அரசியல் 'ஸ்டைலை' மாற்றுமாறு கூட்டமைப்புக்கு அறிவுரை

banner

" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியலால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கவிட்டு, அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்."





இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.





ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று 2ஆவது நாளாக நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த அழைப்பை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" எனக்கு முன்னர் உரையாற்றிய உறுப்பினர் (சிறிதரன் எம்.பி.), தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும், கவனிப்புகள் இல்லை என்ற தொனியிலேயே கருத்துகளை முன்வைத்திருந்தார். கொள்கை விளக்க உரையில் என்ன இருந்தாலும்,சொல்லை விடவும் செயல்தான் சிறந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.





நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு , அனைத்து இன மக்களையும் அரவணைத்து - ஒரு நாடாக சவால்களை எதிர்கொள்வதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசு எதிர்ப்பார்கின்றது. அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமும் ஜனாதிபதிடம் இருக்கின்றது. எனவே, அந்த நடவடிக்கைக்கு நீங்கள் (கூட்டமைப்பு எம்.பிக்கள்) ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதுவே முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றது.





ஆட்சியில் இருக்கும் அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை விமர்சித்துக்கொண்டிருப்பதால் நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கி செல்ல முடியாது. நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும் அதனால் எவ்வித நன்மையும் கிடைக்காது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.





மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் வடக்கு, கிழக்குக்கென தனியான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நீங்கள் (கூட்டமைப்பினர்) நன்றிகூறாவிட்டாலும்கூட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதுகூட அனைத்து இன மக்களுக்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன. எனவே, சரியான விடயங்களை பாராட்டுங்கள். தவறுகள் இருந்தால் விமர்சனங்களை முன்வையுங்கள். அது உங்கள் கடமை. " - என்றார்.