'புதிய அரசமைப்பு விடயத்திலும் தன்னிச்சையாக செயற்படும் அரசு'

banner

புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்திலும் அரசு தன்னிச்சையாக செயற்பட்டுவருகின்றது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடு, தனிப்பட்ட சட்டத்தரணிகள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார்.





எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" புதிய அரசமைப்பு இயற்றப்படும், தேர்தல் முறைமை மாற்றப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள மிக முக்கிய பிரச்சினைகளா இவை?





புதிய அரசமைப்பு பற்றி கதைக்கின்றனர். ஆனால் அதற்கான பணி எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது? உலகிளவில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே இதற்கான பணி இடம்பெறும். எனினும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்குவதுபோல, தனக்கு தேவையான சட்டத்தரணிகளை நியமித்து இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.





ஆலோசனைகளை முன்வைப்பதற்கு எமது கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எமது சட்டத்தரணிகள் சென்றனர். 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி கருத்து வெளியிட வேண்டாம். அதனைவிடுத்து ஏனைய விடயங்கள் பற்றி குறிப்பிடவும் என நிபுணர் குழுவினர் நிபந்தனை முன்வைத்துள்ளனர். எனவே, இவ்வாறு செயற்பட்டால் எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய யாப்பை தயாரிப்பது?





இந்த அரசிடம் குழு வேலைத்திட்டம் இல்லை. தன்னிச்சையான முடிவுகளே எடுக்கப்படுகின்றது. 19 ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது. எனினும், 20 ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. நாட்டில் தற்போது ஏற்பட்டுளள் குழப்பங்களுக்கும் இந்த 20 தான் காரணம்.





ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தோல்வி. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் சுற்றில் தோல்வி. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என தெரியவில்லை. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டினால் மட்டுமே சர்வதேசத்தை வெல்லமுடியும்." - என்றார்.