லொஹான் மீது குற்ற நடவடிக்கை! கைதிகளுக்குப் பாதுகாப்பான சிறை!!

banner

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் தமக்குப் பாதுகாப்பானது எனக் கருதும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது.





அத்தோடு அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்ற்ச்சாட்டுகள் தொடர்பில் குற்றவியல் நடவடிக்கைகளை உரிய முறையில் எடுத்து, சட்டமா அதிபரின் உரிய கலந்தாலோசனையுடன், அவ்விடயங்களின் விவரங்களை உயர்நீதிமன்றத்துக்கும் தெரியப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுள்ளமையுடன் மேற்படி இடைக்காலக் கட்டளைகளையும் பிறப்பித்தது.





அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற அப்போதைய சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் மண்டியிடச் செய்து, தலையில் கைத் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினார் எனக் கூறப்படுகின்றது.





இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோரின் அனுசரணையுடன் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் காமினி அமரசேகர, யஸந்த கோட்டாகொட, ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.





இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் மனுதாரர்களின் திருத்தப்பட்ட சத்தியப் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராகச் சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் அரசமைப்பின் 11 ஆவது பிரிவின் கீழ் முன் வைக்கப்படுகின்றமையால் அவர்கள் இருவர் சார்பிலும் சட்டமா அதிபரின் பிரதிநிதிகள் எவரும் மன்றில் முன்னிலையாக மாட்டார்கள் என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.





மனுவைப் பரிசீலித்த நீதியரசர்கள், அரசமைப்பின் 11 ஆம் பிரிவின் கீழான சித்திரவதைக்கு எதிரான சுதந்திரம், 12(1) ஆம் பிரிவின் கீழான சமத்துவமாக நடத்தப்படுவதற்கான உரிமை மற்றும் 12(2) ஆம் பிரிவின் கீழான இன, மத, மொழி, சாதி, பாலினம், அரசியல் நிலைப்பாடு, பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தப்படாமல் இருப்பதற்கான் உரிமை ஆகிய பிரிவுகளின் கீழ் மனுவை விசாரணைக்கு ஏற்கின்றனர் என அறிவித்தனர்.





மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் கோரிக்கைகளை விரிவாக ஆராய்ந்த நீதியரசர்கள், அநுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய தடுப்புக் காவல் கைதிகளை அவர்கள் விரும்பினால், விரும்பிக் கோரும் சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அல்லது அநுராதபுரத்தில் இருக்க சம்மதம் தெரிவித்தால் அங்கே இருக்க முடியும் எனவும் பணித்தனர்.





இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பித்து, விரிவான அறிக்கை பெற்று மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.





மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், த.ஜெயசிங்கம் ஆகியோர் முன்னிலையாகினர்.





சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ரஜீவ குணதிலக முன்னிலையானார்.