பெப்ரவரிக்குள் முடிவை எடுங்கள் - அரசுக்கு ரணில் காலக்கெடு

banner

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் பெப்ரவரி மாதத்துக்குள் அரசு உறுதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளைபிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியவை வருமாறு,





நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய வர்த்தகர்கள், குறைந்த வருமானம் உடையவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.





அரச கடனை எடுத்துக்கொண்டால், 2019 ஆம் ஆண்டில் 13 ஆயிரம் பில்லியன் ரூபாவாக இருந்தது. 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் அது 17 ஆயிரம் பில்லியனாக அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களில் எவ்வாறு இந்த அதிகரிப்பு இட்பெற்றது?





அந்நிய செலாவணி மூலம் கடனுக்காக எதிர்வரும் 6 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் 6 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் இது தொடர்பில் நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா? அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்று வழிகளுக்கு செல்வதா? என்று கேட்கின்றேன். இந்தப் பிரச்சனையை தொடர விட முடியாது. இது தொடர்பாக அமைச்சரவையும் தீர்மானத்தை எடுத்து இந்த நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.





பல வருடங்களாக இருந்த முறைமைகளை நீக்கியமையால் டொலர் நெருக்கடிகள் ஏற்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இல்லாது போயுள்ளது. இதற்கு குறுகியகால, மத்திய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் வேண்டும்." - என்றார்.