முன்னாள் போராளிகள் குறித்து இந்தியா விசாரணை

banner

பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தம் செய்யும் சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இந்தியாவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்புக்களை வழங்க தீர்மானித்துள்ளது.





இந்த சம்பவம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக இந்திய தேசிய விசாரணை முகவர் நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடம் ஒத்துழைப்புக்களை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





இந்திய மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் பாதுகாப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம், இந்த கோரிக்கை இந்தியாவினால் எழுத்துமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





இதன்படி, பாதுகாப்பு அமைச்சினால் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ளதாகவும், புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பும் இதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.





எவ்வாறாயினும், இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்க அதிகாரிகளும் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.





பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஆயுதங்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் 6 இலங்கையர்களை இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.





இந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.