கோட்டாவின் உரையை விளாசித் தள்ளினார் சிறிதரன் எம்.பி.

banner

" தான் இன்னமும் இராணுவ சிந்தனை வாதத்துக்குள்தான் இருக்கிறார் என்பதையும், நீதியான, நியாயமான வழியில் செல்வதற்கு தயாரில்லை என்பதையுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொள்கை விளக்க உரைமூலம்  வெளிப்படுத்தியுள்ளார்."  - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். 





ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று 2ஆவது நாளாக நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.





ஜனாதிபதியின் உரையை உன்னிப்பாக அவதானித்தோம். தமிழர்கள் என்கிற தேசிய இனத்தின் அடிப்படை அபிலாஷைகளை அவர் தூக்கி கடாசிவிட்டார். குறிப்பாக தன்னுடைய மனதில்கூட அதனை சொல்ல முடியாத தலைவராகவே அவர் இருக்கின்றார் எனவும் ஶ்ரீதரன் எம்.பி. கடும் விசனம் வெளியிட்டார்.





ஓர் நாட்டின் ஜனாதிபதியின் உரையொன்பது, அனைவரையும் அரவணைத்து, ஒன்றிணைக்கும் வகையில் அமைய வேண்டும். ஆனால் ஒரு தலைவனின் உரையாக ஜனாதிபதியின் உரை அமையவில்லை. தன்னுடைய இராணுவ சிந்தனை வாதத்துக்குள், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைக்குள் மட்டும்தான் தன்னுடைய சிந்தனை இருப்பதாகவே அவரது பேச்சு அமைந்துள்ளது எனவும், 





இந்நாடு சீரான பாதையில் நேர்த்தியாக செல்ல வேண்டுமானால், இனப்பிரச்சினை தீரவேண்டுமானால் தன்னுடைய மனதை ஜனாதிபதி முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கூட்டமைப்பு எம்.பி. சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.