கைவிரித்தார் கம்மன்பில! இறுதி முடிவு பஸிலின் கைகளில்!!

banner

" உலகில் கடந்த 5 மாதங்களில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படாத ஒரே நாடு இலங்கையாகும். எனினும், எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதா அல்லது இல்லையா என்பது நிதி அமைச்சின் கைகளிலேயே உள்ளது. "- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.





வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" என்னிடமுள்ள தகவல்களின் அடிப்படையில் உலகில் கடந்த 5 மாதங்களில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்காத ஒரே நாடு இலங்கையாகும். குறிப்பாக உலக சந்தையில் கடந்த 5 மாதங்களில் எரிபொருட்களின் விலை 27 வீதத்தால் அதிகரித்துள்ளது.





எமது நாட்டு மக்கள் பொருளாதாரப் பிரச்சினையால் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கக்கூடாது என்பதாலேயே நாம் விலை அதிகரிப்பை செய்யவில்லை. எனினும், எதிர்காலத்தில் அந்த சுமையை மக்களே தாங்கிக்கொள்ள நேரிடும்.





இம்மாதம் பட்ஜட் முன்வைக்கப்படவுள்ளது. எனவே, எரிபொருட்களின் விலையை தீர்மானிக்கும் பொறுப்பு நிதி அமைச்சரிடமே உள்ளது. எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு நிவாரணம் வழங்குவதா அல்லது எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதா அல்லது எரிபொருட்கள்மீதான வரியை குறைப்பதா என்பதனை நிதி அமைச்சரே தீர்மானிக்க வேண்டும்." - என்றார்.





2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.