'மக்கள் நீதிமன்றில் அரசின் விதி தீர்மானிக்கப்படும்'

Politics 2 ஆண்டுகள் முன்

banner

துரதிர்ஷ்டவசமான நிலைமையிலிருந்து மக்களை மீட்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்காவிட்டால், மக்கள் நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் விதி தீர்மானிக்கப்படுவதை தடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.





”மக்கள் நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் விதி தீர்மானிக்கப்படும்” எனும் தலைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.





தான்தோன்றித் தனமான, தூரநோக்கற்ற, பொறுப்பற்ற ஆட்சி காரணமாக கொரோனா தொற்றுக்கு மத்தியில் வேறெந்த நாடும் வீழ்ச்சியடையாத அளவிற்கு, வங்குரோத்து நிலையை இலங்கை அடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





தமது அரசியல் மற்றும் சுயநலவாத நிகழ்ச்சி நிரலுடனான சூதாட்டத்திற்கு மக்களின் வாழ்க்கையை அரசாங்கம் பயன்படுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





இந்த துயரத்தை நாட்டின் அடுத்த தலைமுறை கூட எதிர்நோக்க நேரிடும் என்பதை அரசாங்கம் நினைவிற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





மூன்று வேளைகள் அன்றி ஒரு வேளையேனும் போஷாக்கான உணவை பெற முடியாத அளவிற்கு மக்கள் நிர்க்கதியாகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று வேளை உணவை இரண்டு வேளை, அல்லது ஒரு வேளையாக மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கும் அளவிற்கு ”அரசாங்கத்தின் சுபீட்சம்” பெருக்கெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.





தாங்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், பஞ்சம் நிறைந்த நாடு மற்றும் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





பிரச்சினை ஏற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் பதவிகளில் மாற்றத்தை செய்கிறதே ஒழிய, ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.





பொருளாதார அலகுகளை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டு மக்களுக்கு நிதி ரீதியிலான உந்துசக்தியை காலம் தாழ்த்தாது வழங்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ ​வலியுறுத்தியுள்ளார்.