்தால் அதனை செய்யமுடியும். மக்கள் எம்பக்கம் உள்ளனர். அரசின் 69 லட்சம் வாக்கு வங்கியில் 29 லட்சம் தற்போது இல்லாமல்போயுள்ளது. தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் அரசை தோற்கடிப்போம்.





ரணில் விக்கிரமசிங்க எம்மால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை குழப்புவதற்கு முற்பட்டனர். ஏனெனில் கூட இருப்பவர்களின் காலைவாருவதும், முதுகில் குத்துவதும் அவருக்கு கைவந்தகலை." - என்றார்.