அலாவுதீனின் அற்புத விளக்கை கையிலெடுக்கவுள்ள பஸில்

banner

அலாவுதீனின் அற்புத விளக்குபோன்று – எவரும் எதிர்ப்பாராத விதமாக – புரட்சிகரமானதொரு வரவு – செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





“ 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. பட்ஜட்டை தயாரிப்பது தொடர்பில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.





எனவே, இந்நாட்டில் உணவு உள்ளிட்ட தேசிய உற்பத்தியை அதிகரித்தல், பாரிய தொழில் துறைகளை மேம்படுத்தல் உட்பட அனைத்து துறைகளிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய வகையிலான முன்மொழிவுகள் வரவு – செலவுத் திட்டத்தில் இடம்பெறும்.





அட, இப்படி ஒரு பட்ஜட்டை முன்வைக்க முடியுமா என பலரும் ஏங்கும் விதத்திலும், எதிர்பாரா வகையிலும் கீழ்மட்டம் முதல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீடே இவ்வாறு முன்வைக்கப்படும். பல புரட்சிகரமான மாற்றங்கள் நடக்கும். அலாவுதீனின் அற்புத விளக்காக அது அமையும்.” -என்றார்.