'பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' - ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகளின் பிரசன்னம் அதிகரிக்குமானால் ரஷ்யா மீது பொருளாதாரத்தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.





தற்போது உக்ரைன்-ரஷ்ய எல்லையில் 94.000 ரஷ்ய படையினர் நிலை கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களாக உக்ரைன்-ரஷ்ய எல்லையில் ரஷ்ய படைகளின் பிரசன்னம் அதிகரித்துள்ளது.





உக்ரைன் தனது எல்லையில் ரஷ்ய படைகளின் பிரசன்னம் அதிகரிப்பது குறித்து ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.





இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பைடன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் வீடியோ மூலமான கலந்துரையாடலில் (video call) ஈடுபட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர்களிடம் பேசிய பைடன் அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து கடுமையான பொருளாதாரத்தடைகளை ரஷ்யா மீது விதிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.





கடந்த வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் புதிய பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் கூறியுள்ளார்.





அடுத்த வருட ஆரம்பத்தில் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படையினரின் எண்ணிக்கையை 1.75.000 ஆக அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியையும் பைடன் எடுத்துக்காட்டினார்.





பிரிட்டனின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி சேர்.நிக் கார்ட்டர் இது பற்றி கூறுகையில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே போர் மூளுவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லையென கூறியுள்ளார் .