49,51 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர்களே மிக முக்கியம்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,





ஐநா மனித உரிமை ஆணையக கூட்டம் இன்று ஆரம்பமாகிறது. வருடத்துக்கு மார்ச், ஜூன், செப்டம்பர் என மூன்று முறை இந்த கூட்டம் கூடும். தவிர உலகில் மனித உரிமை கடுமையாக மீறப்படும் வேளைகளில் விசேட கூட்டங்களையும் நடத்தும் வழமை உள்ளது. அப்படியே 2009 மே மாதம் இந்த கூட்டம் இலங்கை தொடர்பில் கூடியது.





நல்லாட்சியில் இலங்கை அரசும் ஒரு பங்காளியாக இணைந்து 2015ல் தீர்மானம் நிறைவேற்றி தன்னை திருத்திக்கொள்ளவும், நடந்த குற்றங்களுக்கு விடை தேடவும் இணங்கியது. பல காரியங்கள் நடந்தன, பல நடக்கவில்லை. ஆயினும் ஐநாவுடன் “தமிழர்களின் வழக்கு” நல்லாட்சியில்தான் ஆரம்பமானது.





இந்த அரசு வந்தவுடன் அந்த “வழக்கில்” இருந்து வெளியேறுவதாக ஆணவத்துடன் அறிவித்தது. அதையடுத்து, இவ்வருடம் 2021 மார்சில் ஐநா மனித உரிமை கூட்டம் கூடி இலங்கை தொடர்பில் தீர்மானித்தது.





இதன்படி, இன்று ஆரம்பம் ஆகும் 48ம் கூட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கை பற்றி வாய்மூல அறிக்கை வெளியிடுவார். அடுத்த 2022 மார்ச் 49ம் கூட்டத்தில், எழுத்து மூல அறிக்கை வெளியிடுவார். அடுத்த 2022 ஜூன் 50ம் கூட்டம் கடந்து போகும்.





அதையடுத்து 2022 செப்டம்பரில் கூடும் 51ம் கூட்டத்தில் இலங்கையின் அதுவரையிலான “மனித உரிமை நடத்தை” தொடர்பில், ஆய்வு செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சிபாரிசுகளை, ஐநா மனித உரிமை ஆணையர் வெளியிடுவார்.





அடுத்த வருட (2022) ஐநா மனித உரிமை 49ம், 51ம் கூட்டங்கள் முக்கியமானவை.





இம்முறை கூட்டத்துக்கு தமிழர்கள் தரப்பில் பல கடிதங்கள் போயின என குறைப்பட்டு, இருக்கின்ற ஒற்றுமையை இன்னமும் குறைத்துக்கொள்ள தேவை இல்லை.





ஐநா மனித உரிமை கூட்டங்களின் போது மாத்திரம் தூக்கத்தில் இருந்து எழும்பாமல், அனைவரும் விழிப்புடன் இணைந்து பயணிக்கலாம்.





அடுத்த வருட மார்ச், செப்டம்பர் ஐநா மனித உரிமை கூட்டங்களின் அவதானத்துக்கு வரும் வகையில், தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள், குறிப்பாக மலையக மக்கள் இந்நாட்டில் எதிர்நோக்கும் அரசியல், சமூக, கலாச்சார, மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் எமது நிலைப்பாடுகளை தெரிவிப்போம்.





இதற்கான செயற்பாட்டு தொடர்பாடல்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.