இலங்கையில் மற்றுமொரு தாக்குதலா? விசாரணை கோருகிறது கத்தோலிக்கச் சபை

banner

" உயிர்த்த ஞாயிறு தாக்குதல்போன்று இலங்கையில் மற்றுமொரு அடிப்படைவாத தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா" -





இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பேராயர் குழுவின் உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ.





கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





"கலபொட அத்தே ஞானசார தேரர் முக்கியத்துவமிக்க அதேபோல சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப்போன்று மற்றுமொரு அடிப்படைவாத தாக்குதல் விரைவில் இடம்பெறக்கூடும் எனவும், எந்நேரத்தில் வேண்டுமானாலும் வெடிக்க வைக்ககூடிய ஆயுதங்களும், பொருட்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.





இது தொடர்பான தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதனை நிரூபிக்க முடியும் எனவும் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.





தாக்குதலை நடத்தவுள்ள குழு எது, அந்த குழுவினர் எங்கு உள்ளனர் என்பது தனக்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளதுடன், இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.





கலபொட அத்தே ஞானசார தேரர் கூறுவது உண்மையெனில், விடயங்களை அம்பலப்படுத்தியதற்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.





இவ்வாறு ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் மேற்படி தகவல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் எவை? தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு இருக்கும்பட்சத்தில் குறித்த நபர்கள் இந்நேரம் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல மேற்படி தகவல்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படவேண்டும்." -என்றார்.





தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு கடந்த திங்கட்கிழமை வழங்கிய நேர்காணலின்போது இலங்கையில் மற்றுமொரு அடிப்படைவாத தாக்குதல் இடம்பெறக்கூடும் என்ற தகவலை ஞானசார தேரர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.