இலங்கையின் மனித உரிமை நிலைவரம் - பிரிட்டன் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

banner

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என்று, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் (Lord Tariq Ahmad) தெரிவித்தார்.





அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றும் போதே, அமைச்சர் தாரிக் அஹமட் இதனைத் தெரிவித்தார்.





தெற்காசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் சார்ந்த பொறுப்புகள், லோர்ட் தாரிக் அஹமட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்திவலுத் துறையின் இலக்குகளை அடைவதற்கும் தொழில்நுட்பம்சார் தடைகளை வெற்றிகொள்வதற்கும் உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த லோர்ட் அஹமட், தனது நாட்டுக்குச் சென்றவுடன் இந்த விடயம் பற்றி கூடிய விரைவில் ஆராய்ந்து, அது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.





இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.





இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், லோர்ட் உறுதியளித்தார்.